காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது நீண்ட கால காற்று மாசுபாடானது, கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களால் உடல்நல பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
மாசுக் காற்றானது நுரையீரல் பாதிப்பு நோய்களை மோசமாக்கும்.
தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் காற்றின் தரத்தை மேம்படுத்துகின்றன.
காற்று மாசுபாடு நீண்ட கால நுரையீரல் மற்றும் இதய கோளாறுகளுக்கு காரணமாகிறது.
கொரோனா போன்ற சுவாச நோய் தொற்றுகள் காற்று மாசுபாடு உள்ள இடங்களில் இருப்பவர்களிடமும், நகர மக்களிடமும் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
சீனாவில் நடைமுறைப் படுத்தப்பட்ட கடுமையான தனிமைப் படுத்துதலினால் காற்று மாசுபாடு பெருமளவு குறைந்துள்ளது.
வாகனங்களின் பயன்பாடு இல்லாதது மற்றும் தொழிற்சாலைகளின் மூடலே அதற்கு காரணம்.
அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் “சீனாவில் கொரானா வைரஸ் தாக்கத்தினால் சுமார் 3,208 நபர்கள் இறந்துள்ளனர்.
இதனை குறைக்கும் நடவடிக்கையால், குறைந்துள்ள காற்று மாசுபாட்டால் பல்லாயிரக்கணக்கான உயிர்களின் இறப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பொருளாதார இழப்பு, பிற நோய்களுக்கான சிகிச்சை பற்றாக்குறை ஆகியவை கொரானாவால் ஏற்பட்டுள்ள முக்கிய தாக்கம் ஆகும்.” என்று கூறியுள்ளார்.
“நீண்ட கால காற்று மாசுபாடு நாள்பட்ட நுரையீரல் மற்றும் இதய கோளாறுகள் ஏற்பட காரணமாகின்றது.
நுரையீரல் மற்றும் இதய கோளாறுகள் உடைய நோயாளிகள், நுரையீரல் தொற்று நோய்களை எதிர்த்து போராடும் திறனை குறைவாகக் கொண்டுள்ளனர்.
இதுவே கோவிட்-19 வைரஸ் தொற்றிலும் நிகழ்கிறது.”
என்று இத்தாலியின் காக்லியாரி பல்கலைக்கழத்தை சார்ந்தவரும், ஐரோப்பிய சுவாச சங்கத்தின் சுற்றுசூழல் சுகாதாரக் குழுவின் உறுப்பினருமான சாரா டி மேட்டீஸ் கூறியுள்ளார்.
காற்று மாசுபாட்டின் அளவினைக் குறைப்பதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு தொற்று நோய்க்கும் எதிரான போரட்டத்தில் நம்மால் வெற்றி பெற இயலும்.
பழைய கொரோனா காட்டிய எச்சரிக்கை
இதற்கு முன்பு நிகழ்ந்த கொரோனா வைரஸ் தாக்குதலானது, காற்று மாசுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நபர்கள் இறக்கும் அபாயம் அதிகம் என்பதைக் காட்டியுள்ளது.
2003-ல் சீனாவில் நிகழ்ந்த சார்ஸ் கொரோனா வைரஸ் தாக்குதலில், காற்று மாசுபட்டால் பாதிக்கப்பட்ட மக்களின் இறப்பானது, காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படாத மக்களின் இறப்பினை விட இரண்டு மடங்காக இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மெர்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு 2012-ல் சௌதி அரேபியாவில் முதலில் கண்டறியப்பட்டது. புகை பிடிப்பவர்கள் இந்நோயின் தாக்கக்கத்திற்கு ஆளாகி, பெரும்பாலோனோர் இறப்பினைச் சந்தித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கோவிட்-19 தாக்கம் பற்றிய முதன்மையான ஆய்வுகள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் ஏற்கனவே புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி கைவிட்டவர்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
“எனக்கு தெரிந்த வரை கோவிட்-19 வைரஸானது, ஆரோக்கியமான காற்றை சுவாசிப்பவர்கள், புகைக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட, அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், புகைப்பவர்களையே அதிகம் பாதிக்கிறது.” என்று ஹார்வர்ட் டி.எச்.சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் ஆரோன் பெர்ன்ஸ்டைன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கூறியுள்ளார்.
கோவிட்-19 தாக்கிய இத்தாலியின் வடக்குப் பகுதியில் தற்போது காற்று மாசுபாடு குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஜனவரி 25க்கு பிறகு சீனாவில் தனிப்படுத்துதல் மற்றும் எல்லைகள் மூடுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்திய நான்கு வாரங்களில் காற்று மாசுபாடு மிகவும் குறைந்துள்ளது.
ஆபத்தான நுண்ணிய மாசுத் துகளான பி.எம்.2.5, 25 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் முக்கியமாக டீசல் வாகனங்களால் உற்பத்தி செய்யப்படும் நைட்ரஜன்-டை-ஆக்சைடின் அளவு 40 சதவீதம் குறைந்துள்ளது.
“இந்த தூய்மையான காற்றால் சுமார் 1,400 ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும், 51,700 வயதானவர்களும் மரணத்தில் இருந்து தப்பியுள்ளனர். “என்று அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மார்ஷல் பர்க் தெரிவித்துள்ளார்.
“கொரோனா நெருக்கடி முடிந்ததும், கொள்கை வகுப்பாளர்கள், மோசமான காற்றை மாசுப்படுத்தும் வாகனங்களை நீக்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோவிட்-19 போன்ற தொற்று நோய்கள், வருங்காலத்தில் அதிவேகமாக பரவும் தன்மையுடன் தோன்றும் என்று நமக்கு அறிவியல் எடுத்துரைக்கிறது.
சுற்றுசூழலை தூய்மையாக வைப்பதே, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அடிப்படை ஆகும்.” என்கிறார் ஐரோப்பிய பொது சுகாதார கூட்டணியின் பொதுச் செயலாளர் சாச்சா மார்ஷ்சாங்.
நிபுணர்களின் கருத்துப்படி காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும் .
கோவிட்-19 போன்ற தொற்று நோய்களை தீவிரமாக்கும்.
ஆதலால் காற்று மாசுபாட்டினை தடுக்க எல்லோரும் கூட்டாக முயற்சித்து கொள்ளை நோயை ஒழிப்போம்.