காலங்களில் அவள் குறும்படம் இன்றைய இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம்.
போதையின் பாதை எப்படி இருக்கும் என்பதை ஆர்ப்பாட்டமின்றி, ஆரவாரமின்றி நெற்றிப்பொட்டில் அடித்தது போன்று எடுத்துச் சொல்கிறது 9 நிமிடமே ஓடும் இந்தப் படம்.
‘மதுப்பழக்கத்தால் இந்திய அளவில் நிமிடத்திற்கு ஆறு பேர் இறக்கின்றனர்’ என்றும், இதில் பதினெட்டு சதவீதம் பேர் தற்கொலை எனும் விபரீத முடிவை எடுப்பதாகவும் உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் போதைக்கு அடிமை ஆகும் இளைஞர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன’ என்று இந்து தமிழ்திசை நாளேடு (02-ஜனவரி-2022) தலையங்கம் எழுதியுள்ளது.
பெங்களூருவில் மட்டும் 2021-ஆம் ஆண்டில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் 8505 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர்.
இதே பகுதியில் 2015, 2016-ல் ஹெராயின், ஒபீரியன், கஞ்சா, ஹாஷிஸ், மார்ஃபின், எபிட்ரின் உள்ளிட்ட 500 கிலோ எடையுள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது 2022-ல் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் அளவு 2000 கிலோவுக்கு மேல் உள்ளது எனப் பி.பி.சி நியூஸ் தமிழ் செய்திகளோடு கவலை தெரிவித்துள்ளது.
நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்?
சமூகம் எதற்காகத் தன்னை மறந்து மோன நிலைக்குச் செல்ல விரும்ப வேண்டும்?
தன் உடலைக் கெடுத்து, தன் மனதைக் கொடுத்துப் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி எல்லையற்ற பெருவாழ்வின் பயனைக் கெடுத்துக் கொண்டு வாழ்க்கைக்குத் துரோகம் ஏன் செய்கின்றோம்?
பெரியோர்கள் காட்டிய இன்பத்தின் சுவடுகளைத் தொட்டுப் பார்க்காமல், நம்மை அழிக்கும் பவுடர்களைத் தொட்டு நுகர்ந்து இன்பத்தினூடாகப் பெறும் துன்பத்தை விரும்புவதற்கு என்ன காரணம்?
இதற்கெல்லாம் பதில் கூறுவதாகத் தான் காலங்களில் அவள் குறும்படம் வெளிவந்துள்ளது.
காலத்தின் கண்ணாடி இலக்கியம் என்று திறனாய்வாளர்கள் கூறுவார்கள். அதைத்தான் இக்குறும்படமும் செய்துள்ளது,
இலக்கியங்கள் மானுட சமூகத்தை நல்வழிப்படுத்தவே தொடர்ந்து இலக்கியவாதிகளால் எழுதப்பட்டும் திரை ஓவியங்களாக எடுக்கப்பட்டும் வருகின்றன.
மனிதன் சீரழிந்து கிடக்கின்ற பொழுது, குறும்படங்கள் அவனுக்கான நல்வழியைக் காட்டி அழைத்துச் சென்று மகானாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.
குறும்படத்தின் கதை
காலங்களில் அவள் குறும்படம் போதை விழிப்புணர்வுக் குறும்படமாகும்.
போதையின் பாதையைப் படம் பிடித்து, அதன் பாதகத்தை உணர்த்தித் திருந்துவதற்கான வழிவகை கூறுவதாகக் கதை எழுதப்பட்டுள்ளது.
மனிதன் தன் முன் அவதிப்பட்டுத் துன்பப்படும் இன்னொரு மனிதனைக் காணும் பொழுது தான் தனக்குள் திருந்துவதற்கு முயற்சிக்கின்றான்.
தவறு என்று தெரிந்தும் அதை விடுவதற்கு எவ்வித முயற்சியும் செய்யாமல், அதன் வழியே தன்னை ஆட்படுத்திக் கொண்டு, அதற்கு அடிமையாகி விடுகின்றான். அவ்வாறான உளவியல் சிக்கலை இக்குறும்படம் அழகாக எடுத்துக் காட்டி இருக்கிறது.
இக்குறும்படத்தில் வசனங்கள் ஒரு வரி கூட இல்லை. எனவே, கதாபாத்திரங்களின் பெயர்கள் அவர்களுக்கு இடையிலான உறவுமுறைகள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.
கதை ஓட்டம் மட்டுமே கதாபாத்திரங்களின் உறவுமுறைகளையும், செய்திகளையும், கருத்துக்களையும் பார்ப்பவருக்குப் புரியும் வண்ணம் காட்சிகளால் உணர்த்துகிறது.
அக்கா, தம்பி மற்றும் அம்மா இது ஒரு அழகான குடும்பம்.
தம்பி போதைப் பொருளுக்கு முதலில் அடிமையாகிறான்.
அவனைக் கொண்டு வந்து வீட்டில் விடும் சாக்கில், அவனின் அக்காவிற்கும் இப்பழக்கத்தை உண்டாக்குகின்றான் போதை விற்கும் ஆசாமி.
அக்கா மற்றும் தம்பி இருவரும் முழுமையுமாகப் போதை விற்கும் ஆசாமிக்கு அடிமையாகிறார்கள்.
ஒருநாள் போதை இல்லாத பொழுதில், தம்பி தன் அக்காவின் பைத்திய நிலையைக் கண்டு மனம் வாடிப் போய், வீட்டில் உள்ள போதைப் பொருள்களை எல்லாம் கொண்டு போய்த் தூரமாய் எரிக்கின்றான்; மனம் திருந்தி நிற்கின்றான்.
இதுதான் குறும்படத்தின் மையக்கதை.
குறும்படத்தின் சிறப்பு
குறும்படத்தில் நான்கு பேர்கள் மட்டுமே நடித்துள்ளனர்.
தன் குழந்தைகளின் நிலையைப் பார்த்துக் கதறி அழுது பரிதவிக்கும் தாய்.
பணம் சம்பாதிப்பதோடு பெண்களையும் சீரழிக்கும் கொடூரனாகப் போதை விற்கும் ஆசாமி.
இந்த இருவருக்கும் இடையில் அக்கா மற்றும் தம்பி என்னும் இரு குழந்தைகள். தந்தை இல்லாத வீட்டில் கேட்பாரின்றி நுழைந்து விடுகிறது சமூக அரக்கனெனும் போதை.
குறும்படத்தின் வெளிப்பாட்டு உக்தியில் (Expression Strategy) வசனமற்று இருப்பது ஒரு சிறப்பு.
மற்றொரு உக்தியாகச் செஸ் போர்டு கொண்டு சிலேடையாகப் படிமமாகச் சிம்பாலிக்காகக் கதை நகர்வையும், துன்ப நிலையையும் உணர்த்தி இருப்பது இயக்குனரின் நளினமான வெளிப்பாட்டு உக்தியாகும்.
இது போன்ற சில உவமைப்பாடுகள் பார்க்கும் குறும்பட ரசிகரை யோசிக்கச் செய்து, ஒரு இலக்கியத் தரத்தோடு குறும்படத்தை அணுகுவதற்கு வழிவகை செய்யும்.
சோகத்தை, பரிதவிப்பை, தன்னை இழக்கும் இழப்பை, ஏமாறும் மனநிலையைத் தனித்தனியாக இனம் பிரித்து இக்குறும்படத்தில் இசை மிக அற்புதமாக இவற்றையெல்லாம் வெளிப்படுத்தி இருக்கிறது.
கதையின் ஓட்டம் பார்ப்பவருக்கு எளிதில் அதன் மையத்தைக் கடத்தி விட முனைந்திருக்கிறது அற்புதமான இக்குறும்படத்தின் இசை.
நடிகர்களாக நடித்த நான்கு பேரும் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காமல் கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்துள்ளார்கள்.
தாயாகவும், அக்காவாகவும் நடித்த நடிகைகளின் உணர்வு வெளிப்பாடுகள் தேர்ந்த நடிகர்கள் என்பதற்கு உதாரணமாய் இருக்கின்றன.
இயக்குனரின் கதை கூறும் முறை வித்தியாசமாக அமைந்திருக்கிறது.
குறும்படத்தில் ஒன்பது நிமிடங்களுக்குள் எவ்வளவு பெரிய கதையையும் சுருக்கி, மிக அழகாகப் பார்ப்பவர் கண்களில் பயத்தையும், இழப்பையும் நம் குழந்தைகள் இப்படி ஆகிவிடக் கூடாது எனும் எண்ணத்தையும் இயக்குனர் ஏற்படுத்தி இருக்கிறார்.
காட்சி அமைப்புகள் கதையைப் பலப்படுத்தியுள்ளன என்றால் அது மிகையாகாது. இயக்குனரின் சிறப்பாக இவற்றை எல்லாம் கூறலாம்.
முதல் காட்சியில், தம்பி போதையில் தடுமாறி விழும்பொழுது, எதார்த்தமாய் நாய் தெறித்து ஓடும் காட்சி,
அடுத்ததாகத் தாய் முதன் முதலில் நடந்து சென்று செருப்பைக் கழற்றி வாசலுக்குப் பக்கத்தில் போட்டுவிட்டு வீட்டுக்குள் செல்வாள்.
ஆனால் அடுத்த காட்சியில் அவசரத்தில் பதைபதைப்போடு செல்லும்பொழுது, செருப்போடு வீட்டுக்குள் ஓடுவாள்.
இவையெல்லாம் இயக்குனரின் நுண்மையான காட்சி வெளிப்பாடுகளாக உணரலாம்.
எதார்த்தத்தின் வெளிப்பாடுகள் தான் குறும்படத்தின் உயிராக விளங்குகின்றன.
போதைப்பொருள்களுக்கு நெருப்பு வைக்கும் காட்சியில், இசை தவறாகக் கோர்க்கப்பட்டுள்ளது என்பதை தவிர வேறு எந்தக் குறையும் இக்குறும்படத்தில் தென்படவில்லை.
இளைய சமூகத்திற்கு மட்டுமல்ல; அன்பைத் தராமல் பணம், பணம் என்று அலையும் பெற்றோர்களுக்கும் இக்குறும்படம் ஒரு சவுக்கடியாகும்.
இதைப் பார்த்தாவது குழந்தைகளைச் சரியான பாதையில் வளர்க்க பெற்றோர்கள் முன் வர வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.
போதை என்பது இனிதல்ல; இழிவு.
இளைய சமூகம் போதையின் பக்கம் செல்லாமல், பாரதி கூறுவதைப் போல “நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எரிவதுண்டோ?“ எனும் கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டு, நல்ல வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இதுவே இக்குறும்படத்தின் கருத்தாகும்.
விருது
1024 படங்கள் உடன் போட்டியிட்டு அதில் தேர்வான 58 படங்களில் ‘காலங்களில் அவள்’ முதலாவது என்பதற்கான விருதை ஜிஒ (Jio) நிறுவனம் வழங்கி இருக்கிறது .
படக்குழு
ஒளிப்பதிவு: பினிஸ்
படக்கலவை: ஈஸ்வரன்
நடிகர்கள் : ராஜேந்திரி
பிரவீன் பிரபு
பவித்ரா
பாலமுருகன்
கதை , இயக்கம் : வினோத் மலைச்சாமி
வெளியீடு: மார்ச் 2023
காலங்களில் அவள் குறும்படம் பாருங்கள்
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!