காலத்தின் கணக்கு

வயதானவரின் வழுக்கைத்தலை போல ஒரு சாலை. அதில் பள்ளம் மேடு வேறு.

குறுகலான வழியாக இருந்தாலும், கூட்டத்திற்கு ஒன்றும் குறைச்சலில்லை.

வழி நெடுக வாகனங்களின் இடையூறு; மக்களின் நெரிசல்; அதையும் தாண்டி தான் மீன் மார்கெட்டுக்குள் செல்ல வேண்டும். இன்று ஞாயிற்று கிழமை வேறு.

கார்பொரேஷன் பைப்பில் கடைசியாக வரும் தண்ணிபோல, வானம் தூரல் போட்டுக் கொண்டிருந்தது.

முனியாண்டி சைக்கிளில், நூல் சாக்கில் வைத்திருந்த ஐஸ் கட்டி மூட்டையை, சைக்கிளின் கேரியரில் கட்டிக் கொண்டிருந்தான்.

மாரியம்மாளின் சத்தம் மட்டும் கேட்டது முனியாண்டிக்கு.

“யோவ், சீக்கிரம் போய் மூட்டையை இறக்கி வச்சிட்டு வா, யாவார நேரம், கூட்டமா இருக்கு, தங்கச்சிக்கு உதவி பண்றேன்னு அங்க போய் குந்திகிட்டு இருக்காத!”

தலையை மட்டும் ஆட்டிவிட்டு, சைக்கிளை தள்ளிக் கொண்டு ஏறினான்.

மூன்று தெரு தள்ளி, ஒரு மீன் கூடை வைத்துக் கொண்டு அவனது தங்கை இருந்தாள். அவளுக்கு தான் ஐஸ் மூட்டையை கொடுக்க முனியாண்டி சென்றான்.

சைக்கிளில் ஏறிவிட்டால், ஏதோ புல்லட்டில் பறப்பது போல இருக்கும் முனியாண்டிக்கு.

அது மட்டுமில்லை, இன்று கணிசமா கல்லா கட்டும், மதியத்துக்கு மேல் புல் மூடில் இருப்பான் முனியாண்டி.

எல்லாம் நம்ம டாஸ்மாக் இருக்கிற புண்ணியத்தால் ஏதோ அப்பப்ப கொஞ்ச நேரத்துக்கு சொர்க்கத்துக்கு போயிட்டு வரமுடியுது.

இந்த ஏழை மக்களைச் சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போகதான சர்க்கார் மூலைக்கு மூலை கடையை தொறந்து வச்சிருக்கு.

இவுங்களுக்குன்னு எந்த ஒரு பெரிய லட்சியமெல்லாம் இல்ல. உழைக்கணும், சாப்பிடணும், இருக்கிறத வச்சி சந்தோஷமா இருக்கனும். அவ்வளவுதான்.

எதையும் சேத்து வச்சி, பெரிய ஆளுன்னு காட்டிக்கிற ரகமெல்லாம் இல்ல. விடிஞ்சா வேல; பொழுது முடிஞ்சா போதை. அவ்வளவுதான்.

ஆனா கவர்மெண்ட் மட்டும், ஒரு கணக்கு போட்டு வச்சிருக்கும், பட்ஜெட்டுக்கு பணம் சேக்கிறதுக்குன்னு ஒரு கூட்டம் தேவைப்படும், அதுக்கு, இவங்கள பயன்படுத்திப்பாங்க .

இலவசமா வேட்டி, சேலை, அப்பப்ப ஆயிரம், ஐந்நூறு கொடுப்பாங்க. நாள் வட்டிக்கு பணம் குடுக்கிற தவணைக்காரன் மாதிரி டெய்லி டாஸ்மாக்ல வசூலிப்பாங்க.

மொத்தத்துல இவங்கள பொருளாதார ரீதியா பேலன்ஸாவே வச்சிருப்பாங்க. கடைசிவரைக்கும் மேல போகவே முடியாது.

முனியாண்டியின் சைக்கிள் மெல்ல, வலதுபக்கம் திரும்பியது.

இடது பக்கம் சென்றுதான், அடுத்த ரோட்டிற்கு செல்ல வேண்டும். அப்படி போனால், கொஞ்ச தூரம் போய்த்தான், அடுத்த ரோட்டிற்கு வர வேண்டும்.

அதற்கு நேரம் ஆகும் என்பதால் குறுக்கு வழி அதுவும் ஒருவழி பாதை.

சைக்கிளுக்கு என்ன, ஒருவழி பாதை, இருவழி பாதை என்று திரும்பியவன் எதிர்பாராமல் எதிரே வந்த டூ வீலரின் மேல் மோதிவிட்டான்.

வந்தவர் சற்றே தடுமாறி விட்டார். வண்டி கீழே விழாமல் சுதாரித்தது கொண்டாலும் லேசான அடிபட்டுவிட்டது.

கீழே விழுந்த முனியாண்டிக்கு கை கொடுக்க கூட ஆளில்லை. ஆனால், டூ வீலரை சுற்றி கூட்டம் கூடிவிட்டது.

கூட்டத்திலிருந்து ஏகப்பட்ட அதிகார தோரணையான பேச்சுக்கள், புத்திமதிகள், அறிவுரைகள், அதிகார தோரணையில், என்று பல்வேறு விதமான வார்த்தைகள் முனியாண்டிமேல் அள்ளி தெளித்தனர்.

இதையெல்லாம் கேட்ட பின்பு, டூ வீலரில் வந்தவருக்கு வீரம் வருமல்லவா! அவரும் பேச ஆரம்பித்தார்.

“டேய் அறிவு இருக்கா, ஒன்வே ல வர, குடிகார பயல, காலைலே குடிச்சிட்டு சைக்கிளை ஓட்டுறியா, இல்ல பிளைட் ஓட்டுறியா, இவ்வளவு வேகமா வந்து மோதுற”.

முனியாண்டி பொதுவாவே மோடுமுட்டி, சட்டுன்னு கோவம் வரும். இருந்தாலும், இப்போ, இந்த நேரத்துக்கு, கோவம் வரல.

“தெரியாம நடந்திடுச்சி, போங்க”.

“என்னடா போங்க?”

“அப்போ இருங்க, நான் போறேன்!”

“டேய், என் தகுதி என்ன? அந்தஸ்து என்ன? நான் ஒரு மாசம் செலவு பன்றத நீ, ஆயுள் முழுக்க சம்பாரிக்க முடியாது. எனக்கு சரிக்கு சமமா பேசுற!”

“சரிங்க, நான் பிச்சைக்காரன் தான், நீங்க கோடீஸ்வரன், ஆளவிடுங்க” பட்டென்று சைக்கிளை சரி பண்ணிக் கொண்டு கிளம்பினான் முனியாண்டி.

மாரி கடையின் முன் சற்று கூட்டம் கூடத் தொடங்கியது.

மீன் மார்க்கெட்டிலேயே கொஞ்சம் நியாய, தர்மத்துடன், மீன் வியாபாரம் செய்பவள். வருபவர்களுக்கு ஏற்றாற்போலவும் பேசி, வியாபாரம் செய்வாள்.

“ஏம்ப்பா! நூறு ரூபாய்க்கு எப்படி நாலு மீனு வரும்?”

“குடும்மா! எப்பவும், உன்கிட்ட தான வாங்குறேன். காசு இருந்தா கூட கொறச்ச வாங்க மாட்டேனா!”

மாரி, அவரின் முகத்தை பார்த்தாள். அழுக்கான, கசங்கிய சட்டை, பழைய கைலி.

“போனவாரம், அம்பது ரூபா பாக்கி வச்சிட்டு போன, இப்ப வந்து 200 ரூபா மீனா, 100 ரூபாய்க்கு கேக்குற”,

“இல்லம்மா, ரெண்டு நாளா, வேல, வெட்டி எதுவும் இல்ல, பேர பசங்க ஊர்லேர்ந்து வந்திருக்காங்க, நீ, குடு, அடுத்த தடவ சேர்த்து தாரேன்”

“சரி, சரி, எடுத்திட்டு போ. அரிஞ்சி குடுக்க ஆள் இல்ல, அவரு வெளிய போயிருக்காரு. அடுத்த தடவ வந்தா 100 ரூபா குடுக்கணும்”,

“உனக்கு எவ்வளவு போட?”

“வஞ்சிரம் இருக்கா?”

“ம்ம், இருக்கு, ஆனா வெல கூட, பரவா இல்லியா”

“எவ்வளவு கிலோ?”

“700 ரூபா!”

“500 ரூபா போட்டுக்க!”

“எப்பா! போய் அக்கம் பக்கம் விசாரிச்சிட்டு வா”

“அதெல்லாம் விசாரிக்க வேணாம், நீ சொல்லி குடு”

“ஒரே விலைதான்”

“சரி, 100 ரூபா சேர்த்து தாரேன்”

“அதெல்லாம் முடியாது, நீ என்ன, பிச்சையா போடுற, அம்பது நூறுன்னு”

“ஏம்மா! நீ, 700 சொன்ன, நான் 600 தரேன்னு தான சொல்றேன். அப்புறம் என்ன, 100 ரூபாயெல்லாம் பாக்காத போட்டு குடு”

“ஏம்பா, வெள்ளையும், சொள்ளையுமா இருக்கிற, ஒரு 100 ரூபாய்க்கு இம்மாம் பேச்சு பேசுற, காசு இல்லாட்டி சொல்லு, பிரீயா தாரேன் வாங்கிட்டு போய் தின்னு, சரி, ஒரு அம்பது ரூபா சேர்த்து குடு”

“வெட்டி குடு”

“அதுக்கு அம்பது ரூபா வேணும், தருவியா?”

“நீ ஒரு இருபது ரூபா வாங்கிக்க”

“உன்னோட பெரிய ரோதனையா போச்சி, அவருகிட்ட குடு. அவரு எவ்வளவு கேக்குறாரோ, குடுத்து வெட்டிட்டு போ”

“ஏம்ப்பா! இத வெட்டி குடு, எவ்வளவு ஆகும்?”

“50 ரூபா!”

“20 வாங்கிக்க!”

“இல்லங்க, 100 ரூபாய்க்கு மீனு வாங்கினா, வெட்டு கூலி 10 ரூபா. நீங்க, எவ்வளவுக்கு வாங்குனீங்க?”

“500 ரூபாய்க்கு”

“எது, இத 500 ரூபாய்க்கு, அதுவும் என் பொண்டாட்டிகிட்ட”

சொல்லிக்கொண்டே மீனை கொடுத்தவரை இப்போது தான் திரும்பி பார்க்கிறான் முனியாண்டி.

அட என்ன ஆச்சர்யம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீர வசனம் பேசுன, டூ வீலர் பார்ட்டி, நக்கலா ஒரு சிரிப்பு சிரித்தான் முனியாண்டி.

அங்கு கம்பீரமா பேசுன அந்த முகம், சற்று வெளிறிப் போய் இருந்தது.

“650 ரூபாய்க்கு அரைமணிநேரம் சண்டை போட்டு வாங்கியாந்திட்டு, ஒரு 50 ரூபா குடுக்க பொய் சொல்லுறீங்களே!

காசு இல்லாட்டி பரவாயில்ல, சும்மாவே வெட்டி தாரேன் எடுத்திட்டு போங்க.

எங்களை மாதிரி கஷ்டப்பட்டு உழைச்சி பத்து காசு சம்பாரிக்கணும்னு நெனைக்கிறவங்களை, ஏமாத்திடாதீங்க.

அப்படி கொஞ்ச, கொஞ்சமா பணத்த சேர்த்து என்னை மாதிரி ஏழைகிட்ட உங்க வசதிய காட்டவா?”

யாரிடம் பணக்கார திமிரை காட்டினோமோ அவரிடமே வந்து அசிங்கப்பட வேண்டியதை எண்ணி செய்வதறியாமல் நின்றவருக்கு இறந்து போயிருந்த மீன் சிறந்த பாடத்தை புகட்டியிருந்தது.

பொய்கை கோவி அன்பழகன்
மயிலாடுதுறை

Comments

“காலத்தின் கணக்கு” மீது ஒரு மறுமொழி

  1. […] காலத்தின் கணக்கு உறவுகள் […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.