காலமெனும் நதியினிலே

காலம் – மூலமும் முடிவும் தெரியா நதி

நிலைமாறும் உலகில் நிலைத்திருக்கும்

அழிவின்றி என்றும் அசைந்திருக்கும்

யாருக்கும் கட்டின்றி யாவரையும் ஆட்டுவிக்கும்

ஆறாக்காயத்தின் அருமருந்து 

 

படகுகள் ஏராளம் பயணமும் தாராளம்

இடையிலே சேர்ந்து இடையிலேயே முடியும்

இதில் எல்லாப் பயணமும் ஆயினும்

பயணங்கள் பலவிதம் படகுகளும்

 

நதியின் வேகத்தை விஞ்சிப் பறக்கும் ஒருசில

நதியின் திசைவிடுத்து எதிர்ப்புறம் செல்லும் ஒருசில

கட்டின்றிப் போகின்ற போக்கில் போகும் பல

கட்டிட்டு எங்கும் நகராமல் கலக்கத்தில் சில

 

நேராக ஓடுவதில்லை நதி

ஓடங்களும் ஒழுங்காய்ச் செல்வதில்லை

பாறைகள் பலவுண்டு வழியில்

பாதியில் முடிவதுண்டு பயணங்கள்

 

எங்கே போகிறோம் எதற்குப் போகிறோம்

பயணத்தின் நோக்கம் புரிபடவில்லை

ஆனாலும் தொடரும் பயணம் முடியும் வரை

நம்மால் முடிந்தது அதுதானே

 

படகுகள் ஏராளம் பயணமும் தாராளம்

இடையிலே சேர்ந்து இடையிலேயே முடியும்

இதில் எல்லாப் பயணமும் ஆயினும்

பயணங்கள் பலவிதம் படகுகளும்

– வ.முனீஸ்வரன்