அவளை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
ஆம். ஆசை ஆசையாய் காதல் செய்து, ஆயிரம் ஆயிரம் கதைகள் பேசி, ‘வாழ்க்கையில் இப்படியொரு வாழ்க்கை யாரும் வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்பதுபோல வாழ வேண்டும்’ என்றெல்லாம் கட்டிய கற்பனை கோட்டை கட்டினார்கள்.
திடீரென்று அவள் இன்னொருவர் மனைவி என கழுத்தில் தாலியுடன் பார்த்ததும் நிலையில்லாமல் தவித்துப் போய் அவன் எங்கோ தொலைவில் தொலைந்து போனான்.
அவளோ வாழ்க்கை சூழலில் சிக்குண்டு ஆலைக்கரும்பு போல் மனக்குமுறலை மாற்றார் அறிந்திராத வண்ணம் மாற்றான் தோட்டத்து மல்லிகை ஆனாள்.
செடியில் மலர்ந்தும் செடிக்கென்ன மலரிடத்தில் உரிமை? பூவிற்குள் இருக்கும் தேன், தேனிக்கல்லவோ உரிமை. அப்படித்தான் வாழ்க்கை அவளை இழுத்துச் சென்றது.
காலங்கள் கரைந்து, கனவுகள் மறைந்து, நினைவுகளில் நின்றாடினர் இரண்டு மகள்களும். காதலனையும் காணாமல் போகச் செய்தது அவள் கணவனின் காதல் மொழியும் காட்டிய அக்கறையும்.
எழில் கொஞ்சும் வீடும் இயற்கை நேசமும் அவன் வாசம் மாறா சுற்றமும் மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருந்தாள்.
அடுப்படி வேளைதனில் அழைப்பு மணி ஓசை கேட்டு ஓடிப்போய் கைபேசி எடுத்தாள். காதல் வழிய வழிய அவளன்பன் “சற்று நேரத்தில் தயாராக இரம்மா. திரைப்படம் பார்க்க அழைத்துச் செல்ல வருகிறேன்” என்றான்.
‘கட்டாணி முத்தழகன் கட்டாயம் குறித்த நேரத்தில் வந்து விடுவானே!’ என்று பரபரப்பாய் தயாரானாள்.
ஆடிப் பாவையும் பூவை மீது காதல் கொள்ளும் கொள்ளை அழகி. கொஞ்சும் கிளியும் கெஞ்சி நிற்கும் இவள் மொழிகையில். பிஞ்சுப் பாதம் படர்கையில் பஞ்சும் தோற்றுப் போகும்.
பார்க்கும் பார்வையில் பாதம் தோய்க்கும் அலைகடலும் வருணனைக்கே வர்ணம் பூசும் அந்த மாயக்காரி மார்பிலடித்துக் கொண்டு அழுவாள் என்றறிந்திருந்தால் மறைந்தே போயிருப்பான் பகலவனும். மறித்தே போயிருக்கும் பகல் பொழுதும்.
ஆம்! புறப்பட்ட வேளைதனில் யார் கண்தான் பட்டதோ? அந்தோ பயங்கர விபத்தில் சிக்கி மாண்டே போனான். இரு சக்கர வாகனம் வர காத்து நின்றவளுக்கு, நான்கு சக்கர வாகனம், ஆம்புலன்ஸ் சத்தம் நெஞ்சைப் பிளந்தது.
தீக்குள் இறங்கி நடுக்கடலில் தத்தளித்த அவளின் உணர்வுகளை சொல்லவும் கூடுமோ? மகள்களைப் பெற்ற மகராசி இழந்து போன முகராசி. யாரறிவார் அவள் உணர்வுகளை?
ஆனாலும் அவள் சிப்பிக்குள் முத்து. சிந்தையில் தெளிவு. ஆக்கச் சிந்தனை கொண்ட சிங்கப்பெண். அவளின் குட்டி சிங்கங்கள் முழங்கிச் சொல்லும் அவள் பெருமை.
காலங்கள் கடந்தன. காயங்கள் தொடர்ந்தன. ‘இனி எப்போதும் பார்த்து விடக் கூடாது’ என்று எண்ணியவரைக் கண்டிட்டாள்.
முதல் காதலாயிற்றே மனக்குமுறலை முழுவதுமாய் கொட்டி விட்டாள் காதலுக்காக அல்ல; காயங்களைக் காண்பிக்க.
அவள் நிறைந்து விட்டாள். அவனோ குறைந்து விட்டான். அவளை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
காலம் செய்த கோலம்.
மாலை சேர்க்க உதவுமோ?
முறையாகுமா!
முடிவு வாசகர்கள் கருத்துக்கு.
சுகன்யா முத்துசாமி
மறுமொழி இடவும்