காலம் மாறும் போது

காலம் மாறும் போது

காலம் மாறும் போது ஒவ்வொருவரும் தங்களுடைய நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.

கடின முயற்சியினை உடையவர்கள் காலத்தின் மாற்றத்தினால் முயற்சியில்லாதவர்களாக மாறி விடுகின்றனர். இதனையே இக்கதை விளக்குகிறது. வாருங்கள் கதை பற்றிப் பார்ப்போம்.

முறப்பநாடு என்ற நாட்டினை சூரசேனன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். ஒரு நாள் சூரசேனனும் அவனுடைய அமைச்சருமான வீரசேனனும் நாட்டில் உள்ள குடிமக்களை நேரில் பார்த்து வரவேண்டும் என்று எண்ணி மாறுவேடத்தில் நாட்டிற்குள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்விருவரும் வயல்வெளி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயியைப் பார்த்தனர். அவ்விவசாயியின் கால் அருகில் நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்தது.

அதனைக் கண்டதும் பதறிப்போய் சூரசேனன் விவசாயியிடம் “உங்கள் கால் அருகே பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்தது. விலகி ஓடுங்கள்.” என்று கத்தினர்.

அவர்கள் இருவரும் கூறியதைக் கேட்டதும் சடாரென்று திரும்பிய விவசாயி பாம்பினைக் கையால் பிடித்து தூக்கி எறிந்தான். விவசாயியின் செயலைக் கண்டதும் சூரசேனன் அதிர்ந்தான்.

சூரசேனன் விவசாயிடம் “பாம்பைப் பயமில்லாமல் எப்படி தூக்கி எறிந்தீர்கள். பாம்புகள் நிறைந்த இவ்விடத்தில் வேலை செய்யும் உங்களுக்கு உயிர் பயம் இல்லையா?” என்று கேட்டான்.

விவசாயி சூரசேனனிடம் “அரசே, நான் கூலிக்காக விவசாயம் செய்பவன். நான் பாம்புக்கு பயந்து வீட்டில் இருந்தால் யார் என்னுடைய குடும்பத்தினருக்கு உணவளிப்பர்?” என்று கேட்டான்.

விவசாயி கூறியதைக் கேட்டதும் சூரசேனன் அவனுக்கு விவசாயம் செய்ய நிலபுலங்களையும், பரிசு மற்றும் உணவுப் பொருட்களைக் கொடுத்தான். விவசாயியும் சந்தோசமாகப் பெற்றுக் கொண்டான்.

சிறிது காலம் சென்றது. சூரசேனன் தன்னுடைய அமைச்சரான வீரசேனனுடன் மீண்டும் நாட்டு மக்களைச் சந்திக்கச் சென்றான்.

நிலங்களைப் பரிசளித்த விவசாயியை அரசனான சூரசேனன் காண விரும்பினான். இருவரும் விவசாயியைச் சந்திக்க அவனுடைய கிராமத்திற்குச் சென்றனர்.

அங்கே விவசாயி கையில் கட்டுப் போட்டு உட்கார்ந்திருந்தான். அரசனை அடையாளம் கண்டதும் அவனை விவசாயி வணங்கினான்.

சூரசேனன் விவசாயிடம் “என்ன உன் கையில் கட்டுப்போட்டுள்ளாய்?” என்று கேட்டான்.

அதற்கு விவசாயி “என்னுடைய கையில் முள் குத்தி விட்டது. வைத்தியரிடம் சென்று கட்டுப்போட்டுள்ளேன். வைத்தியர் என்னை இருவாரங்களுக்கு ஓய்வு எடுக்கச் சொன்னார். ஆதலால் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன்.” என்றான்.

அரசனும் அமைச்சரும் அவ்விடத்தை விட்டு அகன்றனர். அப்போது சூரசேனன் வீரசேனனிடம் “இந்த விவசாயி அன்றைக்கு கொடிய நஞ்சு பாம்பிற்கு அஞ்சாமல் சாதாரணமாக தூக்கி எறிந்து விட்டு வேலையைப் பார்த்தான்.

இன்றைக்கு சிறுமுள் குத்தியதற்காக கையில் கட்டுப்போட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான். இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதே?” என்று கேட்டான்.

அதற்கு வீரசேனன் “அரசே, அன்றைக்கு விவசாயி உணவிற்கே கஷ்டப்பட்டான். ஆதலால் தன்னுடைய வேலைக்கு தடையானவற்றை துச்சமாக கருதி செயல்பட்டான்.

இன்றைக்கு அவன் உணவிற்கு கஷ்டப்படவில்லை. ஆதலால் சிறுதடையும் பெரிதாகத் தெரிகிறது. காலம் மாறும் போது எல்லாம் மாறிவிடும்” என்று கூறினான்.


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.