காலிபிளவர் பெப்பர் கிரேவி செய்வது எப்படி?

காலிபிளவர் பெப்பர் கிரேவி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும்.

இது சப்பாத்தி, தோசை, காளான் பிரியாணி மற்றும் சீரக சாதம் போன்றவைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஹோட்டல் சுவையில் இருக்கும் இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

தற்போதைய சீசனில் காலிபிளவர் மலிவான விலையில் கிடைப்பதால் இதனை அடிக்கடி செய்து உண்ணலாம்.

இனி சுவையான காலிபிளவர் பெப்பர் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

காலிபிளவர் பூ – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)

இஞ்சி – ஆட்காட்டி விரல் அளவு

வெள்ளை பூண்டு – 3 பற்கள் (பெரியது)

தக்காளி – 2 எண்ணம் (பெரியது)

கொத்தமல்லி பொடி – 2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – 1 ஸ்பூன்

மஞ்சள் பொடி – 2 டீஸ்பூன்

தேங்காய் – ‍ 1/4 மூடி (சிறியது)

கொத்த மல்லி இலை – 2 கொத்து

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

பெருஞ்சீரகம் ‍- 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

வறுத்து பொடிக்க

மிளகு – 1 ஸ்பூன்

பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்

செய்முறை

காலிபிளவரை சுத்தம் செய்து இதழ்களாக பிய்த்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதித்ததும் அடுப்பினை அணைத்து விட்டு, அதில் இதழ்களாக பிய்த்த காலிபிளவர்களைச் சேர்க்கவும்.

காலிபிளவர் இதழ்களைச் சேர்த்ததும்

பத்து நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு, பின்னர் காலிபிளவர் இதழ்களை வெளியே எடுத்து விடவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

இஞ்சி மற்றும் வெள்ளைப்பூண்டினை தோலை நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காயை விழுதாக்கிக் கொள்ளவும்.

மிளகினையும், சோம்பினையும் வெறும் வாணலியில் போட்டு, அடுப்பினை சிம்மில் வைத்து வாசம் வரும்வரை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.

மிளகினையும் சோம்பினையும் வறுக்கும் போது

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருஞ்சீரகத்தைச் சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்ததும்

அதில் பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்ததும்

வெங்காயம் கண்ணாடிப்பதம் வந்ததும் அதில் இஞ்சி மற்றும் பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி மற்றும் பூண்டு விழுதினைச் சேர்த்ததும்

வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்து வதக்கும் போது

இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் வற்றல் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பொடி வகைகளைச் சேர்த்ததும்

ஒரு நிமிடம் கழித்து அதில் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விடவும்.

கொதிக்கும் போது

பொடிகளின் பச்சை வாசனை நீங்கிக் கெட்டியானதும், அதில் வெந்நீரில் சேர்த்து எடுத்த காலிபிளவர் இதழ்களை சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

காலிபிளவர் இதழ்களைச் சேர்த்ததும்

பின்னர் அதில் நறுக்கிய பாதி கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து வதக்கவும்.

அதில் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்பின் அளவினைச் சரிபார்த்து மூடி வைத்து அவ்வப்போது கிளறி விடவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்தால் தண்ணீர் கிரேவி பதத்தில் இருக்கும்.

கிரேவி பதத்தில்

இப்போது காலிபிளவர் வெந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளவும். காலிபிளவர் வேகவில்லை எனில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதேநேரத்தில் காலிபிளவர் குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

காலிபிளவர் வெந்ததும் அதில் அரைத்த தேங்காய் விழுதினைச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

தேங்காய் விழுதினைச் சேர்த்ததும்

ஒரு நிமிடம் கழித்து அதில் பொடித்த மிளகு பெருஞ்சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி அடுப்பினை அணைத்து விடவும்.

மிளகு பெருஞ்சீரகப் பொடியைச் சேர்த்ததும்

மீதமுள்ள கொத்தமல்லி இலையைத் தூவி கிளறி இறக்கவும்.

சுவையான காலிபிளவர் பெப்பர் கிரேவி தயார்.

சுவையான‌ காலிபிளவர் பெப்பர் கிரேவி

குறிப்பு

காலிபிளவரை தேர்வு செய்யும்போது இதழ் கெட்டியாக இருப்பதைத் தேர்வு செய்யவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.