காலிபிளவர் ரோஸ்ட் என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். இது எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். இனி சுவையான காலிபிளவர் ரோஸ்ட் செய்வது பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காலிபிளவர் – 1 எண்ணம் (நடுத்தர அளவு)
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)
தக்காளி – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
மசாலா பொடி – 1½ ஸ்பூன்
கொத்த மல்லி பொடி – ¾ ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்த மல்லி இலை – 2 கொத்து
தாளிக்க
சின்ன வெங்காயம் – 1 எண்ணம் (நடுத்தரமானது)
கடுகு – ½ ஸ்பூன்
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
காலிபிளவர் ரோஸ்ட் செய்முறை
முதலில் காலிபிளவரை சிறுசிறு இதழ்களாக பிய்த்துக் கொள்ளவும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்து இறக்கி அதில் இதழ்களாகப் பிய்த்துள்ள காலிபிளவர்களைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் மூழ்க வைத்து வெளியே எடுத்து விடவும்.
தக்காளியை அலசி மிக்ஸியில் போட்டு சாறாக்கிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோலுரித்து நேராக வெட்டிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுகளாக்கவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
கொத்த மல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெந்நீரிலிருந்து வெளியே எடுத்த காலிபிளவருடன் கொத்தமல்லிப் பொடி, மசாலாப் பொடி, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மூன்று நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.
பின்னர் மசாலா தண்ணீரிலிருந்து காலிபிளவரை தனியே எடுத்து வைத்து விடவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின்னர் அதனுடன் நேராக வெட்டிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் மசாலாத் தண்ணீரைச் சேர்க்கவும்.
அதனுடன் கரம் மசாலா மற்றும் தக்காளிச் சாறினைச் சேர்த்து கொதிக்க விடவும்.
மசால் வாடை நீங்கி தண்ணீர் குறைந்ததும் அதனுடன் காலிபிளவரைச் சேர்த்துக் கிளறவும்.
கலவை நன்கு கெட்டியானதும் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கி விடவும். சுவையான காலிபிளவர் ரோஸ்ட் தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் தக்காளிச் சாறினைச் சேர்க்கும்போது உணவு நிறமூட்டி சேர்த்து காலிபிளவர் ரோஸ்ட் தயார் செய்யலாம்.