கோபி மஞ்சுரியன் தயார் செய்ய பயன்படுத்தப்படும் காலிபிளவர் காயை யாரும் அறியாமல் இருக்க முடியாது.
ஏனெனில் இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணக் கூடிய பொருளாக காலிபிளவரிலிருந்து தயார் செய்யப்படும் கோபி மஞ்சுரியன் உள்ளது.
இதற்கு தமிழில் பூக்கோசு என்ற பெயரும் உண்டு. இது குளிர்காலத்தில் அதிக அளவில் கிடைக்கக் கூடிய காய் வகையாகும்.
இதன் தாவரவியல் பெயர் ப்ராசிகா ஒல்லேரிசா என்பதாகும்.
காலிபிளவர், முட்டைக்கோசு, களைக்கோசு (brussel sprouts), பரட்டைக்கீரை (kale), பச்சைப்பூகோசு (broccoli), சீமை பரட்டைக்கீரை (Collard greens) ஆகியவை ப்ராசிகாசி என்ற குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனங்களாகும்.
காலிபிளவரானது குளுமையான தட்ப வெப்பத்தில் (பகல் வெயில் 21 முதல் 29 டிகிரி செல்சியஸ்) வளம் மற்றும் போதுமான ஈரப்பதம் உள்ள மண்ணில் நன்கு விளைகிறது. அதிக வெப்பம் மற்றும் அதிக குளிரில் இது பயிராவதில்லை.
ஓராண்டுத் தாவர வகையான இது விதைகள் மூலம் பயிர் செய்யப்படுகின்றது. இத்தாவரத்தில் பூப்பகுதி தோன்றியவுடன் அதனை வெயில் படாதவாறு இலைகளால் மூடிவிடுகின்றனர். இதனால் பூப்பகுதி நிறமாற்றம் அடைவதும், உலர்வதும் தடுக்கப்படுகிறது.
காலிபிளவரில் சிறுபூக்கள் காம்புகளுடன் கொத்தாக ஒரு மையத் தண்டில் இணைக்கப்பட்டிருக்கும். மையத்தண்டிலிருந்து பூப்பகுதியை மூடியவாறு இலைகள் காணப்படுகின்றன. இது பார்ப்பதற்கு மூளை போன்ற அமைப்பில் இருக்கும்.
காலிபிளவரானது பயிர் செய்து 7 முதல் 12 வாரங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
காலிபிளவரின் தாயகம் பழைய ஆசிய பகுதியாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கிபி 600-ஆம் ஆண்டில் மத்திய தரைக்கடல், துருக்கி, இத்தாலி போன்ற இடங்களில் இக்காய் பரவத் தொடங்கியது.
16-ஆம் நூற்றாண்டில் இதன் பயன்பாடு பிரான்ஸ் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது இந்தியா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் உலகில் அதிக அளவில் காலிபிளவரை உற்பத்தி செய்கின்றன.
பொதுவாக காலிபிளவர் வெள்ளை நிறத்தில் இருந்தாலும் பச்சை, ஆரஞ்சு, கருநீலம் ஆகிய நிறங்களிலும் காணப்படுகின்றன.
குறைந்த அளவு எரிசக்தியுடன் அதிக அளவு ஊட்டச்சத்துகளை கொண்ட உணவுகள் பட்டியலில் இது 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.
காலிபிளவரில் உள்ள சத்துக்கள்
காலிபிளவரில் விட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் விட்டமின் கே, இ, பி1(தயாமின்), பி2(ரிபோஃளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் போன்றவைகள் காணப்படுகின்றன.
மேலும் இதில் மின்பகுபொருட்களான பொட்டாசியம் அதிகளவிலும், சோடியம் குறைந்த அளவிலும் காணப்படுகின்றன.
தாதுஉப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம் ஆகியவைகள் காலிபிளவரில் காணப்படுகின்றன.
மேலும் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்து, பைட்டோநியூட்ரியன்களான லுடீன் ஸீஸாக்தைன், பீட்டா கரோடீன் ஆகியவையும் காணப்படுகின்றன.
காலிபிளவரின் மருத்துவப் பண்புகள்
புற்றுநோயைத் தடுக்க
காலிபிளவரில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் உடலுக்கு உறுதியைத் தரும் சேர்மங்களான சல்ஃபரோபேன் மற்றும் ஐசோதியோசயனைட்டுகள் (இண்டோல் 3-கார்பினால்) ஆக மாற்றம் அடைகின்றன.
இச்சேர்மங்கள் புற்றுசெல்களின் வளர்ச்சியை தடைசெய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலிபிளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் நுரையீரல், மார்பகம், சிறுநீர்பை, சிறுநீர்தாரை, கருப்பை, கருப்பைவாய் போன்ற உடலின் பாகங்களில் வரும் புற்றுநோய்களைத் தவிர்க்கலாம்.
பலமான எலும்புகளைப் பெற
விட்டமின் சி-யானது எலும்புகள் மற்றும் தசைகளின் இணைப்பிற்கு காரணமான கொலாஜன்கள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த கொலாஜன்கள் மூட்டுகள் மற்றும் எலும்புகளை அழற்சிநோயிலிருந்து பாதுகாக்கிறது.
எனவே விட்டமின் சி அதிகம் உள்ள காலிபிளவரை அதிகம் உண்டு எலும்புகள் மற்றும் மூட்டுகளைப் பாதுகாக்கலாம்.
மேலும் இக்காயில் காணப்படும் விட்டமின் கே-யானது ஆண் மற்றும் பெண்களில் எலும்புகளின் உறுதியைப் பாதுகாக்கிறது.
கண்களின் பாதுகாப்பிற்கு
காலிபிளவரில் காணப்படும் விட்டமின் -சியானது கண் தசைஅழற்சி நோயைக் குணப்படுத்துகிறது. காலிபிளவரில் உள்ள சல்ஃபரோபேன் ரெட்டினல் தசை அழற்சியால் ஏற்படும் கண்புரை நோய், பார்வைக்குறைபாடு ஆகியவற்றை சரிசெய்கிறது. இதனால் காலிபிளவரை உணவில் சேர்த்துக் கொண்டு கண்களைப் பாதுகாக்கலாம்.
வயிற்றுக் கோளாறுகள் சரியாக
காலிபிளவர் அதிக அளவு நார்சத்தினைக் கொண்டுள்ளது. இந்த நார்சத்தானது செரிமானத்திற்கு உதவுவதுடன் குடலில் உள்ள நச்சினை வெளியேற்றுகிறது.
காலிபிளவரில் உள்ள குளுக்கோசினோலேட் மற்றும் சல்ஃபரோபேன் குடலில் ஹீலியோபாக்டர் பைலோரி பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் தடுப்புச் சுவராகச் செயல்படுகிறது. எனவே காலிபிளவரை அடிக்கடி உணவில் சேர்த்து வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
பாபிலோமாடாஸிஸ் சுவாச பிரச்சினை தீர
பாபிலோமாடாஸிஸ் சுவாச பிரச்சினை என்பது மூச்சுக்குழாயிலுள்ள குரல் நாண்கள், குரல்வளை, தொண்டை மற்றும் நுரையீரல் ஆகிய பகுதிகளில் பாபிலோமா என்ற வைரஸினால் ஏற்படும் பாதிப்பாகும்.
காலிபிளவரில் உள்ள இண்டோல் 3-கார்பினால் என்ற சேர்மமானது பாபிலோமாடாஸிஸ் சுவாச பிரச்சினை ஏற்படாமல் தடை செய்கிறது. எனவே காலிபிளவரை உட்கொண்டு சுவாச பிரச்சினைகளைத் தீர்க்கலாம்.
இதய நலத்திற்கு
காலிபிளவரில் காணப்படும் ஐசோதியோசயனைட் ஆனது இரத்த நாளங்களில் கொழுப்புகளை சேகரமாகாமல் தடை செய்கிறது. இதனால் உடலில் சீரான இரத்த ஓட்டம் ஏற்படுத்தி இதய நலத்தினைப் பாதுகாக்கிறது.
மேலும் காலிபிளவரில் இதய நலத்திற்கு தேவையான ஒமேகா-3 அமிலமானது ஆல்ஃபா லெனினெனிக் அமில வடிவில் உள்ளது. எனவே காலிபிளவரை அடிக்கடி உணவில் சேர்த்து இதயத்தைப் பாதுகாக்கலாம்.
புறஊதா கதிர்களின் செயல்பாட்டிலிருந்து சரும பாதுப்பினைப்பெற
காலிபிளவரில் காணப்படும் சல்ஃபரோபேன் புறஊதாக்கதிர்களின் செயல்பாட்டிலிருந்து சருமத்தினைப் பாதுகாக்கிறது.
சுல்பரோபேனின் பாதுகாப்பு நடவடிக்கையானது புறஊதா கதிர்களால் ஏற்படும் தோல் தடிப்பு, தோல் புற்றுநோய், செல் சிதைவு ஆகியவற்றைத் தடை செய்கிறது. எனவே காலிபிளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு சருமத்தினை புறஊதாக் கதிர்களின் செயல்பாட்டிலிருந்து பாதுகாக்கலாம்.
நரம்பு சீர்கேடு நோய்களிலிருந்து பாதுகாப்பினைப் பெற
காலிபிளவரில் காணப்படும் சல்ஃபரோபேன் மற்றும் இண்டோல் 3-கார்பினால் நரம்பு சீர்கேடு நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இவைகள் நச்சுத்தன்மையை நீக்கும் நொதிகளை செயல்படுமாறு ஊக்குவிக்கின்றன.
இவைகள் குளுக்காதயோனின் அளவினை உயர்த்துவதோடு அல்சைமர், பார்கின்சன் நோய்களால் நரம்புகளில் ஏற்படும் வீக்கம், விசத்தன்மையை நீக்குகின்றன.
உடலில் மின்பகுளிகளை சரிசெய்ய
காலிபிளவரில் பொட்டாசியம் அதிகஅளவு காணப்படுகிறது. பொட்டாசியம் உடலில் மின்பகுளிகளை சீர்செய்வதோடு நரம்பு தூண்டல் மற்றும் தசை சுருக்க பரிமாற்றம் உள்ளிட்ட நரம்பு மண்டல செயல்பாட்டினையும் சீராக்குகிறது.
கர்பிணிப்பெண்களின் ஆரோக்கியத்திற்கு
காலிபிளவரில் காணப்படும் ஃபோலேட்டுகள் குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இவற்றில் காணப்படும் விட்டமின்கள், தாதுஉப்புக்கள், நார்சத்து ஆகியவை கர்பிணிகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கர்பிணிகள் காலிபிளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலமாகும்.
காலிபிளவரை பற்றிய எச்சரிக்கை
காலிபிளவரை அதிக அளவு உணவில் எடுத்துக் கொள்ளும்போது தைராய்டு சுரபியில் வீக்கத்தை உண்டாக்கி தைராய்டு சுரப்பினை குறைத்துவிடுகிறது. தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் இக்காயினை தவிர்ப்பது நலம் ஆகும்.
காலிபிளவரை தேர்வுசெய்யும் முறை
காலிபிளவரை தேர்வு செய்யும்போது கிரீம் வெள்ளை அல்லது தூய வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். கைகளில் தூக்கும்போது கனமானதாக இருக்க வேண்டும்.
பூக்கள் இடைவெளிவிட்டோ அதிக அளவு மலர்ந்திருந்தாலோ அதனைத் தவிர்த்து விட வேண்டும். பூக்களின் மேற்பரப்பானது சிதைவுற்றோ, அரிக்கப்பட்டிருந்தால் அதனையும் தவிர்த்து விடவேண்டும்.
இதனை குளிர்பதனப் பெட்டியில் ஒருவாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
காலிபிளவரை பயன்படுத்தும் முறை
காலிபிளவரில் பூத்தண்டில் அதிக அளவு பூச்சிகள் காணப்படும். இதனை நீக்குவதற்கு தண்ணீரில் உப்பினைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி அதில் காலிபிளவர் பூ இதழ்களை போட்டு மூன்று நிமிடம் வைத்திருந்து பின் உயோகிக்க வேண்டும்.
அதிக நேரம் நேரடியாக கொதிக்க விடுவதோ, கொதிநீரில் மூழ்க வைத்திருப்பதோ இக்காயில் உள்ள சத்துக்களை முற்றிலும் அழித்து விடும்.
காலிபிளவரானது பச்சையாகவோ, வேகவைத்தோ பயன்படுத்தப்படுகிறது. ஊறுகாய் மற்றும் சூப் தயார் செய்தும் இக்காய் உபயோகப்படுத்தப்படுகிறது.
சத்துக்கள் நிறைந்த காலிபிளவரை அடிக்கடி உணவில் சேர்த்து நலம் பெறுவோம்.
– வ.முனீஸ்வரன்
மறுமொழி இடவும்