கால்தடம் குறும்படம் குழந்தைகளின் உலகை நமக்குக் காட்டுகின்றது. அது ஏழை பணக்காரன் என்ற ஒன்றில் இல்லை. மாறாக அது எல்லையற்ற அன்பை உடையது.
பணக்காரர் வீடு ஒன்றில் தந்தை, பெண் குழந்தையின் விளையாட்டுகளைத் தன் செல்போனில் படம் எடுத்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்.
அவரின் பெண்குழந்தை விலை உயர்ந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு மூடுகிறது; எழுந்து நடக்கிறது.
அப்பாவின் ஷூ ஒரு ஓரத்தில் கிடக்கிறது. அதில் கால்களை விட்டு மிகுந்த சந்தோஷத்தில் அந்த ஷூ உடன் நடந்து பார்க்கிறது.
இதைத் தந்தை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் ரசித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
அடுத்த காட்சி, தார்ப்பாய் மூடிய குடிசை வீடு. ஒருவர் அயர்ந்து படுத்துக் கிடக்கிறார்.
பக்கத்தில் நாய் ஒன்று கிடக்கிறது. அதற்குப் பக்கத்தில் குப்பைகளுக்கு இடையில் பாத்திரங்கள் சில கிடக்கின்றன.
இங்கு விளையாடிக்கொண்டிருந்த இந்த ஏழையின் குழந்தை, தன் தந்தையின் செருப்பைப் போட்டுப் பார்க்கிறது.
தள்ளாடித் தள்ளாடி அந்தக் குடிசை வீட்டை விட்டு வெளியே நடந்து பழகுகிறது. இக்குழந்தை நடப்பதை ரசிக்க யாருமில்லை.
அவ்வளவுதான் இந்த குறும்படம்.
இந்த இரண்டு சாட்சிகளோடு, அற்புதமான செய்திகளை நமக்கு விளக்கி இருக்கிறார் இயக்குனர்.
குறும்படத்தின் சிறப்பு
பணக்கார வீட்டுப் பெண் குழந்தையும் ஏழை வீட்டுக் குழந்தையும் உளவியல் அடிப்படையில், தன் தந்தையின் காலணிகளை எடுத்துப் போட்டுக் கொள்ள ஆசைப்படுகின்றனர்.
இந்த ஆசை வருவதற்குச் செல்வமும் பணமும் தேவையில்லை; குழந்தையின் மனம் தான் மிக மிக முக்கியம்
குழந்தைகள் எப்பொழுதும் தன் தந்தை தாயைப் பார்த்து அவர்களைப் போலவே ஆகி விட நினைக்கின்றனர்.
தந்தை தாய் செய்யும் செயல்களை உற்று நோக்குகின்றனர். அவர்களைப் பார்த்து, அவர்களை அப்படியே செய்து பழகுகின்றனர்.
அவர்களை இரசிப்பது இரண்டு இடங்களிலும் வேறுபடுகின்றன. கவனிப்பும், கவனிக்காத நிலையும் வளர்ச்சியின் ஒரு பக்கத்தில் அவர்களைப் பாதிக்காமல் இருக்கலாம்; பாதிக்கவும் செய்யலாம்.
வேறொன்றும் தெரியாது குழந்தைப்பருவத்தில். எனவே, பக்கத்தில் உள்ளவர்களின் செயல்களை அது மறு உருவாக்கம் செய்கிறது. இதுதான் இயற்கை. இதுதான் குழந்தைகளின் உலகம்.
இயக்குனர் இரு காட்சிகளையும் நுணுக்கமான வெளிப்பாடுகளால் காட்சிப் பின்புல வெளிப்பாட்டால் பெருமைப் படுத்தி, வேற்றுமைப் படுத்தி, வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டி அழகாக எடுத்திருக்கிறார்.
பணக்கார வீடு, அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருந்தாலும், அங்கிருக்கிற குழந்தைகள் வித்தியாசமான குழந்தைகள் அல்ல. அவர்களும் எதார்த்தமான குழந்தைகள் தான்.
அதேநேரம் ஏழை குடிசையில், நாய் படுத்து இருக்கும் எதார்த்தமான மண் தரைகளில், வாழுகின்ற மக்களின் குழந்தைகளும் வேறொன்றாகச் சிந்திக்காது. அவையும் பணக்கார வீட்டுக் குழந்தைகளைப் போல தான் மனம் கொண்டிருக்கும்.
குழந்தையின் உலகத்தில் பணமோ பகட்டோ தேவையில்லை. அதன் உலகம் எல்லா இடங்களிலும் ஒன்றாகவே இருக்கிறது என்பதை தத்துவார்த்தமாக இக்குறும்படம் விளக்கிச் சொல்கிறது.
குறும்படத்தில் வசனம் என்று ஒரு வார்த்தை கூட கிடையாது. ஒரே ஒரு நிமிடத்தில் இந்த இரண்டு காட்சிகளும் கருத்தை வெளிப்படுத்த எடுக்கப் பட்டிருக்கின்றன.
ஐந்து கதாபாத்திரங்கள். இரண்டு தகப்பனார்கள், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு நாய் அவ்வளவுதான். இந்த கதாபாத்திரங்கள் அதன் அதன் குணத்தை, தன்மையை வெளிப்படுத்துகின்றன. அற்புதமாக இக்குடும்பங்களின் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
எதார்த்தவியல் கோட்பாட்டின் அடிப்படையில், நடப்பதை அப்படியே படம் பிடித்ததைப் போல, இரண்டு காட்சிகளும் அமைந்திருக்கின்றன. அது இயக்குனரின் மிகப்பெரும் ஆளுமையாகும். அவரின் திறனுக்கு அது எடுத்துக்காட்டாகும்.
இசை நுணுக்கமாகப் பின்புலத்தில் இழையோடி இருக்கிறது. உணர்வுகளை அது பிரதிபலிப்பதாக இருக்கிறது.
பல விருதுகளைப் பெற்றிருக்கிறது இப்படம்.
பல உளவியல் வெளிப்பாடுகளைச் சொல்லுகிற படம்.
செலவு இல்லாத படம்.
குழந்தை உலகத்தை காட்டுகிற படம்.
பெற்றோர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற படம்.
இந்தப் படம், அதிக அளவில் பார்வையாளர்களை விமர்சனம் எழுத வைத்த படம்,
பார்வையாளர்கள் அதிகமாகப் பார்த்து இருக்கிறார்கள் என்று பெருமைக்குரியதான படம்.
ஏழையின் வீட்டில், குழந்தையின் நடத்தைகளை ரசிப்பதற்கான நேரங்கள் குறைவாக இருக்கும். காரணம், உழைத்து ஓய்வெடுப்பதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரம், குழந்தைகளை இரசிப்பதற்கு விடாமல் செய்யும் என்பதையும் கூட இயக்குனர் மிக நுணுக்கமாக இப்படத்தில் காட்டியிருக்கிறார்.
ஒரு நிமிடத்தில் அற்புதத்தை, அழகை ஆராதனை செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
பார்வையாளர்கள் கருத்து
கால்தடம் குறும்படம் குறித்த ஏற்புக் கோட்பாடான பார்வையாளர்களின் கருத்தை அறியும் பொழுது, பார்வையாளர்கள் வெவ்வேறு கோணங்களில் இக்குறும்படத்தை உற்று நோக்கியுள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
அவ்வாறான ஒரு பார்வையாளர் கூறும்பொழுது, இருவரின் வீட்டிலும் ஏற்றதாழ்வு கட்டாயம் எனும் அடிப்படையில் எழுதி இருக்கிறார்.
அதில், “பொருளாதார நிலை பெற்றோரை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி எனது விளக்கம் கூறுகிறது. பணக்கார அப்பாக்கள் தங்கள் குழந்தைகளின் சிறிய செயல்களை ஊக்குவிக்கும் போது, நினைவுகளை உருவாக்கி அவர்களைப் போற்றுகிறார்கள்; ஏழைக் குழந்தைகளின் இதுபோன்ற செயல்கள் வாழ்க்கையில் கவனிக்கப்படாமல் போகும்… எந்த ஊக்கமும், நேசமும் இல்லாமல்… குழந்தைகள் வளரும்போது அது அவர்களைப் பெரிதும் பாதிக்கிறது.” என்பார்.
இன்னொரு பார்வையாளர் கூறும்பொழுது, “இந்தப் படம் உணர்வுப் பூர்வமாக ஈர்க்கக் கூடியதாக இருந்தது. இது இரண்டு சூழ்நிலைகளின் படத்தைக் காட்டுகிறது. ஆனால், ஏழைகளின் உதவியற்ற தன்மையை அதிகம் வலியுறுத்துகிறது. ஒரு குழந்தை நல்ல பெயர் பெற்ற ஆங்கில மீடியம் பள்ளியில் படிக்கும் போது, மற்றொரு குழந்தை வறுமையின் காரணமாகப் பள்ளிக்குச் செல்வதில்லை என்பது அப்பட்டமான உண்மை. ஒருவர் தன் தந்தையைப் போல் தொழிலதிபராக மாற விரும்புகிறார். மற்றொருவர் தன் தந்தையைப் போல் தங்கள் குடும்பத்தைப் போஷிக்க ஒரு சாதாரணத் தொழிலாளியாக இருக்க விரும்புவார்.” என்பதாக அவைகள் இருக்கின்றன.
படக்குழு
கருத்து, இயக்கம், புகைப்படம் மற்றும் எடிட்டிங்: சுபம் ஜோஷி
இசை: பிரன்சு போர்வான்கர்
வண்ண திருத்தம்: பிரதேயும்னா சாவந்த்
கலை : படே மூச்வாலே
குறும்படப் பார்வையாளர்கள் இது போன்ற படங்களைப் பெரிதும் விரும்புகின்றனர்.
இயக்குனர் சுபம் ஜோஷி இதுபோன்று, ஒரு நிமிடத்தில் கூறப்படும் நிறையக் கதைகளை எடுத்துள்ளார். அவை அனைத்தும் பல விருதுகளைப் பெற்றுள்ளன.
கால்தடம் குறும்படம் பாருங்கள்
(குறும்படம் விரியும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
மறுமொழி இடவும்