காளான் குருமா காளானைக் கொண்டு செய்யப்படும் அசத்தலான சைடிஷ் ஆகும்.
இதனை சைவர்கள் அசைவர்கள் என எல்லோரும் விரும்பி உண்பர்.
இயற்கை மற்றும் செய்றை முறையில் விளைய வைத்த எல்லா காளான்களும் இக்குருமா செய்வதற்கு ஏற்றது.
இனி சுவையான காளான் குருமா செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காளான் – ¼ கிலோ
சின்ன வெங்காயம் – ¼ கிலோ
தக்காளி – 3 எண்ணம் (பெரியது)
வெள்ளை பூண்டு – 3 பல் (பெரியது)
இஞ்சி – ஆள்காட்டி விரல் அளவு
கரம்மசாலா பொடி – 1½ ஸ்பூன்
மல்லிப் பொடி – 1 ஸ்பூன்
சீரகப் பொடி – ¾ ஸ்பூன்
மிளகாய்வற்றல் பொடி – ¾ ஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்
மல்லி இலை – 3 கொத்து
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 குழிக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – ¼ ஸ்பூன்
பெருஞ்சீரகம் – ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் காளானை நன்கு அலசி மீடியம் சைஸ் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியை கழுவி சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
மல்லி இலையை அலசி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அடித்துக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினை தோல் உரித்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அடித்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்து கொள்ளவும்.
பின் அதில் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
சின்ன வெங்காயம் பாதி வதங்கிய நிலையில் நறுக்கிய தக்காளி துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சுருளும்போது அதனுடன் வெட்டிய காளான் துண்டுகளைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
பின் வதக்கிய கலவையை நன்கு ஆறவிடவும்.
வதக்கிய கலவையில் ¼ பகுதியை எடுத்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து மீதமுள்ள (¾ பகுதி) காளான் கலவையை போட்டு அதனுடன் அடித்து வைத்துள்ள வெள்ளைப் பூண்டு, இஞ்சி பேஸ்ட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இஞ்சி பேஸ்ட் சேர்த்தல்
பின் அதனுடன் கரம்மசாலா, மல்லிப்பொடி, சீரகப்பொடி, மிளகாய்வற்றல் பொடி, மஞ்சள் பொடி, அடித்து வைத்துள்ள காளான் கலவை மற்றும் தேவையான தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
காளான் கலவையை கிளறி குக்கரை மூடி விடவும்.
குக்கரில் இருந்து விசில் வந்தவுடன் அடுப்பினை சிம்மில் வைக்கவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலையைச் சேர்க்கவும்.
சுவையான காளான் குருமா தயார்.
இதனை சப்பாத்தி, பூரி, சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
விருந்தினர் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மல்லிப்பொடி, சீரகப்பொடி, மஞ்சள்பொடி, வற்றல்பொடி ஆகியவைக்குப் பதிலாக 2½ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து குருமா தயார் செய்யலாம்.