காளான் குழம்பு – சிறுகதை

காளான் குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது.

என்னுடைய மகள் பிள்ளை பேத்திக்கு காளான் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும்.

“ஆச்சி நீங்க வைக்கும் காளான் குழம்பின் ருசியே தனி. இன்னைக்கு மதியம் குழம்பு காளான்தான்.” என்று என்னைக் கட்டியணைத்து கெஞ்சினாள்.

“உனக்கு செய்து தராம வேறு யாருக்கு செஞ்சுதரப் போறேன் என் கன்னுக்குட்டி.” என்றபடி அவளின் கன்னத்தை மெதுவாகக் கிள்ளிக் கொஞ்சி காளான் குழம்பினை தயார் செய்து கொண்டிருந்தேன்.

காளான் குழம்பின் செய்முறை என்னுடைய தாய்வழி பாட்டியிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது.

என்னுடைய பாட்டி கைதேர்ந்த சமையலரசி. எந்த உணவினைத் தயார் செய்தாலும் எளிமையான மூலப்பொருட்களையே உபயோகிப்பார். அவரின் சமையலுக்கு நான் மிகப்பெரிய ரசிகை.

எப்படி என் பேத்தி என்னுடைய காளான் குழம்பினை ரசிக்கிறாளோ, அதேபோல் நானும் என் பாட்டின் கைப்பக்குவக் குழம்புகளில் ஒன்றான காளான் குழம்பினை ரசித்து உண்பேன்.

குழம்பு கொதித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய ஏழு வயதில் நிகழ்ந்த சம்பவம் நினைவிற்கு வந்தது.

அது ஐப்பசிமாத ஞாயிறு.

என்னுடைய அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா என ஆறு பெரியவர்களும் தங்களுடைய பிள்ளைகளை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு மதுரைக்கு தீபாவளி பண்டிகைக்கு புதுத்துணி வாங்க சென்றுவிட்டனர்.

எங்கள் பாட்டி வீட்டில் பசுமாடுகள் ஆறு இருந்தன.

அவற்றிற்காக வைக்கோலை படப்பாக அடைந்து வீட்டிலிருந்து சுமார் 1/2 கிமீ தொலைவில் களத்திற்கு அருகில் வைத்திருந்தனர்.

‘களம்’ என்ற இடம் அந்த ஊரில் இருந்த பெரிய வெளிப்பகுதி.

அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை களத்திற்குக் கொண்டு வந்து, கல்லில் அடித்து, நெல்மணிகளைத் தனியாகவும் வைக்கோலைத் தனியாகவும் பிரித்தெடுப்பர்.

வைக்கோல் படப்பிற்கு அருகிலேயே பெரிய குழி தோண்டி மாடுசாணத்தைக் குழியில் போட்டு வைத்திருந்தனர். இன்றைய சாக்கடையில் வரும் துர்நாற்றம் ஒருநாளும் அன்றைய குப்பைகுழியில் வந்ததில்லை.

ஐப்பசி மாதமாதலால் நன்கு மழை பெய்து பூமி குளிர்ந்திருந்தது.

காலையில் பாட்டி மாட்டுச் சாணத்தை கூடையில் எடுத்து தலையில் வைத்து, கையில் கயிற்றுடன் என்னையும் அழைத்து கொண்டு வைக்கோல் படப்பிற்குச் சென்றார்.

அங்கே நிறைய வைக்கோல் படப்புகளும் ஒவ்வொன்றிற்கும் அருகேயும் குப்பைக்குழிகளும் இருந்தன.

பாட்டி சாணத்தை அவருடைய குப்பைக்குழியில் போட்டுவிட்டு வைக்கோல் படப்பில் மேலே இருந்த சீமைக்கருவேல முற்களை லாவகமாக அகற்றி தனியே எடுத்து வைத்து விட்டு என்னை வைக்கோல் படப்பிற்கு அருகே அழைத்தார்.

படப்பின் அடிப்பகுதியில் கீழே கிடந்த வைக்கோலை லேசாக கைகளால் அகற்றினார்.

அங்கே வைக்கோல் நிறத்தில் வெளியே 1/2 இன்ச் அளவிற்கு நிறைய மொட்டுக்கள் இருந்தன.

அவற்றைப் பார்த்ததும் எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ‘இது என்னவாக இருக்கும்?’ என்று எண்ணுகையில்,

பாட்டி “என்ன வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கே? காளானயெல்லாம் புடுங்கு” என்றபடி வேகமாக மெட்டுகளை பிடுங்க ஆரம்பித்தார்.

நானும் பாட்டி செய்வதைப் பார்த்து மொட்டுகளை பற்றி இழுத்தேன். அது பூவைப் பறிப்பதுபோல் எளிதாக இருந்தது.

அப்போது தாத்தா பெரிய பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தார். பாட்டி, நான், தாத்தா மூவரும் காளானைப் பறித்து பெட்டியை நிரப்பினோம்.

அதன் பின்பு பாட்டி படப்பில் இருந்து வைக்கோலை பறித்து கயிற்றில் கட்டாகக் கட்டி தாத்தாவின் சைக்கிளில் வைத்தார்.

மீண்டும் சீமைக்கருவேல முட்கள் இருந்த கம்புகளை லாவகமாக எடுத்து வைக்கோல் படப்பு முழுவதும் பரப்பிவிட்டார்.

குப்பைக்கூடையையும் காளான் பெட்டியையும் எடுத்துக்கொண்டு என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார் பாட்டி.

“எதுக்கு பாட்டி முள்ளுக்கம்பை படப்பு முழுவதும் போட்டீங்க?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன்.

“படப்பு நம்ம வீட்ல இருந்து தூரத்துல இருக்கு. வேற யாராவது நம்ம படப்புல இருந்து வைக்கல பிடிக்காம இருக்குறதுக்குதான் முள்ளுக்கம்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில குறுக்கு நெடுக்காக அல்லது நேரா போட்டு வைப்பேன். வேற யாராவது நம்ம வைக்கல பிடிக்கினத முள்ளுக்கம்பு இருக்கிற தோரணைய வைச்சு ஈசியாக கண்டுபிடிச்சிடுவேன். வீட்டுக்கு கதவு மாதிரி இந்த முள்ளுக்கம்பு படப்புக்கு.” என்றார்.

மேலும் பல சுவாரசியமான விஷயங்களைப் பேசிக் கொண்டே இருவரும் வீடு வந்து சேர்ந்தோம்.

பாட்டி காளானைச் சுத்தம் செய்துவிட்டு மல்லி, சீரகம், வற்றல் வைத்து மசாலா அரைத்து, சின்ன வெங்காயத்துடன் காளான், மசாலாவை கூட்டி குழம்பினை அடுப்பில் வைத்தார்.

கொதிக்கும் காளான் குழம்பின் வாசனையை முகர்ந்தபடியே சமையலறைச் சுற்றிக் கொண்டிருந்தேன்.

பாட்டி சமையலை முடித்துவிட்டு பேரப்பிள்ளைகள் எட்டு பேரையும் சாப்பிட அழைத்தார்.

பாட்டி பீங்கான் வட்டில், ஈய வட்டில், முட்டைவடிவ எவர் சில்வர் வட்டில் என மூன்று வட்டில்களிலும் , ஐந்து வட்டவடிவ எவர் சில்வர் வட்டில்களிலும் சாதத்தை போட்டு காளான் குழம்பினை ஊற்றினார்.

பாட்டி எப்போதும் பேரப்பிள்ளைகளில் வயதில் சிறியவர் முதல் ஏறுவரிசையில் வட்டில்களை விருப்பப்படி எடுத்துக் கொள்ள அனுமதிப்பார்.

எங்கள் எட்டுபேரின் ஏறுவரிசை வயதில் நான் மூன்றாவது. எனக்கு எப்போதும் முட்டைவடிவ எவர்சில்வர் வட்டிலில் சாப்பிடுவதே பிடிக்கும்.

என்னை விடச் சிறியவர்களான என் அத்தை மகளும், பெரியப்பா மகளும் எனக்காக எப்போதும் முட்டைவடிவ வட்டிலை விட்டுக் கொடுப்பர்.

அன்று ஏனோ அத்தை மகள் ‘தனக்கு முட்டை வடிவ வட்டிலே வேண்டும்’ என்று அடம் பிடிக்க, பாட்டி என்னிடம் “நம்ம மகா தானே. நீ இன்னிக்கு ஒருநாள் வேற வட்டில எடுத்துக்கோ.” என்று கூறினார்.

நான் அதற்கு மறுத்தேன். உடனே பாட்டி “இந்த வயசுல உனக்கு என்ன அத்தன வீராப்பு. மகா, நீ முட்டை வட்டில எடுத்துக்கோ.” என்றார்.

நான் கோபித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே இருந்த குத்து உரலில் உட்கார்ந்தேன்.

பாட்டியைத் தவிர்த்து தாத்தா உட்பட எல்லோரும் வந்து என்னை சாப்பிட அழைத்தனர். நான் சாப்பிட வர மறுத்தேன்.

“கிடக்கட்டும் விடுங்க. நீங்க எல்லாரும் வந்து சாப்பிடுங்க. சோறு ஆறுது. அவ தானா வருவா.” என்றபடி பாட்டி அதட்ட எல்லோரும் சாப்பிட சென்று விட்டனர்.

உள்ளே காளான் குழம்பின் வாசனை என்னை இழுத்தது. பாட்டியின் மீதான என்னுடைய கோபம் என்னை உள்ளே செல்லத் தடுத்தது.

பாட்டி என்னை அவ்வப்போது “நீலா, உனக்குப் பிடிச்ச காளான் குழம்பு காலியாகிக்கிட்டே இருக்கு. சீக்கிரம் வந்து சாப்பிடு” என்று அழைத்தார்.

அரைமணி நேரம் குத்து உரலிலேயே அமர்ந்திருந்தேன்.

இறுதியாக பாட்டி வைத்த காளான் குழம்பின் வாசனை என் கோபத்தை வெற்றி கொண்டது. உள்ளே சென்றேன்.

பாட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். குழம்பு சட்டியில் காளான் குழம்பு இல்லை. அதனைக் கவனித்ததும் எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

என் முகத்தைப் பார்த்ததும் பாட்டி “மகா, முட்டை வட்டிலயும் காளான் குழம்பு வச்சிருக்கிற கிண்ணத்தையும் எடுத்துட்டு வா” என்றாள்.

மகா முட்டை வட்டிலும் குழம்புக் கிண்ணமுமாக என் முன்னே வந்து நீட்டினாள்.

நான் அவளை ஏறிட்டுப் பார்த்தேன்.

‘சாப்பிடு’ என்னும் கெஞ்சும் பாவனையில் அவள் முகம் இருந்தது.

அவள் கையிலிருந்த வட்டிலையும் கிண்ணத்தையும் ‘வெடுக்’கென பிடுங்கினேன்.

சோற்றுப் பானையிலிருந்து சோற்றை வட்டிலில் போட்டு, காளான் குழம்பு முழுவதையும் ஊற்றி பிசைந்து வேகமாகச் சாப்பிட்டேன்.

கடைசியாக கிண்ணத்தில் ஒட்டிக் கொண்டிருந்த குழம்பினை வழித்து நாவில் ஊற்றினேன். பாட்டி என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

“ஆச்சி காளான் குழம்பு வாசனை ஆளைத் தூக்குது. குழம்பு ரெடியாயிடுச்சா?” என்ற என்னுடைய பேத்தியின் குரல் கேட்டு நிகழ் உலகிற்கு வந்தேன்.

குழம்பினை கரண்டியால் சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் ஊற்றி ருசி பார்த்தேன்.

கிண்ணத்தில் இருந்து வழித்து ருசித்த பாட்டியின் குழம்பினைப் போல் அது ருசிக்கவில்லை என்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

வ.முனீஸ்வரன்

One Reply to “காளான் குழம்பு – சிறுகதை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.