காளான் பிரியாணி செய்வது எப்படி?

காளான் பிரியாணி சைவப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். காளானிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் காளான் பிரியாணி முதலிடத்தைப் பெறுகிறது.

முன்பெல்லாம் மழை காலங்களில் மட்டுமே கிடைத்து வந்த காளான் தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது.

இனி சுவையான காளான் பிரியாணி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

சம்பா பிரியாணி அரிசி – 400 கிராம்

காளான் – 200 கிராம்

தேங்காய் – ஒரு எண்ணம் (மீடியம் சைஸ்)

நெய் – 25 கிராம்

கொத்த மல்லி இலை – 10 தண்டுகள் (மீடியம் சைஸ்)

புதினா இலை – 20 எண்ணம்

எலுமிச்சை பழம் – 1 மூடி

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

 

மசால் அரைக்க

பெருஞ்சீரகம் – 4 ஸ்பூன்

பட்டை – ஆள்காட்டி விரல் அளவு

கிராம்பு – 2 எண்ணம்

ஏலக்காய் – 3 எண்ணம்

அன்னாசிப்பூ – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

கடல் பாசி – சிறிதளவு

சாதிப்பத்ரி – 3 இதழ்கள்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 3 எண்ணம்

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

கசகசா – 2 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு – 6 எண்ணம்

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

பெருஞ்சீரகம் – 2 ஸ்பூன்

பட்டை – சுண்டு விரல் அளவு

கிராம்பு – 2 எண்ணம்

ஏலக்காய் – 2 எண்ணம்

பிரிஞ்சி இலை – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

 

செய்முறை

பிரியாணி அரிசியைக் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு அதில் ஒரு மூடி எலுமிச்சையை பிழிந்து விட்டு அரிசியை குலுக்கி எலுமிச்சை சாறு எல்லா இடத்திலும் பரவுமாறு செய்யவும்.

கொத்தமல்லி இலை, புதினா இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

காளானை அலசி மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்.

தேங்காயை உடைத்து பால் எடுக்கவும். தேங்காய்பால் 800 கிராம் அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். (தேங்காய்பால் அரிசிக்கு இரண்டு பங்கு).

சின்ன வெங்காயத்தைச் சுத்தம் செய்து தோலுரித்து காம்பு நீக்கிய மிளகாயுடன் சேர்த்து மிக்ஸியில் பரபரப்பாக அரைக்கவும்.

இஞ்சியைத் தோலை நீக்கி, தோலுரித்த வெள்ளைப் பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கசகசாவை சிறிதளவு நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின் அதனுடன் முந்திரிப் பருப்பைப் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கடல் பாசி, சாதிப்பத்ரி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

காளான் பிரியாணி ‍- தேவையான பொருட்கள்
காளான் பிரியாணி ‍- தேவையான பொருட்கள்

 

குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.

தாளிக்கும்போது
தாளிக்கும்போது

 

பின் அதனுடன் சுத்தம் செய்த காளான் துண்டுகளை போட்டு வதக்கவும்.

காளான் துண்டுகளை போட்டு வதக்கும்போது
காளான் துண்டுகளை போட்டு வதக்கும்போது

 

காளான் பாதி வெந்த நிலையில் வெங்காயம் பச்சை மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

காளான் பாதி வெந்த நிலை
காளான் பாதி வெந்த நிலை

 

ஒரு நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும். பின் கசகசா முந்திரி விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

பின் அதனுடன் பரபரப்பாக அரைத்துள்ள கரம்மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும்.

இதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.

மசாலாப் பொருட்களைச் சேர்த்ததும்
மசாலாப் பொருட்களைச் சேர்த்ததும்

 

எண்ணெய் பிரிந்ததும்
எண்ணெய் பிரிந்ததும்

பின் அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து கிளறிவிடவும்.

அதனுடன் சம்பா பிரியாணி அரிசி, தேவையான உப்பு, நெய் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி குக்கரை மூடிவிடவும்.

தேங்காய்ப்பால், சம்பா பிரியாணி அரிசி, தேவையான உப்பு, நெய் ஆகியவற்றைச் சேர்த்ததும்
தேங்காய்ப்பால், சம்பா பிரியாணி அரிசி, தேவையான உப்பு, நெய் ஆகியவற்றைச் சேர்த்ததும்

 

ஒரு விசில் வந்தவுடன் தணலை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.

சுவையான காளான் பிரியாணி
சுவையான காளான் பிரியாணி

 

குக்கரில் இருந்து ஆவி நீங்கியவுடன் குக்கரைத் திறந்து பிரியாணியை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய மல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து ஒரு சேர கிளறவும். சுவையான காளான் பிரியாணி தயார். இதனுடன் பிளைன் சால்னா  சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

பிரியாணிக்கு வட பூண்டு அல்லது பிரியாணிப் பூண்டினை உபயோகிக்கவும்.

காரம் அதிகம் விரும்புபவர்கள் மிளாகாயைக் கீறி காளானுடன் சேர்த்து வதக்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.