காளான் பெப்பர் கிரேவி அருமையான தொட்டுக்கறி ஆகும். இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை உள்ளிட்டவைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
சைவப் பிரியர்களுக்குக் காளான் ஓர் வரப் பிரசாதம். ஏனெனில் அசைவ உணவில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் காளானில் உள்ளன. காளானுடன் மிளகு சேர்க்கும்போது நோய் எதிர்ப்பாற்றலும் அதிகரிக்கிறது.
இதனுடைய மணமும் சுவையும் மிகவும் அற்புதமாக இருக்கும். இனி சுவையான காளான் பெப்பர் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காளான் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (150 கிராம் அளவுடையது)
தக்காளி – 2 எண்ணம் (100 கிராம்)
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளை பூண்டு – 3 பற்கள் (பெரியது)
சோம்பு அல்லது பெருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
கொத்த மல்லிப் பொடி - 1 & 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாப் பொடி - 3/4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் பொடி - 3/4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கீற்று
காளான் பெப்பர் கிரேவி செய்முறை
காளானை சற்று பெரிய துண்டுகளாக்கி சிறிது எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் அலசி எடுக்கவும். எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் அலசுவதால் காளான் கறுக்காமல் இருக்கும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நேராக வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியை அலசி வெட்டிக் கொள்ளவும்.
இஞ்சியையும் வெள்ளைப் பூண்டினையும் தோல் நீக்கி ஒன்றாக நசுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் சோம்பு மற்றும் மிளகினைச் சேர்த்து வாசம் வரும் வரை மட்டும் வறுக்கவும். சோம்பு எளிதில் நிறம் மாறி விடும். ஆதலால் கவனமாக வறுக்கவும்.
வறுத்த சோம்பு மற்றும் மிளகு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கண்ணாடிப் பதத்திற்கு வதக்கவும்.
அதில் நசுக்கிய இஞ்சி மற்றும் பூண்டினைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் தக்காளி சேர்த்து அது நன்கு மசிந்து கரையும் வரை வதக்கவும்.
அதனுடன் கொத்த மல்லிப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் அதில் நறுக்கிய காளானைச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.
ஓரிரு நிமிடங்களில் காளானில் இருந்து நீர் வெளியேறும். ஆதலால் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
காளான் நன்கு வெந்து ஓரளவு தண்ணீர் வற்றியதும் அதில் பொடித்து வைத்துள்ள மிளகு சோம்பு பொடியைச் சேர்த்து ஒருசேரக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
சுவையான காளான் பெப்பர் கிரேவி தயார்.
குறிப்பு
காளானைத் தேர்வு செய்யும் போது பட்டன் காளானாகத் தேர்வு செய்யவும்.
காரத்திற்கு ஏற்ப மிளகினை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யவும்.