காளான் பொரியல் என்பது அற்புதமான தொட்டு கறி வகையைச் சார்ந்தது. எங்கள் ஊரில் மழை காலத்தில் இயற்கை காளான்கள் அதிகளவு கிடைக்கும்.
ஆகையால் மழை காலங்களில் கிடைக்கும் காளான்களை பொரித்து உண்பது என்பது எங்கள் ஊரில் மிகவும் பிரபலமான ஒன்று. இனி சுவையான காளான் பொரியல் செய்வது பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காளான் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
பச்சை மிளகாய் – 2 எண்ணம்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 20 கிராம்
கடுகு – ¾ ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் காளானை அலசிக் கொள்ளவும்.
பின்னர் அதனை சிறு துண்டுகளாக வெட்டவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
பச்சை மிளகாயை அலசி நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் சேர்க்கவும்.
நல்ல எண்ணெய் சூடானதும் அதனுடன் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிதம் செய்யவும்.
தாளிதத்துடன் சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம், நேராக கீறிய பச்சை மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
சின்ன வெங்காயம் பாதி வதங்கியதும் சிறு துண்டுகளாக்கிய காளான்களைச் சேர்த்து வதக்கவும்.
அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.
நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.
சுவையான மணமான காளான் பொரியல் தயார்.
இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் மற்றும் வெள்ளை சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
காளான் பொரியலுக்கு குடைக் காளான் பயன்படுத்தினால் சுவை அதிகமாக இருக்கும்.
காளான் சீக்கிரம் வெந்து விடும். ஆதலால் இதனை அதிக நேரம் சமைக்கத் தேவையில்லை.
காரம் விரும்புபவர்கள் பச்சை மிளகாயின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.