காவடி

காவடி

காவடி என்பது பழங்காலத் தமிழர்களின் ஒரு விளையாட்டாக இருந்தது. தற்போது முருக பக்தர்களால் முருகன் கோவிலுக்கு காணிக்கைப் பொருட்களை கொண்டு செல்ல காவடியானது பயன்படுத்தப்படுகிறது.

முருகன் கோவிலுக்குச் செல்லும்போது, காவடியைச் சுமந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து இறுதியில் கோவிலை அடையும்போது மனதில் உள்ள பாரங்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுகின்றனர்.

திருவள்ளுவர் திருக்குறளில் “கா” என்ற சொல்லைக் காவடி என்ற பொருளில் பயன்படுத்தி உள்ளார். காவடியின் முன்னோடி அன்னக்காவடி ஆகும். தற்போது நடைமுறையில் உள்ள காவடியானது வேடிக்கைக்காவடி என்று அழைக்கப்படுகிறது.

நெடுந்தூரம் வழி நடந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடவுளின் பூசைக்கான பொருட்களையும், தம் தேவைக்கானப் பொருட்களையும் தனித் தனியாகக் கட்டி ஒரு கம்பின் உதவி கொண்டு தோளின் இரு புறங்களிலும் தொங்கவிட்டுச் சுமந்து வந்திருக்கக் கூடும். இவ்வாறாக காவடியானது தோன்றியிருக்கலாம்.

சிவகிரி, சக்தி கிரி என இரு மலைகள் கயிலாயத்தில் இருந்தன. அவற்றைச் சிவன் அகத்தியருக்கு கொடுக்க அகத்தியர் அவைகளை பொதிகைக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு தன் மாணவனான இடும்பாசுரனுக்கு ஆணையிட்டார். இடும்பாசுரன், என்பவன் சூரபத்மன் படையில் இருந்து முருகப்பெருமானை எதிர்த்து இறுதியில் முருக பக்தனாகி உயிர் பெற்ற அசுரன் ஆவான்.

இடும்பாசுரனும் சிவகிரி, சக்திகிரி மலைகளை தனித் தனியாகக் கட்டி தோளின் இரு புறங்களிலும் தொங்க விட்டு சுமந்து சென்றான். பழநி அருகே வரும்போது மலைகளின் பாரம் தாங்காது கீழே இறக்கி வைத்தான். அப்போது முருகப்பெருமான் கோவணத்துடன் சிவகிரி மலையின் மீது தோன்றி மலைகள் தனக்கு சொந்தமானவை என்று கூற, முருகனுக்கும் அசுரனுக்கும் இடையே போர் மூண்டது.

இறுதியில் போரில் வென்ற முருகனிடம் இடும்பாசுரன் தன்னை முருகன் கோவில் வாயில் காவலனாக இருக்க வரம் வேண்டினான். தன்னைப் போலவே காவடியை எடுத்துவரும் பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி முருகனின் அருளைப் பெற வேண்டும் என்ற வரத்தையும் பெற்றதாக காவடியானது தோன்றிய விதம் பற்றி பழனித் தலவரலாறு கூறுகிறது.

காவடியின் பெயரானது காவடித் தண்டின் இரு பக்கங்களிலும் கட்டப்படும் பொருட்களைக் கொண்டு அறியப்படுகிறது. எடுத்துக் காட்டாக கட்டப்படும் பொருள் பால் என்றால் “பால்காவடி” என்றும், பழங்கள் எனில் “பழக்காவடி” என்றும் அறியப்படும். இவ்வாறாக பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, இளநீர்க்காவடி, வேல்காவடி, சர்க்கரைக் காவடி, சாம்பிராணிக்காவடி, சர்ப்பக்காவடி, மச்சக்காவடி என காவடியில் பல வகைகள் உள்ளன.

இளநீர்க்காவடி: இக்காவடி மட்டும் பழமையான தோற்றம் கொண்டு விளங்குகின்றது. கம்பு அல்லது பனை மட்டையைக் காவடித் தண்டாகக் கொண்டு தண்டின் இரு புறங்களிலும் இளநீர்க் காய்களை கட்டிக் கொண்டு, மேள தாளங்களின்றி “வேல் வேல்” “வேல் வேல்” என்று கூவிக் கொண்டு எளிமையான முறையில் எடுத்து வரப்படுகிறது. இளநீர் காவடியில் எடுத்துவரப்படும் இளநீரானது இறைவனின் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

மச்சக்காவடி: மீனைக் காவடியில் கட்டிக் கொண்டு வருவது மச்சக் காவடி ஆகும். மீனை மூன்று இடங்களில் லேசாக வெட்டி, உப்பிட்டு மண் சட்டியில் மஞ்சள் தண்ணீரில் போட்டுக் காவடித் தண்டில் கட்டிக் கொண்டு வருவர். காவடியை எடுத்து முடித்த‌ பின் கோவில் குளத்தில் இடுப்பளவு ஆழத்தில் இறங்கி நின்று காவடித் தண்டில் கட்டப்பட்ட மண் சட்டியைத் தலைக்கு மேலாக தூக்கி ஆட்டும் போது சட்டியில் உள்ள மீன் நீரில் துள்ளி விழும்.

சர்ப்பக்காவடி: நல்ல பாம்பினைக் காவடியில் கட்டிக் கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும். சர்ப்பக்காவடி எடுப்பவர் கடும் விரதம் இருப்பர். ஊருக்கு வெளியே காட்டினுள் தங்கி ஆறு நாள்கள் உணருந்தாமல் விரதம் மேற்கொண்டு இறைவனை வேண்டி உருகி நிற்பர்.

ஆறாம் நாள் அவர்கள் கனவில் இறைவன் தோன்றி ஓர் இடத்தைக் குறிப்பிட்டு அவ்விடத்திலுள்ள பாம்பைக் கொண்டு வருமாறு கூறுவார். விரதம் இருப்பவர் தாரை, தப்பட்டை ஒலி முழங்க அவ்விடம் சென்று பச்சை மண் கலத்துள் பாம்பினை அடைத்து (பாம்பு தானாகவே வெளியே வந்து மட்கலத்துள் புகும் என்பர்) காவடியில் கட்டிக் கொண்டு வருவர்.பின் முருகன் கோவிலின் அருகே உள்ள மலைப் பாங்கான அல்லது காட்டுப் பகுதியில் மட்கலத்தை திறந்துவிடுவர். பாம்பு வெளியேறி விடும்.

காவடியைக் கட்டும் முறை: காவடி எடுப்பவர் ஆறு நாள்கள் வசதிக்கேற்ப நோன்பு (விரதம்) மேற்கொள்வர். சிலர் ஒரு நாளைக்கு ஒரு பொழுது மட்டும் பச்சரிசி சோற்றினை உண்டு விரதம் இருப்பர். பால்காவடி எடுப்பவர் விரதம் இருக்கும் காலத்தில் பாலினை பருகுவதில்லை.

ஏழாம் நாள் காலையில் காவடியிலுள்ள வேலுக்கு பூசை செய்து இரு சிறிய செம்புகளில் நேர்ந்த பொருளினை நிரப்பி (பால், பன்னீர், சம்பிராணி போன்றவை) காவித் துணியால் பொதிந்து காவடித் தண்டின் இரு பக்கங்களிலும் கட்டி சங்கும் சேகண்டியும் ஒலிக்கத் தோளில் தூக்கி வைத்துக் காவடிச் சிந்து பாட்டு பாடி ஆடிக் கொண்டே கோவிலுக்குள் செல்வர். காவடி எடுப்பவர் காவி ஆடை அணிவர்.

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும் காவடி தமிழர் அடையாளங்களில் ஒன்று. அதை போற்றிக் காப்போம்.

Comments

“காவடி” மீது ஒரு மறுமொழி

  1. […] கடவுளான முருகனை காவடி எடுத்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு […]