காவிரி ஆறு தமிழ்நாட்டில் அனைத்து மக்களால் போற்றப்பட்டு வணங்கப்படுகிறது; கங்கையைப் போன்றே புனிதமானதாக பாடப்பெற்று தமிழ் இலக்கியங்களில் வெகுவாகப் புகழப்படுகிறது. இது பொன்னி, காவேரி கின்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
காவிரி தற்போதைய கர்நாடாக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சித் தொடரில் பிரம்மகிரி என்ற மலைப் பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் உற்பத்தியாகின்றது. இந்த இடம் கடல் மட்டத்திற்கு மேல் 1340 மீட்டர் உயரத்தில் உள்ளது.
சிறு அருவியாக உற்பத்தியாகி மலைச்சரிவுகளில் குதித்து, பாறைகளின் நடுவே கீழிறங்கி பின் பாகமண்டலா என்ற இடத்தில் மன்னிகா என்ற சிற்றருவியுடன் சேர்ந்து சிறு ஆறாக குடகு மாவட்டத்தில் 80 கி.மீ. வரை பாய்கிறது. இந்த சிற்றாறின் படுகைகளில் கூழாங்கற்களும், மணற்துகள்களும் காணப்படுகின்றன.
பின் மைசூர் மாவட்டத்தில் புகுமுன் ஹேரங்கி என்ற துணை நதியுடன் சேருகிறது. கிழக்கு முகமாகப் பாய்ந்து வரும் காவேரியின் குறுக்கே கிருஷ்ண ராஜசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இவ்வணையை அடுத்து இடது புறம் ஹேமாவதி மற்றும் வலதுபுறம் லக்ஷ்மணதீர்த்தா என்ற இரு துணை நதிகள் காவிரியுடன் சேர்கின்றன.
பின் சீரங்கப்பட்டிணத்தை அடைந்து தென்கிழக்கில் திரும்பிப் பாய்ந்துவரும் போது நர்சிபூர் என்னும் இடத்தில் கபினி துணை ஆறு காவிரியின் வலது பக்கத்தில் சேருகிறது.
கபினி கேரள மாநிலத்தில் மரங்கள் அடர்ந்த மழை அதிகமாகப் பெய்யும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி நீர்வளம் மிக்க ஆறாக கர்நாடக மாநிலத்தில் புகுந்து காவிரியில் கலக்கிறது.
பின் சுவர்ணவதி, குண்டால் ஆகிய சிற்றாறுகள் காவிரியின் வலதுபுறமும் சிம்ஷா என்ற சிற்றாறு இடது புறமும் சேர காவேரியில் நீர்ப்போக்கு அதிகமாகிறது. எனினும் நிலச்சரிவு அவ்வளவு அதிகமின்மையால் நீரின் வேகம் குறைந்தே காணப்படும். ஆற்றின் அகலம் 800-1000மீட்டர் அளவில் இருக்கும்.
பின் காவேரி ஆறு கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை அடைந்து சுகனசுக்கி, பாராசுக்கி என இரு பிரிவுகளாக பிரிந்து 90 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் நீர்வீழ்ச்சியாக அதிவேகத்துடன் குதித்து, பலவாறாகப் பிரிந்து பின் மீண்டும் ஒன்று சேர்ந்து காவிரி ஆறாக சிவசமுத்திரம் என்ற இடத்தை அடைகிறது.
இங்கு 1902ல் சிவசமுத்திரம் நீர் மின் நிலையம் கட்டப்பட்டது. இது ஆசியாவிலேயே முதலாவது நீர்மின்நிலையம் ஆகும். பின் காவிரியுடன் அர்க்காவதி என்ற உபநதி இடதுபுறம் கலக்கிறது.
பின் காவிரி மேடு பள்ளங்கள், பாறைப்பகுதிகளை கடந்து மேகதாது என்ற இடத்தை அடைகின்றது. மேகதாது என்பதற்கு ஆறானது ஆடுதாண்டும் அளவிற்குதான் அகலம் உள்ளது என்று கன்னடத்தில் பொருள் கூறப்படுகிறது.
இவ்விடம் கர்நாடாக மற்றும் தமிழ்நாட்டிற்கு எல்லையாக உள்ளது. இந்தப் பகுதியில் காவேரி மிகவேகமாகவும், இரு பக்கங்களிலும் உயரமான பாறைகளுக்கிடையே குறுகலான பாதையில் பாய்ந்தோடுகிறது. பின் ஒகேனக்கல் என்ற இடத்தை அடைகிறது.
ஒகேனக்கல் என்பதற்கு புகையைக் கக்கும் கல் என்று பொருள். அதாவது இவ்விடத்தில் நீர் வீழ்ச்சியாக விழுவதில், நீர்த்துளிகள் சிதறி மேலெழுந்து சூரிய வெளிச்சத்தை மறைத்து புகையுண்டானது போல் காட்சியளிப்பதால் புகையைக் கக்கும் கல் என்னும் பொருளில் ஒகேனக்கல் என்று இவ்விடம் அழைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து நீர் வீழ்ச்சியில் குளித்து பரவசமடைகின்றனர்.
ஒகேனக்கல் என்ற இடத்தில் ஆறு கிழக்கிலிருந்து தெற்கு நோக்கித் திரும்பி மேட்டூரை அடைகிறது. இங்குதான் மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது.
பின் 45 கிலோமீட்டர் பாய்ந்து ஆறு கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளைத் தாண்டி சமவெளியை அடைகிறது. இங்கு பவானி என்ற துணை ஆறு காவேரியில் கலக்குகிறது. இதுவரை பாறைப் பாங்கான பகுதியில் பாய்ந்து வந்த காவேரி சமவெளியில் பாய்கிறது.
எனவே வேகம் குறைந்து தன்னுடன் தாங்கிய மண் துகள்களை படியவைக்கிறது. ஆற்றுப்படுகை மணலாகக் காணப்படுகிறது. ஆழத்தைக் குறைந்து, அகலத்தைப் பெருக்கிய காவிரியாற்றுடன் நொய்யல் மற்றும் அமராவதி துணை நதிகள் வலது புறமும், திருமணிமுத்தாறு இடது புறமும் சேர்கின்றன.
மேட்டூரிலிருந்து 185 கிமீ. பாய்ந்து அகண்ட காவிரியாக முக்கொம்பை அடைகிறது. முக்கொம்பு தலைக் காவிரியிலிருந்து 656 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முக்கொம்பில் வடக்கில் கொள்ளிடமாகவும் தெற்கில் காவிரியாகவும் பிரிந்து கிழக்கு நோக்கி பயணிக்கிறது. பின் 27 கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் குறுக்கே கல்லணை கட்டப்பட்டுள்ளது.
பின் கல்லணையிலிருந்து வெளியேறும் போது காவிரியாறு, வெண்ணாறு என்று இரு ஆறுகளாகி காவேரி டெல்டா என அழைக்கப்படும் காவிரிக் கழிமுகப் பகுதியில் பாய்கின்றன. இந்தப் பகுதியே தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் ஆகும்.
கல்லணையிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையை எட்ட அங்கு தெற்கு வடக்காக 195 கிலோ மீட்டர் வரை வளர்ந்து ஒரு முக்கோண வடிவமாக உள்ள இக்கழி முகப் பகுதியை வளமாக்க காவேரியும், வெண்ணாறும் இயற்கையாகவே மேலும் பிரிந்து 36 கிளை நதிகளாகி இறுதியில் கடலில் கலக்கின்றன.