பொழுது விடிந்து வெகுநேரமாகியும் பூவாத்தாவின் சமையல் வேலை முடிந்தபாடில்லை.
நேற்றிரவு குவார்ட்டர் அடித்து குப்புற படுத்திருந்த அவளது கணவன் மாரிமுத்து, உறக்கம் கலைத்து அரை மணி நேரத்தில் கூலி வேலைக்குப் போக தயாரானான்.
சமையலறையில் நின்றிருந்த பூவாத்தா ஓடி வந்து மாரிமுத்துவிடம் ரேசன்கார்டை நீட்டினாள்.
“வேல முடிஞ்சு வீட்டுக்கு வர்றப்போ ரேசன் கடையில அரிசி வாங்கிகிட்டு வந்திடு” தனது கணவனிடம் குரல் தாழ்த்தி சொன்னாள் பூவாத்தா.
“அறைஞ்சன்னா! எப்பவும் நானாடி ரேசன் வாங்குவேன், மகாராணிக்கு என்ன வேல, போய் வாங்க வேண்டியதுதானே!” முறைத்தான் மாரிமுத்து.
“நான் தான் அம்மா வீட்டுக்கு போயிட்டு வருவேன்னு நேத்து ராத்திரியே சொன்னனே, நான் திரும்பி வர்றப்போ கடய மூடிடுவாங்க, இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீ வாங்கிட்டு வந்திடு!”
“அதெல்லாம் முடியாது, இன்னைக்கு ரேசன் வாங்கி வெச்சுட்டு நாளைக்கு நீ உன் அம்மாவீட்டுக்கு போவியாம்!”
“சொன்னா கேளுய்யா!”
“முடியாதுங்கறனில்ல! என்னால ரேசன் கடையில கியூவில எல்லாம் நின்னு வாங்க முடியாது!” அவன் சொன்னதுதான் தாமதம் பூவாத்தாவுக்கு கோபம் தலைக்கேறியது.
“யோவ்! சாயந்தரம் ஆனா டாஸ்மாக் கடையில குவாட்டர் வாங்கறதுக்கு எவ்வளவு நேரமானாலும் நீ கியூவில நிப்ப. வீட்டுக்கு ரேசன் வாங்கறதுக்கு மட்டும் கியூவில நிக்க மாட்டியா?” நெற்றிப்பொட்டில் அடித்தது போல் வலித்தது மாரிமுத்துவுக்கு.
மேற்கொண்டு வாய்திறக்காமல் ரேசன் கார்டும், பையுமாக புறப்பட்டான் மாரிமுத்து.

எம்.மனோஜ் குமார்