ஆண்:
ஒண்ணாம் நம்பர் பஸ்ஸிலேறி ஓடிப் போலாமா – இல்ல
ஒங்கப்பனுக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சிருப்போமா?
என்னதான் நடக்குமின்னு எதிர்த்து நிப்போமா? – இல்ல
எதுக்கு நமக்கு வம்புன்னு தான் ஒதுங்கிப் போவாமா?
பெண்:
பொண்ணு நானும் உன்னப் போல பேச முடியுமா? – எங்க
பொறந்த வீட்டு பேரையும் தான் கெடுக்கமுடியுமா?
கண்ணுல நீ இருப்பதைத்தான் காட்ட முடியுமா? – நம்ம
காதல் கதையை யாருட்டயும் சொல்ல முடியுமா?
ஆண்:
முட்டையிட்டு அடைகாக்கும் கோழிபோலவே – நீ
மூடிமூடிவைக்காதடி நம்ம காதலை
கெட்டி மேளம் தட்டிக்கிட்டு நானும் வரவா – ஊரு
கேட்டுக்கும்படி உன்பேரை பாட்டில் பாடவா
பெண்:
கட்டுப்பாடு இல்லாத பொண்ணு இல்லைய்யா – நான்
காவலோடு வளர்ந்து வரும் கன்னிதானய்யா
வீட்டை விட்டு வெளியேற வழியுமில்லையா – என்
வேதனையை கேட்டுக்குற ஆளமில்லையா
ஆண்:
அஞ்சாம் நம்பர் கடைதேடி அலையவேணுமா – அங்க
அடைச்சி விக்குற சாராயத்தை குடிச்சுப் பழகவா
அஞ்சாமத்தான் காவிகட்டிக் கொள்ளவா – இனி
அடுத்து நான் என்ன செய்ய நீயே சொல்லும்மா
பெண்:
பஞ்சாயத்து நம்ம காதலை தடுக்கப் பார்க்குமே – இந்த
பாழாப் போன ஊரும் நமக்கு பகையாய் போகுமே
அஞ்சாத சிங்கம் என் அண்ணன் வரட்டுமே – நாம
அதுக்கு பிறகு காதலைத்தான் தெரிவிக்கலாமே
ஆண்:
பட்டாளத்துல இருக்குற மச்சான் வந்தாலே – ஒரு
பயமில்லை நாம இங்க ஒண்ணு சேரவே
கெட்டிக்கார பொண்ணு நீ சொன்ன யோசனை – அதை
கேட்க கேட்க மனசு ரெண்டும் உயரப்பறக்குதே
பெண்:
ஒண்ணாம் நம்பர் பஸ்ஸிலேறி ஓடவும் வேண்டாம்
அப்பனுக்கு பயந்துகிட்டு ஒளியவும் வேண்டாம்
ஒண்ணு நாம வாழப்பயந்து ஒதுங்கவும் வேண்டாம்
ஊருக்குள்ள யாரையும்தான் பகைச்சுக்க வேண்டாம்.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!