கிரிக்கெட்டில் நிலைப்பந்து (Dead Ball) என்றால் என்ன?

கிரிக்கெட்டில் நிலைப்பந்து என்றால் என்ன? என்பது பற்றி இந்த வார கிரிக்கெட் கேள்வி பதில் பகுதியில் தெரிந்து கொள்வோம்.

 

1.ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Bats man) பந்தை உயரமாக அடித்துவிட்டு எதிர் விக்கெட்டை அடைந்துவிடுகிறார். ஆனால் அந்தப் பந்தை எதிர்க் குழுவினர் பிடித்துவிடுகிறார் (Catch). அப்படியானால் என்ன முடிவு எடுக்கலாம்?.

அவர் ஆட்டமிழக்கிறார் (Out). அவர் எடுத்த ஓட்டம் கணக்கில் சேராது. ஏனெனில், அவரே ஆட்டத்தை இழந்துவிட்டிருக்கிற பொழுது, அவர் எடுத்த ஓட்டம் எப்படி கணக்கில் சேரும்?

 

2. ஒரு பந்தெறியாளர் (Bowler) முறையிலா பந்தெறி அல்லது எட்டாப் பந்தெறி என்று எறிகிறார் என்றால், அதையும் பந்தெறி தவணையில் ஒரு எறியாக் கணக்கிடப்படுமா?.

கணக்கிடப்படாது. அதற்குரிய தண்டனையாகத்தான் ஒரு ‘ஓட்டம் அல்லது அடித்தாடுவோரின் ஆட்டத்திற்கேற்ப, எடுக்கின்ற ஓட்டங்கள் என்று கிடைத்துவிடுகிறதே! .

ஆகவே, அந்த எறி கணக்கிப்படாமல், முறையாக எறிகின்ற 6 பந்தெறிகள் தான் ஒரு பந்தெறித் தவணையாகக் கொள்ளப்படுகிறது.

 

3. ஒரு பந்தெறியாளர், தனது பந்தெறிதவணையை முழுதும் (One Over) முடித்தாடாமல், இடையில் வேறு ஒருவரை எறியச் செய்யலாமா?.

தான் எறிய இருக்கின்ற (6 அல்லது 8 எறிகள் அடங்கிய) ஒரு பந்தெறிதவணையை அவரேதான் தொடர்ந்து முடிக்கவேண்டும்.

அவரால் பந்தெறிய இயலாமல் போய்விடுகிறதென்றால் அல்லது தவறாக ஆடினார் என்று ஆட்டத்தை விட்டே நீக்கப்படுகிறார்  என்றால்தான் முடியாதே தவிர, மற்றசமயத்தில், அவரேதான் பந்தெறிதவணையை எறிந்து முடிக்கவேண்டும்.

பந்தெறியாளர் எப்பொழுது பந்தெறியும் வாய்ப்பை இழக்கிறார்?

 

4. ஒரு பந்தெறியாளர் எப்பொழுது பந்தெறியும் வாய்ப்பை இழக்கிறார்? அதற்கென்று ஏதாவது விதிமுறைகள் இருக்கின்றனவா?.

இருக்கிறதே! நடுவர் குறிப்பிடும் கீழே காணும் காரணங்களுக்காக, ஒரு பந்தெறியாளரை எறியவிடாமல் தடுத்திட, வாய்ப்பைத் தடுத்திட அநேக விதிகள் உண்டு.

ஒரு பந்தெறியாளர், தான் பந்து வீசும்போது பந்தடி ஆட்டக்காரரை நோக்கி, பந்தைக்குத்தி உயரச்செய்து (Short Pitched Balls) பயமுறுத்தி, அபாயகரமான முறையில் ஆடுவது, முறையற்ற தவறான ஆட்டமாகும்.

இவ்வாறு அச்சமுறுத்தி ஆடுகின்ற முறையினைக் கண்காணிக்கும் நடுவர், அதனைக்கண்டு கொண்டபிறகு, இது உண்மையென்ற முடிவுக்கு வருவதில் திருப்தியடைந்தால், அந்த முறையைத் தடுத்திட, நடுவருக்கு முழு உரிமையுண்டு.

ஆகவே, தொடர்ந்து அச்சுறுத்தும் வண்ணம் பந்தெறிபவரை நோக்கி அவ்வாறு எறியக் கூடாது என்று நடுவர் முதலில் எச்சரிப்பார்.

அவரது எச்சரிக்கை பலனளிக்காது போனால், அதனை அக்குழுத்தலைவனுக்கும் அறிவித்து விட்டு அடுத்த நடுவருக்கும் என்ன நடந்தது என்பதையும் அறிவித்துவிடுவார்.

இந்த ஏற்பாடும் எந்தவிதப் பலனையும் தரவில்லையென்றால், பந்தெறிகின்றவர் பக்கம் நிற்கும் நடுவர், பந்தெறியாளர் பந்து எறிந்த உடனே, திரும்பத்திரும்ப அது ‘நிலைப்பந்து’ (Dead Ball) என்று குரல் கொடுப்பார்.

பந்து ஆட்டத்தில் இல்லை என்று ஆட்டத்தை நிறுத்தி, பந்தெறியாளரது குழுத் தலைவனை அழைத்து, பந்தெறியும் வாய்ப்பிலிருந்து அவரை நீக்கிவிடுமாறு ஆணையிட வேண்டும்.

அவ்வாறே, அக்குழுத் தலைவன் அவரை மாற்றிவிட வேண்டும்.
இந்த நிகழ்ச்சி எதிர்க்குழு தலைவரிடம் நடுவரால் கூறப்பட வேண்டும்.

அத்துடன், தவறான ஆட்டத்திற்காகத் தண்டிக்கப்பட்ட அந்த ஆட்டக்காரர் அந்த ‘முறை ஆட்டம்’ முடியும் வரை பந்தெறியும் வாய்ப்பினைப் பெற அனுமதிக்கப்படமாட்டார்.

இவ்வாறுதான், ஒரு பந்தெறியும் ஆட்டக்காரர் வாய்ப்பை இழக்கிறார்.

 

பந்தடி ஆட்டக்காரர் ஓய்வு பெறுகிறார் என்றால் என்ன?

 

5. ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Bats man) ஓய்வு பெறுகிறார் (Retires) என்றால் என்ன?.

பந்தடித்து ஆடிக்கொண்டிருக்கும்போது, ஒரு ஆட்டக்காரர் தான் ஆடிக்கொண்டிருக்கும்போது, சுகவீனத்தாலோ மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களாலோ தொடர்ந்து ஆட இயலாது மைதானத்தை விட்டு வெளியே வந்துவிடுகிறார். மேற்கண்ட நிகழ்வைத்தான், ஆட இயலாது ஓய்வு பெறுகிறார் என்று குறிக்கப்படும்.

அவ்வாறு வெளியேறும் ஆட்டக்காரர் பற்றி அவரது குறிப்பேட்டில் இவர் ஓய்வுபெற வந்தார்; ஆட்டமிழக்கவில்லை என்றே குறிக்கப்படும்.

 

6. அவர் மீண்டும் விளையாட விரும்பினால்?.

அவர் மீண்டும் விளையாட விரும்பினால், உடனே உள்ளே வந்து ஆட முடியாது. எதிர்க்குழு தலைவனிடம் அனுமதிக் கேட்டு, அவர் அனுமதித்தபிறகே அதுவும் ஒரு பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழந்து வெளியேறுகிற பொழுதுதான் உள்ளே சென்று ஆட முடியும்.

 

நிலைப்பந்து (Dead Ball)

 

7. கிரிக்கெட்டில் நிலைப்பந்து என்றால் என்ன? (Dead Ball) ஒரு பந்து எப்பொழுது நிலைப்பந்தாகிறது?.

நடுவரின் கருத்துக்கேற்ற முடிவின்படி, பந்து ஆடப்படாமல் இருந்து, ஆட்டம் தொடராமல் இருக்கும்போது, அது நிலைப்பந்தாக இருக்கிறது.

அவ்வாறு எந்தெந்த சமயத்தில், பந்து நிலைப்பந்தாக இருக்கிறது என்பதற்கு, விதிமுறைகள் பல சந்தர்ப்ப நிலைகளைத் தொகுத்துத் தந்திருக்கின்றன. அவைகள் பின்வருமாறு :

1. பந்தானது விக்கெட் காப்பாளர் அல்லது பந்தெறியாளர் கைகளுக்குச் சென்றடைந்துவிட்டது (Settled) என்கிறபொழுது. அதாவது கைகளில் சென்றடைந்து விட்டது எப்பொழுது என்கிற நிலையை நடுவர் ஒருவரே முடிவெடுக்க முடியும்.

2. எல்லைக்கு வெளியே பந்து உருண்டு போயிருந்தால் அல்லது அடி பட்ட பந்தானது எல்லைக்கு வெளியே போய் விழுந்திருந்தால்.

3. பந்தை விளையாடுகிற அல்லது விளையாடாத நேரத்தில், பந்தைத் தடுத்தாடுகின்ற ஆட்டக்காரர் அல்லது நடுவரின் உடைக்குள்ளே சென்று பந்து தேங்கிவிடுதல்.

4. ‘பந்தெறி தவணை’ வாய்ப்பானது முடிந்து விட்டது (Over) அல்லது ஆடும் நேரம் முடிந்துவிட்டது (Time) என்று நடுவர் அறிவிக்கின்ற பொழுது.

5. ஒரு பந்தடித்தாடும் ஆட்டக்காரர் ஏதாவது ஒரு காரணத்தால் ஆடும் வாய்ப்பிழந்து (Out) மைதானத்தை விட்டு வெளியேறுகிற பொழுது.

6. விளையாடுகின்ற நேரத்தில் பந்து காணாமல் போய்விடுகின்ற பொழுது.

7. தடுத்தாடும் ஆட்டக்காரர், விதியை மீறியவாறு, வேண்டுமென்றே அடித்தாடி வருகின்ற பந்தை தனது உடையால் அல்லது தான் அணிந்திருக்கின்ற தொப்பி அல்லது குல்லாவினால், பந்தைத் தடுத்தாடுகின்றபொழுது.

8. ஆட்டக்காரர்களில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கின்றபொழுது.

9. வேண்டுமென்றே, பந்தடித்தாடும் ஆட்டக்காரர் பந்தை உதைத்தாடுகின்றபொழுது.

10. ஆடுதற்கேற்ற உபகரணங்கள் சரியான நிலையில் இல்லை என்று ஒருவர் கருதுகின்ற போதும். முறையற்ற ஆட்டத்தை ஆட்டக்காரர்கள் ஆடுகின்றார் என்று தீர்மானிக்கின்றபொழுது.

11. பந்தெறியாளர் எறி ஓடி வர முனைகிற பொழுதிற்குள்ளே, ஒரு ‘ஓட்டம்’ எடுக்கிறபொழுது.

12. ஒரு பந்தடித்தாடும் ஆட்டக்காரர் பந்தை அடித்தாடத் தயாராக இல்லாமலும், அவ்வாறிருக்கும் நிலையில் எறியப்பட்டிருக்கும் பந்தை அடித்தாட முயற்சிக்காமல் இருக்கும்பொழுது.

13. ஒரு பந்தெறியாளர் பந்தெறிகிற தருணத்தில், தவறுதலாகப் பந்தை நழுவ விட்டிருக்கின்றபொழுது.

14. எறியும் நேரத்தில், பந்து கையை விட்டு வெளியே வராமல் கைக்குள்ளே தேங்கி நிற்கிற பொழுது.

15. பந்தெறியாளர் எறிந்து, பந்தை அடித்தாடுகின்ற நேரத்திற்கு முன்பே பந்தடித்தாடுபவர் தாக்கும் விக்கெட்டிலிருந்து இணைப்பான் அல்லது இணைப்பான்கள் கீழே வீழ்ந்து விடுகிறபொழுது.

16. விக்கெட்டில் பந்து பட்டு (அதனால் ஆட்டக்காரர் ஆட்டமிழக்காது போனால்) விக்கெட் விழுந்தாலும் அல்லது எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் முறையிட்டு (Appeal) அது வெற்றிகரமான நிலையை தோற்றுவிக்காதபொழுது.

மேற்கண்ட நிகழ்வுகளில் பந்து நிலைப் பந்தாக மாறிவிடுகிறது.

 

8. நடுவர் மேல், ஆட்ட நேரத்தில் விழுகிற பந்து நிலைப் பந்தா?.

அவர் உடையில் பட்டு, பந்து தேங்கி நின்றால் அது நிலைப்பந்து ஆகும். அவர் மேல் பட்டால், நிலைப்பந்து ஆகாது.

 

கிரிக்கெட்டில் நிலைப்பந்து என்றால் என்ன? பற்றிய இந்தத் தகவல்கள், கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் என்ற புத்தகத்தில் இடம் பெற்றவை.

திரு.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதி, ராஜ்மோகன் பதிப்பகம் பதிப்பித்த அந்த நூல், நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு சிறந்த‌ நூல் ஆகும்.

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.