கிரிக்கெட்டில் முறையீடு பற்றி அறியுங்கள்

கிரிக்கெட்டில் முறையீடு, குறிப்பாளர்கள் பற்றி இந்த வார கிரிக்கெட் கேள்வி பதில் பகுதியில் அறிந்து கொள்வோம்.

 

1. பந்தடித்தாடும் ஒரு ஆட்டக்காரர் ஆட்டமிழந்தார் (Out) என்று தடுத்தாடும் ஆட்டக்காரர்கள், நடுவரிடம் எப்பொழுது முறையிட வேண்டும்?

அடுத்த பந்து எறிவதற்குமுன் (Next ball delivery) அல்லது ஆட்டம் முடிந்து விட்டது (time) என்று நடுவர் அறிவிக்குமுன், எதிர்க் குழு ஆட்டக்காரர்கள் நடுவரிடம் முறையிட (appeal) வேண்டும்.

 

2. அப்பொழுது எந்த நடுவர் தீர்ப்பளிக்க வேண்டும்? அந்த சமயத்தில் நடுவரின் கடமை என்ன?

பந்தெறியும் விக்கெட் பக்கத்தில் நிற்கும் நடுவரே, எல்லா முறையீடுகளுக்கும் பதில் கூற வேண்டும்.

தானே தன் விக்கெட்டை வீழ்த்திக் கொள்ளுதல் (Hit Wicket) குறிக்கம்புகள் வீழ்த்தப்படுதல் (stumped) மற்றும் ஓட்டத்திற்கிடையில் ஆட்டமிழத்தல் (Run out) போன்ற நிகழ்ச்சிகள் நிகழும் போது.

அந்நடுவர் முடிவெடுக்க இயலாத நிலையிருந்தால், அவர் அடுத்த நடுவரிடம் முறையிட, பிறகு அவர் எடுக்கின்ற முடிவே இறுதியானதாக‌ இருக்கும்.

 

3. தடுத்தாடும் குழுவினர் (Fielding Side) தங்கள் முறையீட்டை எவ்வாறு தெரிவிக்கலாம்?

கிரிக்கெட்டில் முறையீடு செய்ய‌, ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, எல்லோரும் அல்லது ஒருவர் என்றாலும் சரி, அது என்ன? (How is that) என்று குரலெழுப்பிக் கேட்கலாம்.

 

4. அதற்கு நடுவரின் பதில் எப்படி இருக்கும்?

அவர்கள் அவ்வாறு முறையிடும்போது அதனைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, விதிகளுக்குரிய முறையில் அந்தக் குறிப்பிடும் ஆட்டக்காரர் நடந்தாரா அல்லது ஆட்டமிழந்தாரா என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

அச்சூழ்நிலையில், பதில் சொல்ல வேண்டிய பகுதியில் நிற்கும் நடுவர், உரிய நேரத்திற்குள் வருகின்ற அந்த முறையீட்டுக்குப் பதில் சொல்லி ஆக வேண்டும்.

 

5. ஒரு நடுவர் தான் கூறிய முடிவை உடனே மாற்றிக் கொள்ளலாமா?

தனது மாற்றிக் கொள்ளும் முடிவை உடனே செய்தாரானால் (Promptly) முன்னர் கூறிய முடிவை மாற்றிக் கொள்ளலாம்.

 

6. ஒருவர் ஆட்டமிழந்தார் (Out) என்பதை நடுவர் எவ்வாறு சைகை மூலம் காட்டுகிறார்?

 

கிரிக்கெட் போட்டி நடுவர்
கிரிக்கெட் போட்டி நடுவர்

 

நடுவர் தனது ஆள்காட்டும் சுட்டு விரலைத் (Index finger) தலைக்கு மேலே கொண்டு சென்று உயர்த்திக் காட்டுவதன் மூலம் சைகை காட்டுகிறார்.

அவர் ஆட்டமிழக்கவில்லை என்றால், அவர் ஆட்டமிழக்கவில்லை என்றே வாயால் கூறிவிடுகிறார்.

 

7. தான் ஒரு முடிவை எடுக்கும் முன், இன்னொரு நடுவரிடம் கேட்டுத்தான் அந்த முடிவை சொல்ல வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா?

அந்த நடுவர் தன்னைவிட ஒருசிறந்த இடத்திலிருந்து கண்காணித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், தான் அடுத்த நடுவரிடம் கேட்டுத்தான் அதாவது கலந்தாலோசித்துத்தான் முடிவினைத் தரவேண்டும் என்று விதிகள் நடுவரைத் தடுக்கவில்லை.

தான் ஒரு முடிவினைத் தரவில்லை என்பதற்காக, தான் தரவேண்டும் என்ற முடிவினைத் தருவதற்காக, அடுத்த நடுவரிடம் ஒரு நடுவர் முறையிடவும் கூடாது.

உரிய முறையில், இருநடுவர்களும் கலந்தாலோசித்த பிறகு, ஏதேனும் முடிவெடுக்கும் நிலையில் ஐயப்பாடு வந்தால், அவ்வாறு எடுக்கப்படும் முடிவு, பந்தடித்தாடும் ஆட்டக்காரருக்கு சாதகமாகத் தான் இருக்க வேண்டும். வேறுமாதிரி அமைந்துவிடக் கூடாது.

 

8. ஒரு பந்தடித்தாடும் ஆட்டக்காரர் தான் ஆட்டமிழந்தவிட்டோம் என்று தவறாக நினைத்துக்கொண்டு (ஆட்டமிழக்காதபோது) மைதானத்தைவிட்டு வெளியேறுகிறார் என்றால், அதற்குரிய வழிமுறை என்ன?.

அவர் ஆட்டமிழக்காதபோது, தவறாக நினைத்துக்கொண்டு வெளியேறுகிறார், அது சரியில்லாத செயல் என்று நடுவர் எண்ணி, அம்முடிவின் மூலம்தான் திருப்தியடைந்தால் நடுவர் குறுக்கிட்டு, அவரை அழைத்து மீண்டும் ஆடச்செய்யலாம்.

குறிப்பாளர்கள்

9. ஒரு போட்டி ஆட்டத்திற்கு எத்தனை குறிப்பாளர்கள் (Scorer)

இரண்டு பேர் உண்டு.

 

10. குறிப்பாளர்களின் கடமைகள் யாவை?

அவ்வப்போது நடுவர் காட்டுகின்ற சைகைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் தாங்கள் ஏற்றுக்கொண்டதைத் தெரிவிக்கும் வகையில் சைகை மூலம் பதில் கூறிவிட வேண்டும்.

அவ்வப்போது ஆட்டக்காரர்கள் எடுக்கின்ற ஓட்டங்கள், எவ்வளவு ஓட்டம், எப்படி ஆட்டமிழக்கிறார்கள், என்ன காரணத்தால் என்பனவற்றையெல்லாம் தெளிவாக, அந்தந்தக் குறியீட்டு முறைகளைப் பயன்படுத்திக் குறித்து வைக்க வேண்டும்.

ஒரு குழுவுக்கு ஒருவர் என்று இரு குறிப்பாளர்கள் பணியாற்றுவதுண்டு.

சில சமயங்களில் ஒருவரே குறிப்பாளராகப் பணியாற்ற நேரிடும். அப்பொழுது அவரது கடமையானது இன்னும் பொறுப்பு நிறைந்ததாகிவிடும்.

ஆட்ட முடிவில், மொத்த ஓட்டங்களின் எண்ணிக்கையைப் பற்றி எந்தவிதமான சந்தேகமும் எழாத வகையில், குறிப்பாளரின் பணி இருக்க வேண்டும்.

எந்த நேரத்திலும், குறிப்பாளர்கள் நடுவர்களுடனோ, ஆட்டத்திலோ இடைபுகுந்து குறுக்கிடாமல் தான் பணியாற்ற வேண்டும்.

எப்பொழுதாவது ஒருமுறை, மொத்த ஓட்டங்களின் எண்ணிக்கையில் சந்தேகம் எழுகின்ற போது, எந்த நேரத்திலும் நடுவர்களைக் கலந்தாலோசித்துக் கொள்ளலாம்.

அத்துடன் ஆட்ட இறுதியில் இரு குழுத்தலைவர்களும், அவர்களது பணியில் நம்பிக்கை வைத்து, ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கையை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

அதே நேரத்தில் அவர்கள் கடமையை அழகாகவும் அருமையாகவும் திறமையாகவும் பொறுப்புணர்வோடும் செய்து முடிக்க வேண்டும்.

 

கிரிக்கெட்டில் முறையீடு, குறிப்பாளர்கள் பற்றிய இந்தத் தகவல்கள், கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் என்ற புத்தகத்தில் இடம் பெற்றவை.

திரு.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதி, ராஜ்மோகன் பதிப்பகம் பதிப்பித்த அந்த நூல், நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு சிறந்த‌ நூல் ஆகும்.

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.