கிரிக்கெட்டில் ரன் (ஓட்டம்) பற்றி அறிவோம்

கிரிக்கெட்டில் ரன் (ஓட்டம்) பற்றி இந்த வார கிரிக்கெட் கேள்வி பதில் பகுதியில் தெரிந்து கொள்வோம்.

 

1. ஓட்டங்கள் (Run) எவ்வாறு எடுக்கவேண்டும்?

ஒரு குழு வெற்றி பெறுவதற்கு, இன்னொரு குழுவைவிட அதிகமான ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ஆட்டத்தின் நோக்கமாகும்.

ஆக, கிரிக்கெட்டில் ரன் (ஓட்டம்) எவ்வாறு எடுக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானதாகும்.

 

கிரிக்கெட்டில் ரன் எடுக்கும் போது
கிரிக்கெட்டில் ரன் எடுக்கும் போது

 

ஒரு பந்தடி ஆட்டக்காரர், தனது பந்தாடும் மட்டையால் பந்தை அடித்தாடிய நிலை பெறுகிறபொழுது அல்லது பந்து ஆட்டத்தில் இருக்கிறபொழுது (In play).

தான் இருக்கின்ற அடித்தாடும் எல்லைக் கோட்டிலிருந்து எதிரே உள்ள அடித்தாடும் எல்லைக் கோட்டுக்கு ஓடிச் செல்ல வேண்டும்.

அதேபோல் அங்கே நிற்கும் அடித்தாடும் ஆட்டக்காரர் இங்கே உள்ள அடித்தாடும் எல்லைக் கோட்டுக்கு வந்து சேர்ந்து விட்டால், ‘ஒரு ஓட்டம்’ என்று கணக்கிடப்படும்.

அதாவது, ஒருவர்க்கொருவர் இடம் மாற்றிக் கொள்ள ஓடி வருதல் தான் “ஓட்டம்” என்பதாகும். ஒரு ‘ஓட்டம்’ (Run) எடுக்க இருவரும் அதில் ஓடி பங்குபெற வேண்டும்.

குறை ஓட்டம்

2. இதில் யாருடைய பெயரில் ‘ஓட்டம்’ கணக்கிடப்படும்?

யார் பந்தை அடித்தாடுகிறாரோ, அவர் பெயரில்தான் ஓட்டம் கணக்கிடப்படும்.

இரண்டு ஆட்டக்காரர்களில் யாராவது ஒருவர் ஆர்வத்தின் அல்லது அவசரத்தின் காரணமாக எதிரே உள்ள எல்லைக்கோட்டைத் தொடாமல், மீண்டும் திரும்பிவந்து, தானிருந்த பகுதியைச் சேர்ந்து, அடுத்து ‘ஓட்டம்’ எடுக்க முயற்சிக்கிறார்.

அப்போது அவர் அந்த எல்லைக்கோட்டைத் தொடாமல் வந்ததால் அதை ‘ஓட்டம்’ என்று கணக்கிடாமல், ‘குறை ஓட்டம்’ (Short Run) என்று நடுவர் கூறிவிடுவார்.

 

குறை ஓட்டம்
குறை ஓட்டம்

 

அதற்கு அடுத்த ஓட்டம் சரியாக எடுத்திருந்தால் அந்த ‘ஓட்டம்’ கணக்கில் சேர்க்கப்படும். அவர் அந்த வாய்ப்பில் எத்தனை ஓட்டங்கள் விதிமுறைகளுக்கேற்ப எடுத்திருந்தாரோ, அதில் ஒரு ஓட்டம் குறையும்.

அதாவது, அவர்கள் மூன்று ஓட்டங்கள் எடுத்து முடித்திருந்தால் அந்த மூன்றில் ஒன்று ‘குறை ஓட்டம்’ என்று குறிப்பிட நடுவர் ஆணை இடுவார்.

அவர்கள் இருவரும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்கள் எடுக்க முயற்சி செய்கின்றனர்.

அப்போது ஒன்றுக்கு மேற்பட்ட ‘குறை ஓட்டங்கள்’ அதில் இடம் பெற்றிருந்தால், எடுத்திருக்கும் அந்த ஓட்டங்கள் எல்லாமே இல்லை என்றே ஒதுக்கித் தள்ளப்படும். ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

 

3. இருவரும் வேண்டுமென்றே ‘குறை ஓட்டம்’ ஓடிக் கொண்டிருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?

இவர்கள் வேண்டுமென்றே குறை ஓட்டம் ஓடுவதைக் கண்டதும் நடுவர், பந்து ஆட்டத்தில் இல்லை (Dead Ball) அதாவது, ஆட்டம் தொடரவில்லை, பந்து நிலைப்பந்தாகிவிட்டது என்று அறிவிப்பார்.

அவர்கள் இருவரும் மேற்கொண்ட ஓட்ட முயற்சிகள் அனைத்தையும் அம்முயற்சியில் எடுத்திருக்கும் ஓட்டங்கள் அனைத்தையும் நிராகரித்துத் தள்ளி விடுவார்.

இந்த நிலைமைக்கு அவர் அவ்வாறு ஆட்படக் காரணம் என்னவெனில்,  அந்த இருவரும் அடித்தாடும் எல்லைக் கோட்டைத் தொடாமல், எல்லைக்கு வெளியே இருப்பர்.

அப்போது தடுத்தாடும் ஆட்டக்காரர்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விதிமுறைகளுக்கேற்ப, அவர்களை ஆட்டமிழக்கச் செய்ய (Out) இயலாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து அமைந்துவிடுகிறது.

 

4. ‘குறை ஓட்டம்’ என்பதற்கு நடுவர் காட்டும் சைகை என்ன?

குறை ஓட்டம் அல்லது அதனைத் தொடர்ந்துஓடி, பந்து ‘நிலைப்பந்தாகி’ விட்டவுடன், நடுவர் குறிப்பாளர்களைநோக்கி, தனது ஒருகையை மேல்நோக்கி மடித்து ஒருவிரலால் தன் அதேகையின் தோள்பகுதியைத் தொட்டுக் குறித்துக்காட்டுவார்.

 

குறை ஓட்டம்’ என்பதற்கு நடுவர் காட்டும் சைகை
குறை ஓட்டம்’ என்பதற்கு நடுவர் காட்டும் சைகை

 

அதே போல் ஒன்றுக்கு மேற்பட்ட பல குறை ஓட்டங்கள் இருந்தால், அவற்றை, குறிப்பாளருக்கு எத்தனை என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி அறிவுறுத்த வேண்டும்.

 

5. அடித்தாடும் பந்தானது, எல்லைக் கோட்டுக்கு வெளியே (Boundary) சென்றால் எத்தனை ஓட்டங்கள் தரப்படும்?

4 ஓட்டங்கள்.

 

6. மைதான எல்லை எவ்வளவு என்று எப்படி தெரியும்?

ஆட்டம் தொடங்குவதற்காக, நாணயம் சுண்டி முடிவெடுப்பதற்கு முன்னரே, இரு குழுத்தலைவர்களும் எல்லையின் அளவைப் பார்த்து, இணக்கமுறப் பேசி  எல்லை எவ்வளவு?.

எந்த நிலையில் எத்தனை ஓட்டங்கள் தருவது போன்றவற்றை எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

கொடிகள் அல்லது கொடிக் கம்புகள் மூலமாக எல்லைக் கோட்டைக் குறித்துக் காட்டி, அவைகளை இணைக்கும் கோடாகச் சுண்ணாம்புக்கோடுகள் அல்லது கற்பனை கோடுகள் இருக்கும்.

எல்லை கடக்கும் பந்து

7. ஓட்டங்கள் பெறுகின்ற எல்லை கடக்கும் பந்து (Boundary) என்று எப்படி கூறலாம்?.

பந்தானது ஆட்டநேரத்தில், மட்டையால் அடிக்கப்பட்டு எல்லைக்கோட்டைக் கடந்து போத‌ல்.

எல்லைக் கோட்டருகில் நிற்பவர் பந்தைப் பிடித்தவாறு வெளியே போய் விடுத‌ல்.

 

எல்லை கடக்கும் பந்து
எல்லை கடக்கும் பந்து

 

அது முறையாக எல்லையைக் கடந்தது என்று நடுவர் அபிப்ராயப்படுத‌ல்.

மேற்கூறிய நிகழ்வுகளில் பந்து எல்லையைக் கடந்தது என்றே கணக்கிடப்படும்.

அதனால், பந்து எல்லைக் கோட்டை கடக்கும் வரை எடுத்திருக்கும் ஓட்டங்கள் தான் கணக்கில் கொள்ளப்படும்.

எல்லைக்கப்பால் பந்து போய் விடுவதற்குமுன் எடுக்கின்ற ஓட்டங்கள் நான்குக்கு மேல் இருந்தால், அவைகள் கணக்கில் கொள்ளப்படும்.

ஆனால், ஆத்திரத்திலும் அவசரத்திலும் நிதானமிழந்து ‘வீண்எறி’ (Over throw) எறிந்து விடுவதின் மூலம் எல்லையைக் கடந்துவிடுகிற பந்துக்காக 4 ஓட்டங்களும், அதற்குமுன் எடுத்திருந்த ஓட்டங்களுடன் சேர்த்து கணக்கிடப்படும்.

அத்துடன், அந்தந்த மைதானத்தில் அதற்கு முன் கொடுக்கப்பட்டு பரவலாக நிலவிவரும் பழக்கத்திலிருந்து ஓட்டக் கணக்கு நிர்ணய முறைகளையே நடுவர் வழக்கமாகப் பின்பற்றி அளிப்பார்.

இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமானால், எல்லைக் கோட்டைப் பந்து தொட்டுவிட்டாலே, எல்லை கடந்தது என்றே கொள்ளப்படும்.

அத்துடன் பந்தைத் தடுத்தாடுபவர், கையிலிருக்கும் பந்துடன் எல்லைக் கோட்டைக் கடந்துவிட்டாலும் அல்லது உடம்பின் ஒரு பகுதியால் கோட்டைத் தொட்டுவிட்டாலும் பந்து எல்லை கடந்தது என்றே கூறப்படும்.

 

8. நடுவர் மீது பந்து பட்டால் எப்படி தீர்மானிப்பது?

ஆடுகளத்தில் இருக்கும் ஒரு ஆள் அல்லது தடங்கல் பொருள் எதுவாக இருந்தாலும், நடுவர்கள் முன்னரே பேசி முடிவு செய்திருந்தாலொழிய அது எல்லை என்று கூறப்படமாட்டாது.

அவர்கள் அது எல்லை என்று குறித்து வைத்திருந்தால்தான் எல்லை என்று ஏற்றுக்கொள்ளப்படும்.

அதேபோல் நடுவர் மீது பட்டால், அது எல்லையல்ல. ஆடுகள மைதானத்தில் பந்து உள்ளது என்றே கருதப்படும்.

அது போலவே, காட்சித் தெளிவுக்காகவும், கண் கூசாமல் இருப்பதற்காகவும் வைக்கப்படுகின்ற திரைப் பலகைகள் (Screen Boards) ஆடுகளத்தில் உள்ளதாக அதாவது மைதானத் தரையிலிருப்பதாகவே ஏற்றுக்கொள்ளப்படும்.

6 ஓட்டங்கள்

9. நடுவர் 6 ஓட்டங்கள் அளிப்பது எப்பொழுது?

பந்து உருண்டு எல்லையை கடந்து விடுகின்ற பொழுது 4 ஓட்டங்கள் தருவது பொதுவான விதி முறையாகும்.

ஆனால், மட்டையாளரால் அடிக்கப்படும் பந்து, தரையில் படாமல், மைதான எல்லைக் கோட்டை அல்லது எல்லைக்கு அப்பால் போய் விழுகின்ற பந்துக்காகத்தான் 6 ஓட்டங்கள் (Six) கொடுக்கப்படுகின்றன.

மைதானத்திற்கு அப்பால் போய் விழுகின்ற பந்தானது, மைதானத்தில் உள்ள தடுத்தாடும் ஆட்டக்காரர்களைத் தொட்டுவிட்டுப் போயிருந்தாலும், அதற்கு 6 ஓட்டங்கள் உண்டு.

அதேபோல், மைதான எல்லைக் கோட்டின் மேல் விழுந்தாலும், அல்லது திரைப்பலகைகள் மீது பந்து விழுந்தாலும், அது எல்லைக்கு அப்பால் போகவில்லை என்று கருதப்படும். அதற்கு 6 ஓட்டங்கள் கிடையாது.

இதே நிலைதான் தடுத்தாடும் ஒருவர் மைதான எல்லைக்கோட்டின் மேல் நின்றுகொண்டு பந்தைப் பிடித்தால் அது எல்லையைக் கடந்தது ஆகாது.

அவர் மைதான எல்லைக்குள்ளே நின்று கொண்டு, எல்லைக்கு வெளியே போகும் பந்தைப் பிடித்தாடலாம். அப்பொழுது அந்தப் பந்து எல்லையைக் கடந்ததாகாது.

ஆனால், அவர் எல்லைக்குள்ளே நின்று கொண்டு இருந்தாக வேண்டும் என்பது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.

 

10. நடுவர் 4 ஓட்டங்கள், 6 ஓட்டங்கள் இவைகளுக்கு காட்டும் சைகைகள் யாவை?

பந்து எல்லைக் கோட்டுக்கு வெளியே உருண்டோடிவிட்டால், நான்கு ஒட்டங்கள் என்று குறிக்க – ஒரு கையை பக்கவாட்டில் வீசி அசைத்துக் காட்டியும்.

 

எல்லை கடக்கும் பந்திற்கான நடுவரின் சைகை
எல்லை கடக்கும் பந்திற்கான நடுவரின் சைகை

 

எல்லைக்கு அப்பால் போய் விழுகின்ற பந்தை, 6 ஓட்டங்கள் என்று கூற இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திக் காட்டியும் நடுவர் சைகைகள் செய்வார்.

 

6 ஓட்டங்கள் என்பதிற்கான‌ நடுவரின் சைகை
6 ஓட்டங்கள் என்பதிற்கான‌ நடுவரின் சைகை

 

 

 கிரிக்கெட்டில் ரன் பற்றிய இந்தத் தகவல்கள், கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் என்ற புத்தகத்தில் இடம் பெற்றவை.

திரு.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதி, ராஜ்மோகன் பதிப்பகம் பதிப்பித்த அந்த நூல், நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு சிறந்த‌ நூல் ஆகும்.

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.