நாணயம் சுண்டுதல், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்

கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், குழுத்தலைவன், நாணயம் சுண்டுதல், இடைவேளை நேரம் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

1. ஆட்டத்தைத் தொடங்க, நாணயம் சுண்டுவதில் உள்ள முறை யாது?

இரு குழுத் தலைவர்களும், இந்த நாணயம் சுண்டும் வாய்ப்பில் (Toss) பங்கு பெறுவார்கள்.

அவர்கள் ஆட்டம் தொடங்கக் குறித்திருக்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக விளையாட்டு மைதானத்திற்குள் சென்று, நாணயம் சுண்டிவிட்டு, ஆடும் வாய்ப்பினைப் பற்றி முடிவு கூறுவார்கள்.

நாணயம் சுண்டும் செயலுக்கு முன்னதாகவே ஆட்டக்காரர்களின் பெயர்களை இருவரும் கொடுத்து விடவேண்டும்.

பிறகு பெயர்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றாலும் முடியாது. எதிர்க்குழுத் தலைவர் இணங்கினால்தான் மாற்றிக் கொள்ள முடியும்.

 

2. ஒரு குழுவிற்கு எத்தனை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் உண்டு?

11 கிரிக்கெட் ஆட்டக்காரர்கள். எந்தத் தருணத்திலும் ஒரு குழுவில் 11 ஆட்டக்காரர்களுக்கு மேல் அமையவும் கூடாது; தடுத்தாடவும் (Field) கூடாது.

 

3. மாற்றாட்டக்காரர்கள் எத்தனை பேர் ஒரு குழுவிற்கு இருக்கலாம்?

எத்தனை பேர் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு எந்த விதிகளிலும் கூறப்படவில்லை. அது அந்தந்தப் போட்டி நடத்தும் நிர்வாகக் குழுவின் முடிவுக்கே விடப்பட்டிருக்கிறது.

ஆனால் மாற்றாட்டக்காரர்களாக ஆட வருபவர்களுக்கென்று, ஒருசில விதிமுறைகள் மட்டும் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

 

4. மாற்றாட்டக்காரர்களுக்குரிய (Substitutes) விதி முறைகள் என்ன?

நிரந்தர ஆட்டக்காரர் (Regular Player) ஒருவருக்கு ஆடும் நேரத்தில் உடல் சுகவீன முற்றாலோ அல்லது காயமடைந்துவிட்டாலோ, அவருக்குப் பதிலாக, எதிர்க் குழுத் தலைவனின் சம்மதத்தின் பேரில், ஒரு மாற்றாட்டக்காரர் ஆடுகளத்தில் இறங்கி ஆட அனுமதியுண்டு.

அவ்வாறு ஆட வருபவர், பந்தைத் தடுத்தாடலாம் (Field) அல்லது காயமுற்ற ஆட்டக்காரர் அடித்தாடும் போது, இவர் விக்கெட்டுகளுக்கிடையில் ஓடி ‘ஓட்டம்’ (Run) எடுக்கலாம்.
ஆனால் அவர் பந்தை அடித்தாடவோ (Bat) அல்லது பந்தை எறிந்தாடவோ (Bowl) முடியாது.

அதுவும் தவிர, எதிர்க்குழுத் தலைவன் நிற்கக் கூடாது என்று குறிப்பிட்டுக் கூறும் இடங்களில் (Position) நின்றுகொண்டும் அவர் பந்தைத் தடுத்தாடவும் முடியாது.

 

5. மாற்றாட்டக்காரர் ஆடிய இடத்திற்கு மீண்டும் ஆட வருகின்ற நிரந்தர ஆட்டக்காரர்களுக்கு உரிய நிலை என்ன? அவர் மாற்றாட்டக்காரர்போல தான் நடத்தப்படுவாரா?

அல்ல, அவர் மீண்டும் ஆடும் வாய்ப்பினைப் பெறும்பொழுது, பந்தை அடித்தாட, தடுத்தாட எறிந்தாட ஆகிய எல்லா ஆட்ட உரிமைகளும் உண்டு.

 

6. காயமுற்ற ஆட்டக்காரருக்காக, விக்கெட்டுகளுக்கு இடையே ‘ஓட்டம்’ எடுக்க ஓடும் மாற்றாட்டக்காரர், ஓட்டத்தில் ஆட்டமிழந்தால் (Run Out) என்ன ஆகும்?

மாற்றாட்டக்காரர், விதிமுறைகளுக்கேற்ப ஆட்டமிழந்தால், யாருக்காக அவர் ஓடினாரோ, அந்தக் காயமுற்ற ஆட்டக்காரரும் ஆட்டமிழந்து, ஆடும் வாய்ப்பை இழக்கிறார் என்பதே அர்த்தமாகும்.

 

7. குழுத் தலைவனின் (Team Captain) பொறுப்பு என்ன?

ஒரு குறிப்பிட்ட முறை ஆட்டம் தொடங்குவதற்கு முன் (Inning), தனது குழுவிலுள்ள ஆட்டக்காரர்களின் பெயர்களை எழுதி குறிப்பாளரிடம் கொடுத்துவிட வேண்டும்.

இவ்வாறு, குறித்துத் தரும் ஆட்டக்காரர்களின் பட்டியலை, எக்காரணத்தைக் கொண்டும் எதிர்க்குழுத் தலைவன் ஏற்றுக் கொண்டாலொழிய, ஆட்டக்காரர்களை பிறகு மாற்றிக்கொள்ள முடியாது.

ஆகவே பெயர்ப் பட்டியல் தருவதற்குமுன், ஆழ்ந்து சிந்தித்தே முடிவுக்கு வரவேண்டும்.

முதலில் யார் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதற்காக, ஆடுகின்ற மைதானத்திற்குள் சென்று, நாணயத்தைச் சுண்டி, எறிவதன் மூலம், இரு குழுத் தலைவர்களும் முடிவெடுக்க வேண்டும்.

எப்பொழுது ஆட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருக்கும் ஆட்டத்தொடக்க நேரத்திற்கு 1.5 நிமிடங்களுக்கு முன்னதாகவே, இருகுழுத்தலைவர்களும் மைதானத்தில் நாணயம் சுண்டி முடிவு காணவேண்டும்.

நாணயம் சுண்டுவதில் (Toss) வெற்றி பெற்றக் குழுத்தலைவர், பந்தெறிந்தாடுவதா (Bowl) அல்லது அடித்தாடுவதா (Bat) என்ற முடிவினை எடுத்து, எதிர்க் குழுத் தலைவருக்குக் கூறிவிட வேண்டும்.

கூறிய முடிவை, பிறகு எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றிக் கொள்ளவே கூடாது.

ஆட்ட நேரத்தைக் காட்டுவதற்காக, எந்தக் கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் குழுத் தலைவர்கள் இருவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆட்ட மிழந்து வெளியே போகின்ற ஒரு பந்தடி ஆட்டக்காரருக்குப் பதிலாக, உள்ளே ஆடச் செல்லும் அடுத்த ஆட்டக்காரர் 2 நிமிடங்களுக்குள் பந்தாடும் பகுதிக்கு வந்து சேர வேண்டும்.

வெளியே வருகிற ஆட்டக்காரர் மைதானத்தை விட்டு வந்துவிடுவதற்கு முன், அடுத்த பந்தடி ஆட்டக்காரர் மைதானத்திற்குள் சென்றுவிட்டாரா என்பதைக் கண்காணிக்கவும், ஆட்டக்காரரை உடனடியாக அனுப்புகின்ற பொறுப்பும், குழுத்தலைவர்களைச் சார்ந்ததாகும்.

ஆட்டம் முடிவுற்ற பிறகு, குறிப்பேடுகளை நுண்ணிதின் ஆராய்ந்து, குறிக்கப்பட்டிருக்கும் ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கையை சரி பார்த்துத் தெரிந்து திருப்தியுறுதல், அவரது தலையாயக் கடமையாகும்.

 

8. ஒரு குழுவின் தலைவன், ஆடுவதற்குக் குறித்த நேரத்திற்குள் வராமல் இருக்கின்ற சூழ்நிலை அமைந்தால், என்ன செய்வது?

அவர் வராதபொழுது, குழுவின் துணைத் தலைவர் (Vice-Captain) மேலே குறித்திருக்கும் குறிப்புகளையெல்லாம் விதிகளுக்கேற்ப ஏற்று செயல்பட வேண்டும்.

 

9. ஒரு போட்டி ஆட்டம் (Match) நடந்து கொண்டிருக்கும் பொழுது, இடையிலே வேறொரு இடத்திற்குப் பந்தாடும் தரைப்பகுதியை (Pitch) மாற்றி ஆடலாமா?

போட்டி ஆட்டம் தொடங்குவதற்காக நாணயத்தைச் சுண்டி விடுவதற்குமுன், பந்தாடும் தரைப் பகுதியை செம்மையுறத் தயார் செய்வதற்கான பொறுப்பை மைதான நிர்வாகிகள் ஏற்றிருக்கின்றார்கள்.

ஆட்டம் தொடங்கிய பிறகு அதனைக் கண்காணிக்கவும், ஆக்க பூர்வமான முறையில் அதைக் காத்துக் கொள்ளவும் போன்ற பொறுப்பினை நடுவர்கள் மேற்கொள்கின்றார்கள்.

போட்டி ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது எக்காரணத்தைக் கொண்டும், பந்தாடும் தரைப் பகுதியை மாற்றவே கூடாது.

அந்தப் பகுதி விளையாடுவதற்குத் தகுதியற்றதாக இருக்கிறது என்று இரு குழுத் தலைவர்களும் ஒத்துக் கொண்டாலொழிய பந்தாடும் தரையை மாற்றி ஆட முடியாது.

 

10. ஒரு போட்டி ஆட்டத்திற்கு எத்தனை முறை ஆட்டம் (Inning) உண்டு?

2 முறை ஆட்டங்கள் உண்டு. ஒரு முறை ஆட்டம் என்பது ஒரு முறை பந்தெறிந்தாடி (Bowling) ஒரு முறை அடித்தாடி (Batting) விளையாடுவது.

அதுபோல, ஒவ்வொரு குழுவும் இரு முறை ஆடும் வாய்ப்பினைப் பெறுகிறது. அந்த முறையை ஒரு குழு மாற்றி ஒரு குழு (Alternate) என்றுதான் ஆட வேண்டும்.

 

11. ஒரு முறை ஆட்டத்திற்கும் இன்னொரு முறை ஆட்டத்திற்கும் இடையே உள்ள இடைவேளை நேரம் எவ்வளவு?

10 நிமிடங்கள் உண்டு. அதற்குள் தடுத்தாடியவர்கள், தங்களது தங்கும் இடத்திற்கு வந்து, தங்களை அடித்தாடத் தயார் செய்து கொள்ளவும், அடித்தாடிய குழு, மைதானத்திற்குள் சென்று தடுத்தாடுவதற்குத் தங்களை ஆயத்தமாக்கிக் கொள்ளவும் வேண்டும்.

 

12. நண்பகல் உணவுக்குத் தரப்படுகின்ற இடைவேளை நேரம் எவ்வளவு?

ஏற்கனவே இரு குழுவினரும் பேசி, ஒரு முடிவுக்கு வந்திருந்தாலொழிய, நண்பகல் உணவுக்காகத் தருகின்ற இடைவேளை நேரம் 45 நிமிடங்களுக்கு மேல் போகக்கூடாது.

 

13. பந்தடித்தாடிய ஒரு ஆட்டக்காரர் ஆட்டமிழந்து, அவரிடத்தில் போய் ஆடப்போகும் ஆட்டக்காரர் (Batsman) எத்தனை நிமிடங்களுக்குள் மைதானத்திற்குள் ஆட வந்துவிட வேண்டும்?

2 நிமிடங்கள் தான்.

 

14. ‘விளையாடத் தொடங்கு’ (Play) என்று நடுவர் கூறிய பிறகு, விக்கெட்டை நோக்கிப் பந்தை எறிந்து பார்க்க (Trial Ball) ஒரு பந்தெறியாளருக்கு (Bowler) எத்தனைத் தடவை அனுமதிக்கப்படுகிறது?

மாதிரிப்பந்துகள் எறிந்து பார்க்க அனுமதியே கிடையாது. விளையாடத் தொடங்கு என்றதும் உடனே பந்தை எறிந்து, ஆட்டத்தைத் தொடங்கிட வேண்டியதுதான்.

 

15. ஒரு பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழந்து வெளியேறுகிறார் (Out). இன்னொரு ஆட்டக்காரர் ஆடவருவதற்குள் எறிந்து பழக பந்தெறியாளர்களுக்கு அனுமதி உண்டா?

எறிந்து பழக முடியாது. அதோடு இன்னொரு ஆட்டக்காரர் வைத்திருக்கும் மட்டையை வாங்கிக்கொண்டு, ஒருவர் பந்தை எறிய அதை அடித்தாடுவதும் கூடாது.

பந்தெறியும் பயிற்சி (Bowling Practice) விளையாட்டு நடக்கின்ற எந்த நேரத்திலும் தவிர்க்கப் படவேண்டியதாகும். இது தடுக்கப்பட்டிருக்கிறது.

 

கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், குழுத்தலைவன், நாணயம் சுண்டுதல், இடைவேளை நேரம் பற்றிய இந்தத் தகவல்கள், கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் என்ற புத்தகத்தில் இடம் பெற்றவை.

திரு.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதி, ராஜ்மோகன் பதிப்பகம் பதிப்பித்த அந்த நூல், நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு சிறந்த‌ நூல் ஆகும். 

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.