கிரிக்கெட் பந்து, விக்கெட், எல்லைக்கோடு

1. கிரிக்கெட் பந்து – அதன் கனமும் சுற்றளவும் எவ்வளவு?

சிவப்பு நிறமுள்ள கிரிக்கெட் பந்தின் கனம் 156 கிராமுக்குக் குறையாமலும், 163 கிராமுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தக்கையாலும், தோல் மற்றும் முறுக்கேறிய நூல்களாலும் ஆன அதன் சுற்றளவானது, 8 ¾ அங்குலத்திற்குக் குறையாமலும், 9 அங்குலத்திற்கு மேற்படாமலும்  அமைந்திருக்க வேண்டும்.

கிரிக்கெட் பந்து சிவப்பாக இருக்க வேண்டும் என்று விதிகளில் குறிப்பிடவில்லை என்றாலும் பந்துக்கு சிவப்பு நிறம் என்றே எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகி இருக்கிறது.

 

பெண்கள் கிரிக்கெட் பந்து கனம் 140 கிராமுக்குக் குறையாமலும், 151 கிராமுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அதன் சுற்றளவானது, 8.25 அங்குலத்திற்குக் குறையாமலும், 8.88 அங்குலத்திற்கு மேற்படாமலும்  அமைந்திருக்க வேண்டும்.

 

13 வயதிற்குட்பட்ட சிறுவர் கிரிக்கெட் பந்து கனம் 133 கிராமுக்குக் குறையாமலும், 143 கிராமுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அதன் சுற்றளவானது, 8.06 அங்குலத்திற்குக் குறையாமலும், 8.69 அங்குலத்திற்கு மேற்படாமலும்  அமைந்திருக்க வேண்டும்.

 

2. மேலே கூறிய அமைப்பில் பந்து இருந்தால், ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் அதனைக் கொண்டு போய் ஆடப் பயன்படுத்தலாமா?

பந்தை ‘டெஸ்ட்’ ஆட்டத்திலிட்டுப் பயன்படுத்துவதற்கு முன்பு, இரு குழுத் தலைவர்களும், நடுவர்களும், அதனை பரிசோதனை செய்து அங்கீகரித்திட வேண்டும்.

 

3. ஆடிக்கொண்டிருக்கும் போது, ஆட்ட நடுவில் பந்து காணாமல் போனால் என்ன செய்வது?

பந்து காணாமல் போய்விட்டால், வேறொரு பந்தை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் விளையாட்டைத் தொடங்க நடுவர் அனுமதிப்பார்.

ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Batsman) அடித்தாடிய பந்தை, தடுத்தாடிய ஆட்டக்காரர்கள் கண்டுபிடிக்க முடியாமற்போகிறபோது அதாவது காணாமல் போய்விட்டது என்று அவர்கள் கூறுகிறபொழுது, அதனைத் தொடர்ந்து, அந்தப் பந்தை அடித்தாடிய ஆட்டக்காரருக்கு 6 ஓட்டங்கள் (Runs) நடுவரால் கொடுக்கப்பட, அது அவரது குறிப்பேட்டில் குறித்துக் கொள்ளப்படும்.

தடுத்தாடிய குழு (Fielding Side) அந்தப் பந்து காணாமற் போய்விட்டது என்று கூறுவதற்குள்ளாகவே, 6 ஓட்டங்களுக்கு மேல் அந்த ஆட்டக்காரர்கள் (இருவரும்) ஓடி எடுத்திருந்தால், அத்தனை ஓட்டங்களும் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

 

4. காணாமற் போய்விட்ட பந்திற்குப் பதிலாக, புதிய பந்து ஒன்றைக் கொண்டு வந்து ஆடலாமா?

ஆட முடியாது. ஓவ்வொரு முறை ஆட்டம் (Inning) தொடங்குகிறபொழுதுதான், புதிய பந்தினைப் பெற்றுக் கொண்டு ஆடலாம்.

ஆட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்பொழுது 75 லிருந்து 85 ‘பந்தெறிந்தவணை’ க்குள்ளாக (Over) புதியதாக ஒரு பந்தினை மாற்றிக் கொண்டு ஆடவும் அனுமதியுண்டு.

(ஒரு பந்தெறி தவணைக்கு 8 எறிகள் என்றிருந்தால், அப்பொழுது 55 லிருந்து 65க்குள்ளாக மாற்றிக் கொள்ளலாம் என்று கிரிக்கெட் ஆட்டத்தைக் கட்டுப்படுத்திக் கண்காணிக்கும் நிர்வாகக் குழுவானது, அந்தந்த நாட்டின் நிலைக்கேற்ப நிர்ணயித்து வைத்திருக்கிறது).

 

5. அப்படியென்றால், ஒரு பந்தெறி தவணைக்கு(Over) எத்தனை எறிகள் (Bowl) உண்டு?

பொதுவாக, ஒரு பந்தெறி தவணைக்கு 6 எறிகள் தான் உண்டு. சில இடங்களில்தான் 8 எறிகள் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

6. பந்து காணாமற்போனது என்றால், அதற்காக எப்படி ஒரு புதிய பந்தினைப் பெற்று ஆட முடியும்?

புதிய பந்தினை அப்படியே மாற்றிக் கொண்டு ஆட முடியாது. ஆனால், காணாமற்போன பந்துக்குப் பதிலாக புதிதாக வரும் பந்தானது, பழைய பந்தைப் போலவே தேய்ந்த நிலையில்(Wear or Use) இருப்பது போல் மாற்றிய பிறகே, ஆடமுடியும்.

 

7. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அல்லாத போட்டிகளில் (Matches), புதிய பந்து பெறுவதற்கு அதே விதிமுறை (75 முதல் 85 பந்தெறி தவணை) பொருந்துமா?

நிச்சயம் பொருந்தாது. நாணயம் சுண்டியெறிந்து போட்டி ஆட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னர், இரு குழுத் தலைவர்களும் ஏற்றுக் கொண்டு முடிவு செய்வதற்கிணங்கவே, புதிய பந்தெறி தவணைகள் நிர்ணயம் செய்யப்படும்.

 

8. பந்தாடும் மட்டையின் (Bat) நீள அகலம் எடை எவ்வளவு?

ஒரு பந்தடி மட்டையின் அகலப் பரப்பானது, எந்த நிலையிலும் 4 ¼ அங்குலத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். அதனுடைய மொத்த நீளப் பகுதியானது 28 அங்குலத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மட்டையின் எடையானது, ஆடுவோரின் அபிப்பிராயத்தைப் பொறுத்ததாகும். பொதுவாக, மட்டையின் எடையானது 1 கிலோ கிராம் எடையிலிருந்து 1.5 கிலோ கிராம் எடை வரை இருப்பது போல் செய்யப்படுகிறது.

அவரவருக்குத் தேவையான, பொருத்தமான எடையுள்ளதாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அது தனிப்பட்ட ஒவ்வொருவரின் வசதியைப் பொறுத்ததாகும்.

 

9. விக்கெட் (Wicket) என்றால் என்ன? அதன் அமைப்பை விவரி.

விக்கெட் என்பது மூன்று குறிக் கம்புகளால் (Stumps) ஊன்றி வைக்கப்பட்டு உருவாகியிருக்கும் ஒரு அமைப்பாகும்.

ஒவ்வொரு குறிக்கம்பும் ஒன்றைப் போல ஒன்று அளவிலும் கனத்திலும் அமைப்பிலும் ஒற்றுமையுடையதாக செய்யப்பட்டிருக்கிறது.

மூன்று குறிக்கம்புகள் பக்கம் பக்கமாகவே ஊன்றப் பட்டிருந்தாலும், அவற்றின் இடைப் பகுதியில் பந்து உள்ளே புகுந்து போகாத அளவு தான் இடைவெளி இருக்கும்.

அந்த மூன்று கம்புகளின், மேல் மட்ட உயரமானது தரையிலிருந்து அளந்து பார்த்தால், 28 அங்குல உயரம் இருப்பது போல அமைந்திருக்க வேண்டும்.

அந்த மூன்று கம்புகளையும் 2 இணைப்பான்கள் (Bails) தலைப் பாகத்தில் இணைத்துக் கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு இணைப்பானும் 4.375 அங்குல நீளம் உள்ளது.

அது, குறிக் கம்புகளின் மேல் வைக்கப்படும்பொழுது, கம்புக்கு மேல் அரை அங்குல உயரத்திற்கு மேல் துருத்திக் கொண்டு இருப்பது போலவும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்பொழுது, அமைக்கப்பட்டிருக்கும் விக்கெட்டின் உயரம் 28 அங்குலம், அகலம் 9 அங்குலம் என்ற அளவில் எப்பொழுதும் அமைக்கப்படுதல் வேண்டும்.

ஒரு போட்டி ஆட்டத்திற்கு 2 விக்கெட்டுகள் உண்டு.

 

10. இரண்டு விக்கெட்டுக்கும் இடையேயுள்ள தூரம் எவ்வளவு?

ஊன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு விக்கெட்டுகளுக்கும் இடைப்பட்ட தூரமானது 20.12 மீட்டர் ஆகும்.

 

11. 20.12 மீட்டர் நீளத்திற்குமேல் விக்கெட்டுகள் அமைக்கப்பட்டு, ஆட்டம் தொடங்கி, இரண்டு மூன்று விக்கெட்டுகளும் விழுந்தபிறகு, விக்கெட்டுகளுக்கு இடையேயுள்ள தூரம் தவறென்று கண்டுபிடித்த பிறகு, எவ்வாறு முடிவெடுக்கக் கூடும்?

ஆட்டம் உடனே நிறுத்தப்பட்டு, விக்கெட்டுகளுக்கிடையேயுள்ள தூரத்தை அளந்து சரிப்படுத்தி, பிறகு மீண்டும் புதியதொரு போட்டி ஆட்டத்தைத் தொடங்கிட வேண்டும்.

 

12. குறிக் கம்புகளுக்கு (Stumps) மேலே உள்ள இணைப்பான்கள் (Bails) பலத்த காற்றினால் அடிக்கடி கீழே விழ நேர்ந்தால் அதற்கு என்ன செய்வது?

பந்தெறியும்போது, விக்கெட்டில் பந்துபட்டு அங்கு வளைமாடப் பகுதி போல அமைந்துள்ள இணைப்பான் அல்லது இணைப்பான்கள் கீழே விழுந்தால் பந்தடிக்கும் ஆட்டக்காரர் ஆட்டமிழந்து விடுவார் (Out).

ஆனால், காற்றினால் இணைப்பான்கள் தானே அடிக்கடி கீழே விழுந்தால், அதனால் பயன் கிடையாது. பதிலாக துன்பம்தானே.

அதற்காக, இரு குழுத் தலைவர்களும் ஏகமனதாக, இணங்கி ஒத்துக் கொண்டால், இணைப்பான்களை குறிக் கம்பிலிருந்து நீக்கிவிட்டே தொடர்ந்து ஆடலாம்.

 

12. விக்கெட்டுகள் வைத்திருக்கும் பந்தாடும் தரைப் பகுதியின் (Pitch) அகலம் எவ்வளவு?

விக்கெட்டில் உள்ள நடுக் குறிக்கம்புக்கு (Middle Stump), 5 அடி அகலம் இருபுறமும் இருக்குமாறு அமைந்திருப்பதுதான் பந்தாடும் தரைப் பகுதியின் அகலமாகும்.

இந்தப் பந்தாடும் பகுதியானது, இருபுறம் உள்ள விக்கெட்டுக்களில் உள்ள பந்தெறி எல்லைக் கோடுகளுக்கு (Bowling Crease) இடையிலே அமைக்கப் பட்டிருக்கும் ஆட்டத் தரையாகும்.

 

14. பந்தெறி எல்லைக் கோட்டின் (Bowling Crease) அளவு என்ன?

குறிக்கம்புகளுக்கு நேராக, அதாவது ஊன்றியுள்ள குறிக்கம்புகளுக்குரியதான நேர்க்கோட்டில், நடுக்கம்பிலிருந்து 8 அடி 8 அங்குல தூரம் (2.64 மீட்டர்) உள்ளது போல குறிக்கப்பட்டிருக்கும் கோடுதான், பந்தெறிபவர் (Bowler) ஓடி வந்து பந்தெறிகின்ற எல்லையைக் குறிக்கும் கோடாகும்.

 

15. அடித்தாடும் எல்லைக்கோடு (Popping Crease) என்றால் என்ன? அது எங்கே குறிக்கப்பட்டிருக்கிறது?

அடித்தாடும் எல்லைக் கோடானது, பந்தாடும் மட்டையுடன் பந்தடித்தாட வந்து நிற்கும் ஒரு ஆட்டக்காரர் நிற்கக் கூடிய இட எல்லையைக் குறிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த ஆட்டக்காரர், தனது உடலின் ஒரு பகுதியாவது அல்லது தான் கையில் பிடித்திருக்கும் மட்டையின் ஒரு பகுதியாவது, அந்த எல்லைக்குள்ளே இருப்பது போல் எப்பொழுதும் நின்று கொண்டிருக்க வேண்டும். அது அவரது பாதுகாப்புப் பகுதியாக அமைந்திருக்கும்.

அப்படியின்றி, அவர் அந்தக் கோட்டுக்கு வெளியே வந்துவிட்டால், அவர் வெளியே இருப்பதாக (Out of his ground) கருதப்படுவார்.

எதிர்க் குழுவினர் அந்த நேரத்தில் பந்தால் விக்கெட்டை வீழ்த்திவிட்டால் அவர் ஆட்டமிழந்துவிடுவார். அதனால்தான், அதை ‘அடித்தாடும் எல்லைக்கோடு’ என்று அழைக்கின்றனர்.

இந்தக் கோடு, பந்தாடும் பகுதியில், பந்தெறி எல்லைக் கோட்டுக்கு இணையாக, (Parallel) குறிக்கம்புகளுக்கு முன்புறத்தில் 4 அடி தூரத்தில் (1.22 மீட்டர்), குறிக்கம்புகளிலிருந்து இருபுறமும் 6 அடி தூரம் (தரையில்) இருப்பது போல கோட்டின் எல்லை குறிக்கப்பட்டிருக்கும்.

 

கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் என்ற புத்தகம், திரு.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதி, ராஜ்மோகன் பதிப்பகம் பதிப்பித்த, நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு சிறந்த‌ நூல் ஆகும். அதன் ஒரு பகுதியே இந்தக் கட்டுரை ஆகும்.

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.