கிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்

கிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள் இந்த வார கிரிக்கெட் கேள்வி பதில் பகுதியில் இடம் பெற்றுள்ளன.

 

1. ஒருவர் கிரிக்கெட் போட்டி நடுவர் எனத் தகுதி பெற விரும்புகிறார். அவ்வாறு வர விரும்புகிறவருக்கு நடுவருக்குரிய தகுதிகள் என்று என்னென்ன இருக்க வேண்டும்?

கிரிக்கெட் நடுவருக்குரிய கடமைகள், மிகவும் முக்கியமான பொறுப்புக்கள் நிறைந்தவைகளாகும்.

அவர் தனது கடமையை திறம்பட ஆற்ற வேண்டுமானால், அவர் தன்னை முழுதும் தகுதி உள்ளவராக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு சில குறிப்புக்களைக் கூறுவார்கள்.

கூர்மையான பார்வை, விதிகளை கசடறக் கற்றுத் தெளிந்திருக்கும் ஞானம், நல்ல செவி மடுக்கும் ஆற்றல், ஆட்டத்தில் பற்று, விதிகளைப் பின்பற்றி முடிவெடுக்கும் புத்திக்கூர்மை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் யாரையும் சார்ந்து நீதி வழங்காத பெருந்தன்மை, ஆழ்ந்து நோக்கி செயல்படுதல் மற்றும் கோபப்படாமல் எதையும் சமாளிக்கும் ஆற்றல் இத்தகைய குணநலன்கள் வாய்ந்தவரே நல்ல நடுவராக விளங்க முடியும்.

கிரிக்கெட் போட்டி நடுவர் கடமைகள்

 

2. போட்டி ஆட்டம் தொடங்குவதற்கு முன், நடுவர்களுடைய கடமைகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன?

1. ஆட்டம் தொடங்குவதற்குரிய நேரத்திற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாகவே, மைதானத்திற்கு நடுவர்கள் வந்துவிட வேண்டும்.

2. விக்கெட்டுகள் சரியாகப் பதிக்கப் பட்டிருக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, தமது திருப்திக்கேற்றவாறு அமைந்திருக்கின்றனவா என்பதை அறிந்து கொண்டு, ஆவன செய்ய வேண்டும்.

3. ஆட்டத்திற்கு உதவுகின்ற உபகரணங்கள் எல்லாம், ஆட்ட விதிகளுக்கேற்ற முறையில் அமைந்திருக்கின்றனவா என்று பரிசோதித்து அறிந்து கொள்ள வேண்டும்.

4. அன்றைய ஆட்டத்தில், ஏதாவது புதிய விதிமுறைகள் இருக்கின்றனவா என்று தெரிந்து கொள்வதுடன், ஆட்டநேரம் எவ்வளவு?. நண்பகல் உணவு இடைவேளை போன்ற இடைவேளை நேரங்களை அறிந்து வைத்துக் கொள்ளவேண்டும்.

5. கால நேரத்தைக் கடைபிடிக்க, எந்தக் கடிகாரம் பின்பற்றப்படுகிறது என்பதை அவர்களுக்குள்ளே கலந்தாலோசித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். அது எந்தக் கடிகாரம் என்பதைக் குழுத் தலைவர்களுக்கும் கூற வேண்டும்.

6. ஆடுகள மைதானத்தின் தன்மையை ஆராய்ந்து, ஆடுதற்கேற்றத் தகுதியுடன் இருக்கின்றதா? அன்றைய காற்றுநிலை, ஒளிநிலை மற்றும் ஆட்டத்தை ஆடவிடாது செய்கின்ற இயற்கை நிலையினையும் பற்றித் தெளிவான கருத்துடன் திகழவேண்டும்.

7. என்னென்ன செய்ய வேண்டும்?. எப்படி எப்படியெல்லாம் முடிவெடுக்க வேண்டும்? என்று இக்கட்டான சூழ்நிலைகளின் தன்மையை முன் கூட்டியே உணர்ந்து, முடிவெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

3. கிரிக்கெட் ஆட்டத்தினைக் கண்காணிக்க எத்தனை நடுவர்கள் உண்டு? அவர்களுடைய கடமைகள் என்னென்ன?

இரண்டு நடுவர்கள் உண்டு.

 

 கிரிக்கெட்டின் இருநடுவர்கள்

ஆட்டத்தைத் தொடங்க, நாணயம் சுண்டிப் பார்ப்பதற்கு முன்னரே இரண்டு நடுவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அவர்கள் இருவரும் ஆளுக்கொரு விக்கெட் அருகே நின்று கொண்டு, விதிகளைத் துணையாகக் கொண்டு, பாரபட்சமற்ற முறையில் முடிவெடுத்து, ஆட்டத்தை நடத்திக் கொடுப்பார்கள்.

ஒரு நடுவர் ஆட்ட நடுவில் காயமுற்று விட்டால், வேறு ஒரு நடுவரை மாற்றிக் கொள்ளலாம்.

மாற்று நடுவராக வருபவரை ஆட்டம் முழுவதும் இடப்புற நடுவராக மாற்றிக் கொள்ளலாம். மாற்று நடுவராக வருபவர் ஆட்டம் முழுவதும் இடப்புற நடுவராகத்தான் (Square leg) பணியாற்றுவார்.

 

4. இரண்டு நடுவர்களின் பணிகள் எவ்வாறு பகுக்கப்பட்டிருக்கின்றன?

பந்தெறிபவர் விக்கெட் பக்கம் நிற்கின்ற நடுவர். அடித்தாடும் ஆட்டக்காரரின் இடப்புறத்திலே (Square leg) நிற்கின்ற நடுவர்.

இவர்கள் இருவரும் தங்களுக்கென்று ஒரு சில பணிகளைப் பிரித்துக் கொண்டிருந்தாலும், முக்கியமான சமயங்களில் இருவரும் கலந்தாலோசித்த பிறகே, ஒரு முடிவுக்கு வருவார்கள்.

பந்தெறிபவர்களின் பக்கம் நிற்கின்ற நடுவரின் பணிகள் :

1. முறையிலா பந்தெறி (No Ball) எது? அடித்தாடும் எல்லைக் கோட்டைக் (Popping crease) கடந்துவந்து பந்தெறிபவர் எறிகின்றாரா? என்பதைக் கண்காணிக்கிறார்.

மேலும் பந்தை வீசி எறிகின்றரா? (Throw), பந்தை எறியும் நேரத்தில் ஒருதுள்ளு துள்ளி (Jerk) எறிகின்றாரா? என்பதையும் கண்காணிக்கிறார்.

2. பந்தெறிபவரது கையிலிருந்து போகின்ற பந்து, பந்தை அடித்தாடும் மட்டையில் படும் வரை, பட்ட பிறகு என்ன நடக்கிறது என்பதையெல்லாம் தொடர்ந்து கண்காணிக்கிறார்.

விக்கெட்டுக்கு முன்னே கால் (L.B.W) மட்டையில்பட்டு பந்து உயர்ந்துபோனதா, தரையில் பட்டுத்தான் மேலே உயர்ந்ததா, மட்டையில் படாமல் போனதா, விக்கெட் காப்பாளர் அந்தப்பந்தைப் பிடித்தாரா (Catch) என்பனவற்றையெல்லாம் கவனிக்கிறார்.

3. அடிபட்டுப் போன பந்து பிடிபட்டதா (Catch), எல்லைக்கு வெளியே உருண்டு போனதா அல்லது வெளியே போய் விழுந்தா, அதற்குள் எத்தனை ‘ஓட்டங்கள்’ எடுத்தார்கள்?

யாராவது (தடுத்தாடும் ஆட்டக்காரர்கள், அடித்தாடும் ஆட்டக்காரர்கள் இவர்களுக்குள்ளே) தடை செய்வதுபோல தடுத்தாடிக் கொண்டார்களா, அல்லது ஓட்டத்திற்கிடையில் ஆட்டமிழந்தார்களா (Run Out) என்பதையும் பார்க்க வேண்டும்.

4. விக்கெட் காப்பாளரிடம் பந்து வருகிறதா, சரியான முறையில் சரியான சமயத்தில் இணைப்பான்களைத் தட்டிவிட்டாரா, அடித்தாடும் ஆட்டக்காரர் உரியநேரத்திற்குள் ஓடி வந்துவிட்டாரா என்பன போன்ற நிகழ்ச்சிகளை கண்காணிப்பார்.

மேற்கூறிய நிகழ்வுகளை எந்த இடத்தில் நின்று பார்த்தால் தெளிவாகத் தெரியும், சரியாகக் காண முடியும் என்று ஒரு இடத்தில் நின்று பார்க்க வேண்டும். அது, அனுபவத்தின் மூலமே பெற முடியும்.

விக்கெட்டின் மறுபுறம் நிற்கும் நடுவரின் பணிகள்

 

விக்கெட்டின் மறுபுறம் நிற்கும் நடுவர்
விக்கெட்டின் மறுபுறம் நிற்கும் நடுவர்

 

இனி, மறு விக்கெட்டின் இடப்புறம் நின்றிருக்கும் நடுவரின் பணிகளைக் காண்போம். (Square leg umpire).

1. முறையிலா பந்தெறியைக் கண்காணித்தல்.

2. அடித்தாடும் ஆட்டக்காரர் தானே தனது விக்கெட்டை வீழ்த்திக் கொண்டாரா (Hit Wicket) என்று பார்த்தல்.

3. விக்கெட் காப்பாளர் விதிமுறைக்கேற்ப குறிக்கம்புகளைத் தட்டி வீழ்த்தினாரா (Stumped) என்று பார்த்துக் கொள்ளுதல்.

4. அதற்குள் அடித்தாடும் ஆட்டக்காரர் எல்லைக் கோட்டுக்கு வந்து சேர்ந்தாரா என்று தெரிந்து சொல்லுதல்.

5. ஓட்டத்தில் ஆட்டமிழத்தல் (Run out), குறை ஓட்டம் (Short run) என்பனவற்றைக் கண்டு கொள்ளுதல்.

6. அடித்தாடும் ஆட்டக்காரரின் வலப்புறமிருக்கும் தடுத்தாடும் ஆட்டக்காரர்கள் (Slips), விக்கெட் காப்பாளர் இவர்கள் மிகவும் தாழ்ந்து வருகின்ற பந்தை (Low catches) தரையில் படாமல் பிடித்திருக்கின்றார்களா?

என்பனவற்றையெல்லாம் நடுத்தன்மையுடன் நடுவர் கவனத்துடன் செயல்பட்டு கண்காணிக்கின்றார்.

 

5. போட்டி ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போது நடுவர்களை மாற்றி, வேறு நடுவர்களை அமர்த்த முடியுமா?

இரு குழுத் தலைவர்களின் சம்மதம் இன்றி ஆட்ட நேரத்தின்போது, எந்த நடுவரையும் மாற்றிவிட முடியாது.

 

6. ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, நடுவர்களின் பணிகள் என்ன?

மேலே கூறியவைகள் அனைத்தும், நடுவர்களின் பணிகள்தான். அவைகளுடன், இவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பந்தாடும் தரைப் பகுதியை (Pitch) உருட்டிப் பக்குவப்படுத்துவதை அவர்கள் மேற்பார்வையிட வேண்டும்.

ஆட்டமிழந்து வெளியே போகின்ற அடித்தாடும் ஆட்டக்காரருக்குப் பதிலாக, புதிதாக வருபவர் 2 நிமிடங்களக்குள் வருகிறாரா என்பதை கவனிக்க வேண்டும்.

மேலும் முறை ஆட்டங்களுக்கிடையில் (Innings) உள்ள இடைவேளை நேரம் 10 நிமிடங்களுக்கு மேலே போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு முறை ஆட்டம் முடிந்தபிறகு, தங்களுக்குள்ளே விக்கெட் இருக்கும் பக்கத்தை மாற்றி நின்று கொண்டு கண்காணிப்பார்கள்.

முறையில்லாத தவறான ஆட்டம் எந்த சமயத்திலும் நிகழாமல் கிரிக்கெட் போட்டி நடுவர் பார்த்துக் கொள்ள வேண்டும்

 

கிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய இந்தத் தகவல்கள், கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் என்ற புத்தகத்தில் இடம் பெற்றவை.

திரு.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதி, ராஜ்மோகன் பதிப்பகம் பதிப்பித்த அந்த நூல், நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு சிறந்த‌ நூல் ஆகும்.

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.