கிருஷ்ண ஜெயந்தி விழாக் கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி என்பது மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாளாகக் கருதப்பட்டு கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும். இவ்விழாவானது உலகெங்கிலும் உள்ள இந்துக்களால்  கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில் அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

இக்கொண்டாட்டத்தில் பகவான் கிருஷ்ணன் தனது பால்ய பருவத்தில் நிகழ்த்திய சாகசங்கள் மற்றும் அவரின் குறும்புத்தனமான விளையாட்டுகள் நினைவு கூறப்படுகின்றன.

இவ்விழாவின் போது நடைபெறும் வழிபாட்டில் குழந்தை கண்ணனுக்கு பிரியமான பால், வெண்ணெய், பழங்கள், உப்பு சீடை, இனிப்புச் சீடை, தட்டை, அவல், அதிரசம், தேன்குழல், இனிப்பு வகைகள் போன்றவை இடம்பெறுவது தனிச்சிறப்பு ஆகும்.

சிறுகுழந்தைகளுக்கு பாலகிருஷ்ணன் வேடமிட்டு வழிபாட்டில் இடம் பெறச் செய்கின்றனர். மேலும் இல்லங்களில் வாயில் படியிலிருந்து வழிபாட்டு அறை வரையிலும் மாவினால் குழந்தையின் காலடித்தடங்கள் வரையப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவின் வடமாநிலங்களில் தகி அண்டி மற்றும் ராசலீலா என்னும் நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் பள்ளிகளில் கிருஷ்ணர் மற்றும் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் மாறுவேடமிட்டு போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன.

இவ்விழா கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இனி இவ்விழா பற்றி விரிவாகக் காணலாம்.

விழாவின் நாயகன்

இவ்விழாவின் நாயகன் கிருஷ்ணன் தனது லீலைகளின் மூலம் எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவன். தனது பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் லீலைகள் புரிந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியவன்.

இந்து மக்களால் வழிபாடு செய்யப்படும் கடவுள்களில் கிருஷ்ணனின் குழந்தைப் பருவமே எல்லோராலும் முதன்மையானதாக நினைவு கூறப்படுகிறது.

ஆயர் பாடியில் கோபியர்களையும், இடையர்களையும் துன்பங்களில் இருந்து பாதுகாத்ததால் இவரின் பிறப்பானது எளியோர்களாலும் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் முறை

இவ்விழாக் கொண்டாட்டத்தின் போது விரதமுறை பின்பற்றப்படுகிறது. அன்றைய தினம் பகல் முழுவதும் விரதம் இருக்கின்றனர்.

மாலை நேரத்தில் வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன. வீட்டின் வாயிற்படி முதல் வழிபாட்டிடம் வரையிலும் மாவினைக் கொண்டு குழந்தையின் காலடித்தடங்கள் வரையப்படுகின்றன.

ஆயர்பாடியில் கண்ணன் குழந்தையாக இருந்த போது, உயரத்தில் கட்டப்பட்டிருந்த பானைகளில் உள்ள வெண்ணையை எடுத்து, யாரும் அறியாத வண்ணம் உண்ணும் போது சிதறிய வெண்ணையில் கால் வைத்து நடந்ததால் உண்டான காலடித் தடங்களை நினைவு கூறும் வகையில், வீடுகளில் குழந்தைக் கண்ணனின் காலடித் தடங்கள் வரையப்படுகின்றன.

இவ்வாறு செய்வதால் குழந்தைக் கண்ணன் வாயிற்படி வழியே வந்து வழிபாட்டு அறையினுள் நுழைந்து தங்களின் வழிபாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் நம்பப்படுகிறது.

வழிபாட்டு அறையில் கிருஷ்ணருடைய உருவப்படமோ, சிலையோ இடம் பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணருக்குப் பிரியமான தட்டை, உப்பு சீடை, இனிப்பு சீடை, அதிரசம், தேன்குழல், இனிப்பு வகைகள், பால், வெண்ணெய், திரட்டுப்பால் போன்றவை படைக்கப்படுகின்றன.

கிருஷ்ணர் முல்லை, மல்லிகை, துளசி ஆகியவை கொண்டு அலங்கரிக்கப்படுகிறார். விளக்கு ஏற்றப்பட்டு தீபதூபங்கள் காண்பிக்கப்படுகின்றன. பகவத்கீதை, கிருஷ்ணர் பற்றிய பாடல்கள் பாடப்படுகின்றன. பின் அருகிலிருப்போர் மற்றும் உறவினர்களுக்கு படையல்கள் வழங்கப்படுகின்றன.

வீட்டில் வழிபாடு முடிந்தபின் அருகிலிருக்கும் கிருஷ்ணர் கோவிலுக்கு வழிபாடு செய்யச் செல்கின்றனர். கோவில்களில் நடுஇரவு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிருஷ்ணர் நள்ளிரவு பிறந்ததால் அதனை நினைவு கூறும் விதமாக நள்ளிரவு வழிபாடு நடைபெறுகிறது. அதன்பின்னரே விரதம் இருப்போர் உணவு உண்டு விரதத்தினை முடிக்கின்றனர். குழந்தைகள் கண்ணன் மற்றும் ராதை வேடங்கள் இட்டு வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனர்.

இவ்விரத முறையைப் பின்பற்றவதால் குழந்தை இல்லாதவர்களுக்கு அழகான, புத்தி கூர்மையான குழந்தைப் பாக்கியம் கிட்டும் என்றும், குழந்தைகள் உள்ளவர்களுக்கு குழந்தைகளின் அறிவு மேம்படுவதோடு நற்சிந்தனையும் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.

தகி அண்டி

தகி அண்டி என்பதற்கு தயிர் கலசம் என்பது பொருள். இந்நிகழ்வு மகாராஷ்டிர மாநிலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தெருக்களில் உயரமான இடங்களில் பானைகளில் தயிர் நிரப்பப்பட்டு கட்டப்படுகிறது. இதனுடன் பணமுடிப்பும் கட்டப்படுகிறது.

இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் கோவிந்தாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பிரமிடுகள் அமைத்து மேலேறி தயிர் கலசத்தை உடைத்து பணமுடிப்பினைப் பெறுகின்றனர். கோவிந்தாக்கள் குழுக்களை அமைத்து இரண்டு, மூன்று தகி அண்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுண்டு.

ஆயர்பாடியில் கண்ணன் தனது நண்பர்களோடு சேர்ந்து பிரமிடு அமைத்து உயரத்தில் கட்டப்பட்டு இருந்த பானைகளில் உள்ள தயிர் மற்றும் வெண்ணெயை எடுத்தார் என்று கருதப்பட்டு இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

ராசலீலா

ராசலீலா என்பது கண்ணன் கோகுலத்தில் கோபியர்களுடன் இணைந்து விளையாடிய லீலைகளை நடனமாடி நடிப்பதாகும். இந்நிகழ்வு வடமாநிலங்களில் நிகழ்த்தப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் குழந்தைகளுக்கு கண்ணன், ராதா மற்றும் மகாபாரத கதாப்பாத்திரங்கள் மாறுவேடமிட்டு போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன.

இவ்விழாவின் போது உறியடி நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன; கோவில்களில் தேரோட்டமும் நடைபெறுகின்றன. கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் இவ்விழாவின் போது லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபட்டு நன்னிலை பெறுவோம்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.