கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

கிருஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இப்பண்டிகை மதம் மற்றும் கலாசாரத்தோடு தொடர்புடையது.

ஏசு கிருஸ்துவின் பிறந்த தினக்கொண்டாட்டமே கிருஸ்துமஸ் ஆகும்.இவ்விழாவினை உலகெங்கிலும் உள்ள கிருத்துவர்கள் மற்றும் கிருத்துவர் அல்லாதோரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

இவ்விழா உலகெங்கிலும் ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் நாள் பெரும்பான்மையான‌ மக்களால் கொண்டாடப்படுகின்றது. ஒரு சிலர் ஜ‌னவரி 6ம் நாள் கிருஸ்துமஸ் கொண்டாடுகின்றனர்.

 

இயேசு கிருஸ்து பிறப்பு பற்றிய கதை

நாசரேத் என்ற நகரைச் சேர்ந்த கன்னிமேரிக்கும், யோசேப்புக்கும் திருமணம் நிச்சமாயிருந்தது. அப்போது ஒரு நாள் கன்னிமேரியிடம் காபிரியேல் என்ற இறை தூதர் இறைவனின் அருளால் ஒரு குழந்தை மேரி மூலம் பிறக்க இருப்பதாகவும், அதற்கு ஏசு என்று பெயரிடுமாறு கூறிவிட்டு மறைந்தார்.

மேரி கருவுற்றிருந்ததை அறிந்து யோசேப் மேரியை விலக்கிவிட நினைத்தபோது காபிரியேல் யோசேப்பிடம் மேரி கருவில் வளரும் குழந்தை இறைவனுடையது. எனவே மேரியை மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். யோசேப் மேரியை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

மேரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது அகுஸ்துராயன் என்ற மன்னனின் மக்கள் தொகை கணக்கீடு என்ற கட்டளைப்படி யோசேப்பும், மேரியும் தங்களைப் பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவீதின் பெத்த‌லகேம் நகருக்கு சென்றனர்.

தங்குவதற்கு இடம் கிடைக்காத நிலையில் இருவரும் பெத்த‌லகேமில் மாட்டுத் தொழுவம் ஒன்றில் தங்கினர். அங்கு மேரி ஏசுவை பெற்றார். இறை தூதன் பிறந்ததன் அடையாளமாக விண்மீன் ஒன்று விண்ணில் தோன்றியது. ஏசு கிருஸ்து பிறந்த தினமே கிருஸ்துமஸ் என்று கொண்டாடப்படுகிறது.

 

கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

இவ்விழாக் கொண்டாட்டத்தில் கிருஸ்துமஸ் மரம், கிருஸ்துமஸ் தாத்தா எனப்படும் சான்டா கிளாஸ், கேரல் சர்வீஸ், கிருஸ்துமஸ் மணிகள், கிருஸ்துமஸ் கேக், கிருஸ்துமஸ் குடில்  மற்றும் நட்சத்திரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

 

கிருஸ்துமஸ் மரம்

கிருஸ்துமஸ் மரத்தினை வைத்து கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஜெர்மானியர்கள் ஆவார். அவர்கள் ப்ரூச், பைன், பிர் போன்ற பச்சை நிறமுக்கோண வடிவ மரங்களின் கிளைகளை நட்டு அதில் ஆப்பிள், கொட்டைகள் கொண்டு அலங்கரித்தனர். மார்ட்டின் லூதர் கிங் அதில் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டாடும் முறையை அறிமுகப்படுத்தினார்.

தற்போது செயற்கையான (அல்லது) இயற்கையான மரத்தில் நட்சத்திரங்கள், சாக்லேட், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் மின் விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட‌ கிறிஸ்துமஸ்மரம் இவ்விழா கொண்டாட்டத்தில் இடம் பெறுகிறது.

நோய் மற்றும் தீங்கு செய்பவைகளிடமிருந்து விலக்கி மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை தரும் பொருட்டு இது இவ்விழாவில் இடம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

 

கிருஸ்துமஸ் தாத்தா என்கின்ற சான்டாகிளாஸ்

4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செயின்ட் நிக்கோலஸ் என்பவரின் நினைவாக கிருஸ்துமஸ்தாத்தா என்றழைக்கப்படும் சான்டாகிளாஸ் உருவாக்கப்பட்டார்.

நிக்கோலஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு-வெள்ளை அங்கி மற்றும் தொப்பி, கருப்பு பெல்ட், கண்ணாடி, கருப்பு காலணிகள் மற்றும் தோளில் சுமக்கும் பரிசுகள் அடங்கிய பை ஆகியவை இவரின் அடையாளங்களாகும்.

இவர் குழந்தைகளுக்கு கிருஸ்துமஸ்விழாவின் போது பரிசுப் பொருட்களை வழங்குவார். குழந்தைகளிடம் நன்னடத்தையைப் போதித்து பரிசு வழங்குவது இவரது பணியாகும்.

 

கேரல் சர்வீஸ்

கேரல் சர்வீஸ் என்பது குழந்தை ஏசுவை வாழ்த்தியும், அவரின் பிறப்பு மற்றும் உலகிற்கு வந்த நோக்கம் பற்றிய பாடல்கள் பாடுவது ஆகும். 1847ல் பிரான்சில் கேரல் சர்வீஸ் ஆரம்பிக்கப்பட்டு பின் உலக நாடுகளுக்கு பரவியது. தற்போது இவ்விழாக் கொண்டாட்டத்தில் இடம் பெறுகிறது.

 

கிருஸ்துமஸ் மணிகள்

இவ்விழாவின் போது விழா ஆரம்பித்ததை உணர்த்துவதற்காக கிருஸ்துமஸ்மணிகள் ஒலிக்கப்படுகின்றன. கேரல் சர்வீஸின் போது கையில் சிறு மணி கொண்டு ஒலி ஒலிக்கச் செய்யப்படுகிறது. சில கேரல் சர்வீஸில் பாடல்கள் பாடாமல் மணி மட்டும் ஒலிக்கச் செய்யப்படுகிறது.

 

கிருஸ்துமஸ்குடில்

கிருஸ்துவின் பிறப்பினை நினைவூட்டும் விதமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி அதில் குழந்தை ஏசு, மேரி, யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் போன்ற உருவங்களின் பொம்மைகளை வைத்து அலங்கரிப்பர்.

 

நட்சத்திரம்

ஏசு கிருஸ்து பிறந்ததன் அடையாளமாக விண்ணில் தோன்றிய நட்சத்திரத்தை நினைவுப்படுத்தும் விதமாக காகிதங்களினால் செய்த நட்சத்திர உருவத்தில் மின் விளக்கு கொண்டு அலங்கரித்து ஒளியூட்டப்படுகிறது.

டிசம்பர் 24ம் நாள் நள்ளிரவில் புத்தாடை அணிந்து தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்துவர். அன்று வீடுகளில் விருந்து நடைபெறும். உறவினர்கள், சுற்றத்தார்கள் மற்றும் நண்பர்களுக்கு கேக் மற்றும் இனிப்பு வகைகளை வழங்குவர். வாணவேடிக்கைகளும் இவ்விழாக் கொண்டாட்டத்தில் இடம் பெறும்.

கிருஸ்துமஸ்வாழ்த்து அட்டைகளை அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் 1840ல் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கிருஸ்துமஸன்று புனித நாளாகக் கருதப்படுவதால் புதிய வேலைகளை அன்று தொடங்கும் பழக்கமும் மக்களிடம் காணப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் மன்னர்கள் பலர் கிருஸ்துமஸன்று முடிசூடிக் கொண்ட செய்தியை வரலாற்றின் மூலம் அறியலாம். மேலும் பாரசீக நாட்டில் கிருஸ்துமஸ் அன்று ஒரு நாள் மட்டும் அடிமைகளுக்கு விடுதலை வழங்கும் பழக்கம் இருந்துள்ளது.

கிருஸ்துமஸை போற்றும் விதமாக இந்தோனேசிய நாட்டிற்கு அருகில் உள்ள தீவிற்கு கிருஸ்துமஸ்தீவு என்ற பெயர் வழங்கப்படுகிறது.

அன்பு, இரக்கம், பொறுமை, கருணை ஆகியவற்றைப் போதித்த இயேசு கிருஸ்துவின் பிறந்த நாள் விழாவான கிருஸ்துமஸ் மூலம் எல்லோரிடமும் அன்பு கொண்டு கருணை காட்டி, பொறுமையை கடைபிடித்து வாழ்வின் உன்னத நிலையை அடைய உறுதி கொள்ள வேண்டும்.

– வ.முனீஸ்வரன்

 

Comments are closed.