கிளி – அழகின் சிரிப்பு

கிளி பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; நம் வீட்டிலும் கிளி வளர்க்கலாமா என்று தோன்றும்.

 

              கிளி

மூக்கு,கண்,வால்,பசுமை

இலவின்காய் போலும் செக்கச்
செவேலென இருக்கும் மூக்கும்
இலகிடு மணல் தக்காளி
எழில்ஒளிச் செங்காய்க் கண்ணும்
நிலைஒளி தழுவும் மாவின்
நெட்டிலை வாலும், கொண்டாய்
பலர்புகழ் கின்ற பச்சைப்
பசுங்கிளி வாராய்! வாராய்!

 

கழுத்து வரி, சொக்குப் பச்சை

நீலவான் தன்னைச் சுற்றும்,
நெடிதான வான வில்லைப்
போலநின் கழுத்தில் ஓடும்
பொன்வரி மின் விரிக்கும்!
ஆல், அல ரிக்கொ ழுந்தில்
அல்லியின் இலையில் உன்றன்
மேலுள சொக்குப் பச்சை
மேனிபோல் சிறிது மில்லை!

 

அழகுச் சரக்கு

கொள்ளாத பொருள்க ளோடும்,
அழகினிற் சிறிது கூட்டி
கொள்ளவே செயம் இயற்கை
தான்கொண்ட கொள்கை மீறித்
தன்னரும் கை யிருப்பாம்
அழகெனும் தலைச் சரக்கைக்
கிள்ளிவைத் திட்ட கிள்ளாய்
கிட்டவா சும்மா வாநீ!

 

சொன்னதைச் சொல்லும்

இளித்தவா யர்கள், மற்றம்
ஏமாற்றுக் காரர் கூடி
விளைத்திடும் தொல்லை வாழ்வில்,
மேலோடு நடக்க எண்ணி
உளப்பாங்க றிந்து மக்கள்
உரைத்ததை உரைத்த வண்ணம்
கிளத்திடும் கிளியே என்சொல்
கேட்டுப்போ பறந்து வாராய்!

 

ஏற்றிய விளக்கு

கிளிச்செல்வ மேநீ அங்குக்
கிடந்திட்ட பச்சிலை மேல்
பளிச்சென எரியம் கோவைப்
பழத்தில்உன் மூக்கை ஊன்றி
விளக்கினில் விளக்கை ஏற்றிச்
செல்லல்போல் சென்றாய்! ஆலின்
கிளைக்கிடை இலையும், காயும்
கிடத்தல்போல் அதில் கிடந்தாய்!

 

நிறைந்த ஆட்சி

தென்னைதான் ஊஞ்சல்! விண்தான்
திருவுலா வீதி! வாரித்
தின்னத்தான் பழம், கொட்டைகள்!
திருநாடு வையம் போலும்!
புன்னைக்காய்த் தலையில் செம்மைப்
புதுமுடி புனைந்தி ருப்பாய்!
உன்னைத்தான் காணு கின்றேன்
கிள்ளாய்நீ ஆட்சி உள்ளாய்!

 

இருவகை பேச்சு

காட்டினில் திரியும்போது
கிரீச்சென்று கழறுகின்றாய்
கூட்டினில் நாங்கள் பெற்ற
குழந்தைபோல் கொஞ்சுகின்றாய்!
வீட்டிலே தூத்தம் என்பார்
வெளியிலே பிழைப்புக் காக
ஏட்டிலே தண்ணீர் என்பார்
உன்போல்தான் அவரும் கிள்ளாய்!

 

மக்களை மகிழ்விக்கும்

கொஞ்சுவாய் அழகு தன்னைக்
கொழிப்பாய்நீ, அரசர் வீட்டு
வஞ்சியர் தமையும், மற்ற
வறியர் தமையும், ஒக்க
நெஞ்சினில் மகிழ்ச்சி வெள்ளம்
நிரப்புவாய், அவர் அளிக்கும்
நைஞ்சநற் பழத்தை உண்பாய்;
கூழேனும் நன்றே என்பாய்!

 

கிளிக்குள்ள பெருமை

உனக்கிந்த உலகில் உள்ள
பெருமையை உணர்த்து கின்றேன்;
தினைக்கொல்லைக் குறவன் உன்னைச்
சிறைகொண்டு நாட்டில் வந்து
மனைதொறம் சென்றே உன்றன்
அழகினை எதிரில் வைப்பான்;
தனக்கான பொருளைச் செல்வர்
தமிழ்க்கீதல் போல ஈவார்!

 

ஓவியர்க்குதவி

பாவலர் எல்லாம் நாளும்
பணத்துக்கம், பெருமைக்கும் போய்க்
காவியம் செய்வார் நாளும்
கண், கைகள் கருத்தும் நோக!
ஓவியப் புலவ ரெல்லாம்
உனைப்போல எழுதிவிட்டால்
தேவைக்கப் பணம் கிடைக்கம்
கீர்த்தியும் கிடைக்கும் நன்றே!

– பாவேந்தர் பாரதிதாசன்