கிவி பழம் புளிப்பு கலந்த இனிப்பு சுவையினை உடையது. இப்பழம் தனிப்பட்ட கவர்ந்திழுக்கும் மணத்தினையும் உடையது. இப்பழத்தின் தாயகம் சீனா ஆகும்.
இப்பழம் 20-ம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து நியூசிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் நியூசிலாந்து மூலம் உலகெங்கும் பரவியது.
கிவி மிதவெப்ப மண்டலத்தில் செழித்து வளரும் இயல்பினை உடைய மரக் கொடிவகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இப்பழம் சீனாவில் யாங் தாவோ என்று அழைப்படுகிறது. இப்பழம் சீன நெல்லிக்காய் என்று உலக மக்களால் அழைக்கப்பட்டது.
இப்பழம் பார்ப்பதற்கு நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவையான கிவியைப் போன்று மென்மையாகவும், புசுபுசு என்ற தோற்றத்துடன் காணப்படுவதால் கிவி பழம் என்ற பெயரால் உலகெங்கும் புகழ் அடைந்தது.
இப்பழம் பார்ப்பதற்கு கோழி முட்டை போன்று வெளிப்புறத்தில் பழுப்பு வண்ணத்தில் காணப்படுகிறது.
இப்பழம் உட்புறத்தில் கவர்ந்திழுக்கும் மரகதப் பச்சை வண்ண வழுவழுப்பான நீர்சத்து கொண்ட சதைப்பகுதியைக் கொண்டுள்ளது.
பச்சை வண்ண சதைப்பகுதியில் கூர்முனைகள் வட்ட வடிவில் வெளிறிய நிறத்தில் காணப்படுகின்றன. அதனுள் கறுப்பு நிற விதைகள் காணப்படுகின்றன.
உலகில் மொத்தம் 60 வகையிலான கிவிப்பழங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் சிம்லாவில் முதலில் இப்பழம் பயிர் செய்யப்பட்டது.
இத்தாலி, நியூசிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், சிலி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவை இப்பழத்தினை அதிகளவில் உற்பத்தி செய்கின்றன.
உணவின் அடிப்படையிலும், மருந்தின் அடிப்படையிலும் கிவி பழம் பற்றிய ஆய்வு முடிவுகள் இதனை மருந்துப் பெட்டகம் என்றே குறிப்பிடுகின்றன.
இப்பழம் நியூசிலாந்திலிருந்து ஜீன் முதல் அக்டோபர் வரையிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து நவம்பர் முதல் மே வரையிலும் கிடைக்கிறது.
கிவி பழத்தில் உள்ள சத்துக்கள்
இப்பழத்தில் விட்டமின்கள் ஏ,கே,இ,சி பி1(தயாமின்), பி2(ரிபோஃளோவின்), பி3(நியாசின்), ஃபோலேட்டுக்கள், கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற தாதுஉப்புக்கள், கார்போஹைட்ரேட்டுக்கள், புரோடீன்கள், நார்சத்துக்கள், பைட்டோ நியூட்ரியன்களான பீட்டா கரோடீன், பீட்டா கிரிப்டாக்சாந்தினான், லுடீன்-ஸீக்ஸாதைன் போன்றவைகளும் காணப்படுகின்றன.
கிவி பழத்தின் மருத்துவப் பண்புகள்
நல்ல செரிமானம்
இப்பழமானது அதிக அளவு நார்சத்தினைக் கொண்டுள்ளது. எனவே இப்பழம் உணவினை நன்கு செரிமானம் அடையச் செய்வதுடன் கழிவுகளையும் சரியான முறையில் வெளியேற்றுகிறது. எனவே இப்பழத்தினை உண்டு மலச்சிக்கலிருந்து நிவாரணம் பெறலாம்.
இப்பழத்தில் காணப்படும் புரத நொதியான ஆக்டினிடின் புரத செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பாலிசாக்கரைடுகள் குடலில் புரோ பயோடிக் பாக்டீரியா வளர்ச்சியினைத் தூண்டுவதோடு கெடுதல் செய்யும் நுண்ணுயிர்களை அகற்றுகிறது.
ஆரோக்கிய இயத்தைப் பெற
இப்பழத்தில் இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான பாலிஃபீனால்கள், விட்டமின் சி, விட்டமின் இ, பொட்டாசியம் போன்றவைகள் காணப்படுகின்றன.
இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த குழாய்களில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது இரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவினைக் குறைப்பதோடு இதய இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைதலையும் தடை செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை அடிக்கடி உண்டு ஆரோக்கியமான இதயத்தினைப் பெறலாம்.
தூக்கமின்மைக்கு
இப்பழத்தில் காணப்படும் செரோடானின் தூக்கமின்மைக்கு சிறந்த மருந்தாகும். இப்பழத்தினை உண்டவர்கள் ஆழ்ந்த தூக்கத்தினைப் பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தூக்கமின்மைக்கு இயற்கை மருந்தாக கிவிப்பழம் கருதப்படுகிறது.
இரும்புச் சத்தினை உடல் அதிகளவு உட்கிரகிக்க
இப்பழமானது இரும்புச் சத்தினை உடல் உட்கிரகிக்கும் அளவினை அதிகரிக்கிறது. இப்பழத்தில் காணப்படும் விட்டமின் சி, பைட்டோ நியூட்ரியன்களான லுடீன்-ஸீக்ஸாதைன் உடலில் இரும்புச்சத்தின் அளவினை அதிகரிப்பதோடு இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்களையும் தடுக்கிறது.
கண்கள் பாதுகாப்பிற்கு
இப்பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ, லுடீன்-ஸீக்ஸாதைன் போன்றவை கண்புரை நோய், வயதோதிகத்தினால் ஏற்படும் விழித்திரை சிதைவு நோய் மற்றும் பார்வைக் கோளாறுகள் ஆகியவற்றை சரிசெய்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு கண்களைப் பாதுகாக்கலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு
இப்பழத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான ஃபோலேட்டுகள் அதிக அளவு காணப்படுகின்றன. ஃபோலேட்டுக்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு நரம்புக் குழாய் குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாப்பதோடு குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் திறனையும் மேம்படுத்துகின்றன.
மேலும் இப்பழத்தில் காணப்படும் விட்டமின்கள், தாதுஉப்புக்கள், பிளவனாய்டுகள் கருவில் இருக்கும் குழந்தை மற்றும் தாய்க்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்குகின்றன.
சருமப்பாதுகாப்பு
இப்பழம் ஆரோக்கியமான வழவழப்பான சருமத்திற்கு வழிவகை செய்கிறது. இப்பழத்தில் காணப்படும் விட்டமின் சி-யானது சருமத்தில் ஏற்படும் சிராய்ப்புகள் மற்றும் புண்களை விரைவில் குணப்படுத்துகிறது.
இப்பழத்தில் உள்ள விட்டமின் இ-யானது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாப்பதோடு சருமத்தை புறஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து அவை முதுமை அடைவதைத் தடைசெய்கின்றன.
சிறந்த நோய் எதிர்ப்பாற்றலைப் பெற
இப்பழத்தில் விட்டமின் சி-யானது ஆரஞ்சு, திராட்சைகளில் காணப்படுவதை விட அதிகளவு காணப்படுகிறது. விட்டமின் சி-யானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது.
இப்பழத்தில் உள்ள நுண்ஊட்டச்சத்து பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுதலுக்கு எதிராகச் செயல்படுவதால் சளி உள்ளிட்ட சீசன் நோய்களிலிருந்து இப்பழத்தினை உண்டு நம்மைப் பாதுகாக்கலாம்.
சர்க்கரை நோய்க்கு
இப்பழமானது குறைந்த எரிசக்தியினைக் கொண்டு குறைவான கிளைசெமிக் குறியீட்டினைக் கொண்டுள்ளது. எனவே இது சர்க்கரை நோயாளிக்களுக்கு சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.
உடல் எடையைக் குறைக்க
இப்பழம் குறைந்த அளவு எரிசக்தியினையும், அதிக அளவு நார்ச்சத்தினையும் கொண்டுள்ளது. இப்பழத்தினை உண்ணும்போது அதில் உள்ள நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துவதோடு குறைந்த எரிசக்தியைத் தருகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இப்பழத்தினை உண்ணலாம்.
புற்றுநோய்க்கு
இப்பழத்தில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடிடென்டுகள் வளர்ச்சிதை மாற்றத்தினால் ஏற்படும் ப்ரீரேடிக்கல்களால் டிஎன்ஏவில் ஏற்படும் பாதிப்பினைக் குறைக்கின்றன. இதனால் புற்றுச் செல்களின் வளர்ச்சி தடை செய்யப்படுகிறது. இப்பழத்தினை உண்டு கல்லீரல், மார்பகம், குடல், நுரையீரல் போன்றவற்றில் புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
கிவியைப் பற்றிய எச்சரிக்கை
இப்பழத்தில் ஆக்ஸலேட்டுக்கள் உள்ளதால் சிறுநீரக கற்கள் பாதிப்பில் உள்ளோரும், பால் பொருட்களால் அலர்ஜி உள்ளோரும் உண்ணக் கூடாது.
கிவிப்பழத்தினை தேர்வு செய்யும் முறை
கிவியைத் தேர்வு செய்யும் போது மேற்பரப்பில் வெட்டுக்காயங்கள் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். பழத்தினை மெதுவாக அழுத்தும்போது மென்மையாக உணர்ந்தால் உண்ணத் தயார் என்பதினை அறியலாம்.
பழத்தினை அழுத்தும் போது கடினமாக இருந்தால் ஆப்பிள், வாழை போன்றவற்றுடன் பையில் கட்டி வைக்கும்போது கிவி பழுத்துவிடும். பழுத்த கிவிப்பழங்களை குளிர்பதனப் பெட்டியில் ஓரிரு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
கிவிபழத்தினை உண்ணும் முறை
இப்பழத்தினை தண்ணீரில் நன்கு அலசி விட்டு தோலுடன் உண்ண வேண்டும். நறுக்கிய கிவிபழத்துண்டுகள் விரைவில் நீர்த்து விடும். ஆதலால் உடனடியாக இப்பழத்துண்டுகளை உண்ண வேண்டும். இப்பழமானது பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகிறது. இனிப்புகள், சாலட்டுகள், ஐஸ்கிரீம்கள் ஆகியவை தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
சத்துகள் நிறைந்த கிவியினை அடிக்கடி உண்டு மகிழ்வான வாழ்வுபெறுவோம்.
– வ.முனீஸ்வரன்