கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து என்ற பாடல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அருளிய கோதை மொழி என போற்றப்படும் திருப்பாவையின் ஏழாவது பாசுரம் ஆகும்.
பாவை நோன்பிற்காக இளம் பெண்கள் கூட்டமாகச் சென்று நீராடிவிட்டு இறைவனின் புகழினைப் பாடி வழிபாடு மேற்கொள்வர்.
அவ்வாறு நீராட செல்லும்போது, தங்களின் கூட்டத்தின் தலைவியான பெண் உறங்கிக் கொண்டிருப்பதாகவும், அப்பெண்ணை எழுப்புவதாகவும் அமைந்த பாசுரம்.
திருப்பாவை பாடல் 7
கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேரரவம் கேட்லையோ? பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்
விளக்கம்
பொழுது விடிந்தது தெரியாமல் பேய் போல் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே, ஆனைச் சாத்தான் எனப்படும் வலியன் குருவிகள் ஆண், பெண் என இணையாக தங்களுக்குள் கீசுகீசு என்று இன்பமாய் பேசும் சத்தம் உன் காதில் கேட்கவில்லையா?.
நறுமணம் பொருந்திய மலர்களைச் சூடியுள்ள ஆயர்குலப் பெண்கள் தங்களின் அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் அசைந்து ஒலி உண்டாக்கும்படி தயிர் கடையும் பெரிய சத்தம் கேட்கவில்லையா?.
எங்களின் தலைவியே, உயிர்களுக்குள் நிறைந்துள்ள அழகிய வடிவினை உடையவன் நாராணயன்.
ஆயர்பாடியில் கண்ணனாக வளர்ந்தபோது தன்னைக் கொல்ல வந்த, கேசி என்ற அரக்கனை அழித்ததால் கேசவன் என்ற பெயரினைக் கொண்டான்.
அத்தகையவன் புகழினை நாங்கள் பாடி வருவதை நீ காதால் கேட்டும், கேளாதாதது போல் படுக்கையில் விழுந்து கிடக்கிறாயே, இச்செயல் உனக்கு அழகு அல்ல, ஆதலால் விரைந்து கதவைத் திறப்பாயாக.
கேசவன் என்ற சொல்லுக்கு அளவிடப்பட முடியாதவன், வாயால் விவரிக்கப்பட முடியாதவன் என்பது பொருள் ஆகும்.
உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது; ஆனால் தங்கள் தலைவி உறங்கிக் கொண்டிருக்கின்றாளே என்று பெண்கள் விரைந்து சென்று அவளை எழுப்புகின்றார்கள்.
இறைவனின் அருள் எங்கும் நிறைந்திருக்கின்ற போதிலும், அதை உணராது, அதை அடைய விரும்பாது, நமது மனம் இருள் சூழ்ந்து இருக்கின்றது.
அந்த இருளில் இருந்து நாம் எழுந்து வந்து இறைவனை நினைத்து விழிப்புணர்வு பெற வேண்டும்.
மறுமொழி இடவும்