கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்

கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம், சொக்கநாதர் நக்கீரருக்கு அகத்திய முனிவரைக் கொண்டு தமிழ் இலக்கணத்தை உபதேசித்ததைக் குறிப்பிடுகிறது.

கீரனின் சிவபக்தி, இறைவனார் நக்கீரருக்கு இலக்கணம் உபதேசிக்க எண்ணியது, இறைவனாரின் விருப்பப்படி அகத்திய முனிவர் நக்கீரருக்கு இலக்கணம் உபதேசித்தது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.

கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய் காண்டத்தில் ஐம்பத்து நான்காவது படலமாக அமைந்துள்ளது.

இறைவனாரின் விருப்பம்

இறைவனார் என்று தெரிந்தும், பாடல் பொருள் குற்றம் உடையது எனக் கூறிய நக்கீரரை இறைவனார் தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்தார்.

பின்னர் எல்லோருடைய வேண்டுதலின்படி, நக்கீரர் மீது அருளுள்ளம் கொண்டு பொற்றாமரைக் குளத்திலிருந்து எழுந்தருளச் செய்தார்.  நக்கீரர் இறைவனின் மீது பேரன்பு கொண்டு தினமும் உள்ளம் உருக வழிபட்டு வந்தார்.

இறைவனாரும் நக்கீரருக்கு இலக்கணம் இன்னும் சரியாக விளங்கவில்லை. ஆதலால் புலமைமிக்க ஒருவரைக் கொண்டு இலக்கணம் போதிக்க வேண்டும். யாரைக் கொண்டு இலக்கணம் போதிக்கலாம்? என்று சிந்திக்கலானார்.

இதனைக் கண்ட அங்கையற்கண்ணி அம்மை “ஐயனே, தங்களுடைய சிந்தனைக்கு விடைகூற எண்ணுகிறேன். முன்னொரு காலம் உலகில் உள்ள எல்லோரும், தேவர்களும், திருமால், பிரம்மா உள்ளிட்ட அனைவரும் தங்களை வழிபட கயிலாயத்திற்கு வருகை தந்தனர்.

இதனால் பூமியின் வடகிழக்குப் பகுதி தாழ்ந்தது. தென்மேற்குப் பகுதி உயர்ந்தது. அப்போது அகத்திய முனிவருக்கு தாங்கள் தமிழையும், இலக்கணத்தையும் முறையாக கற்றுத் தந்து தென்மேற்கு பகுதிக்குச் செல்லச் செய்து புவியை சமன் செய்தீர்கள்.

தற்போது அகத்திய முனிவர் தனது மனைவியான உலோபமுத்திரையுடன் பொதிகை மலையில் உள்ளார். அகத்தியரைக் கொண்டு நக்கீரருக்கு தமிழ் இலக்கணத்தை கற்பிக்கச் செய்யலாம்.” என்று கூறினார்.

அகத்தியர் இலக்கணத்தைக் கற்பித்தல்

இறைவனாரும் உள்ளம் மகிழ்ந்து தம் உள்ளத்தில் அகத்தியரை நினைத்தருளினார். இறைவனின் உள்ளக்குறிப்பை அறிந்ததும் அகத்தியர் தன் மனைவியுடன் மதுரைக்கு விரைந்து இறைவனாரை வழிபாடு செய்தார்.

அகத்தியரைக் கண்ட இறைவனார் “அருந்தவச் செல்வனே, நக்கீரனுக்கு தமிழ் இலக்கணம் கற்பிப்பாய்.” என்று பணிந்தருளினார்.

அகத்தியர் இறைவனை வணங்கினார். அங்கு வந்து தம்மை வணங்கிய‌ நக்கீரனுக்குத் தமிழ் இலக்கணம் முழுவதையும் பிழையின்றிக் கற்பித்தார்.

நக்கீரனும் ஐயம் இன்றிக் கற்றார். அகத்தியரின் திறமை கண்டு மகிழ்ந்த இறைவர் அவருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

தமிழ் இலக்கணத்தைக் குற்றமற்றுக் கற்ற நக்கீரர் முன்னர் தம்மால் பாடப்பட்ட நூல்களில் உள்ள குறைகளை எல்லாம் நீக்கிக் கொண்டார்.

இறைவனின் பெருங்கருணையை எண்ணிப் பெரிதும் மகிழ்ந்து “நான் அறியாமையால் தங்கள் பாடலுக்குச் சொல்லிய குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன்.” என்று வேண்டினார்.

பின்னர் நக்கீரர் அகத்தியரிடம் கற்ற இலக்கணத்தை மற்றைய புலவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து சொக்கநாதரின் திருவடிகளில் முதிர்ந்த பக்தியோடு இருந்தார்.

கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் கூறும் கருத்து

நமக்குத் தெரிந்த விசயங்களைத் தெரியாதவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் கீரனைக் கரையேற்றிய படலம்

அடுத்த படலம் சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.