கீரைவடை

கீரைவடை செய்வது எப்படி?

மழைகாலத்தின் மாலை நேரத்தில் காரசாரமாக‌ சாப்பிட்டா நல்லா இருக்கும் என நிறைய பேர் நினைப்பதுண்டு. கொஞ்சம் சுவையாகவும், அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் செய்து கொடுத்தால் செய்பவர்களுக்கும் சந்தோசம், சாப்பிடுவர்களும் உற்சாகம். சுவையான கீரைவடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு – 200 கிராம்

முருங்கை கீரை – 2 கைபிடி அளவு

சிறு பல் பூண்டு – 7 எண்ணம்

பெரிய வெங்காயம் – 2

சீரகம் – 1 ஸ்பூன்

பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்

மிளகாய்தூள் – 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

 

செய்முறை:

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். முருங்கைக்கீரையை சுத்தம் செய்து கழுவி பொடியாக அரிந்து கொள்ளவும். பூண்டை தோல் நீக்காமல் கழுவி நசுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.

ஊறிய கடலைப் பருப்பை தண்ணீர் சிறிதும் இன்றி வடித்துக் கொள்ளவும். பருப்பை மிக்ஸியில் அரைத்து கடைசியில் சீரகம், பெருஞ்சீரகம் சேர்த்து கடைசியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

இதை வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனோடு பொடியாக அரிந்த முருங்கைக்கீரை, நசுக்கிய பூண்டு, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். அனைத்தும் ஒன்று போல் சேர்ந்ததும் கடைசியில் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து படத்தில் காட்டியபடி கலந்து கொள்ளவும்.

வடைக்கலவை
வடைக்கலவை

வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பருப்புக் கலவையை படத்தில் காட்டியபடி உருண்டைகளாக உருட்ட வேண்டும்.

உருண்டையாக்கப்பட்ட வடைக்கலவை
உருண்டையாக்கப்பட்ட வடைக்கலவை

அதனை உள்ளங்கையில் வைத்து ஒரு அழுத்து அழுத்தி எண்ணெயில் போடவும். அழுத்தும் போது வடையின் மையப் பகுதியை அதிகமாக அழுத்தாமல் பார்த்துக் கொள்ளவும்.

கீரைவடையின் சிறப்பே நடுவில் மிருதுவாகவும் அதனைச் சுற்றி மொறுமொறுப்பாகவும் இருப்பதே ஆகும். வடை சுடும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்துச் சுடவும். நன்கு சிவந்தவுடன் எடுத்து விடவும். சுவையான கீரைவடை தயார்.

குறிப்பு:

கீரைவடை தயாரிக்கும் போது கீரை, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக அரிந்து பருப்புக் கலவையில் சேர்ப்பதால் வடை உதிராமல் வரும்.

முருங்கை கீரை கொண்டு தயாரிக்கப்படும் கீரைவடையில் முருங்கைக்கீரையின் கசப்பு சுவை சிறிதும் இருக்காது.

கீரை இல்லை என்றால் அதற்கு பதில் கருவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து வடை தயார் செய்யலாம். சுவையாகவே இருக்கும்.

– பிரதிபா செந்தில்