கீழா நெல்லி – மருத்துவ பயன்கள்

கீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப் பொருள் காண்ப்படுகின்றது. மேலும், தாவரம் முழுவதும் பொட்டாசியம் சத்து மிகுதியாக உள்ளது.

கீழா நெல்லி சிறுநீர் பெருக்கும்; விஷத்தை முறிக்கும்; இரத்த சோகையை குறைக்கும்; இரத்தத்தில் உள்ள நுண் கிருமிகளைக் கொல்லும்; பசி உண்டாக்கும்; காய்ச்சல் போக்கும்.

கீழா நெல்லி சிறு செடி வகையைச் சார்ந்தது. கீழா நெல்லி இலைகள், சிறியவை. கூட்டிலை வடிவமானவை. இரு வரிசையாக அமைந்தவை.

கீழா நெல்லி இலைகளைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய நடு நரம்பின் கீழ்ப் பாகம் முழுவதும் கீழ் நோக்கிய பசுமையான சிறு பூக்களும் காய்களும் தொகுப்பாகக் காணப்படும். இதனாலேயே         கீழாநெல்லி என்றப் பெயர் பெற்றது.

ஈரமான இடங்கள், வயல் வரப்புகள், பாழ் நிலங்களில் சாதாரணமாக காணப்படுகின்றது.  கீழ்க்காய் நெல்லி, கீழ் வாய் நெல்லி ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு.

கீழா நெல்லி முழுத் தாவரத்தையும் பசுமையாக சேகரித்து நன்கு சுத்தம் செய்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.  இதில் எலுமிச்சம் பழ அளவு ¼ லிட்டர் வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து குடித்து வர மஞ்சள் காமாலை, நீரழிவு நோய் குணமாகும்.  இந்தக் காலத்தில் உணவு கட்டுப்பாடு அவசியம்.

குறிப்பு: பசுமையான கீழாநெல்லி தினமும் கிடைக்கப் பெறாதவர்கள் செடியை காய வைத்து தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு ½ டீஸ்பூன் அளவு தேவையான அளவு மோரில் கலக்கி உட் கொண்டு வரலாம்.

கீழா நெல்லி வேரை அரைத்து பசும்பாலுடன் கலந்து, காலை, மாலை 3 நாட்கள் கொடுக்க உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும். விஷக் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை விலக்குவதற்கான மருந்தாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.

ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை நசுக்கி, அதனை இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலை இரு வேளைகளும் குடிக்க வெள்ளைபடுதல் தீரும்.

வயிற்றுப் புண் குணமாக ஒரு கைப்பிடி அளவு கீழா நெல்லி இலையை அரைத்து, 1 டம்ளர் மோரில் கரைத்து காலையில் குடித்து வரவேண்டும்.

தேவையான அளவு கீழா நெல்லி இலைகளை அரைத்து காயத்தின் மீது வைத்துக் கட்ட காயங்கள் குணமாகும்.

எலிக்கடி விஷம் குணமாக ஒரு பிடி கீழா நெல்லி இலைகளை எடுத்து 100 மிலி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி, காய்ச்சிய எண்ணெயை கடி வாயில் தடவ வேண்டும். காய்ச்சி வறுத்த இலையை உட் கொள்ள வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் காலை வேளைகளில் வெறும் வயிற்றில் இவ்வாறு சாப்பிட வேண்டும்.

கீழா நெல்லி இலையை, எலுமிச்சம் பழ அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும்.

நாட்டுப் புற மருத்துவ முறையில் கீழா நெல்லி வேரை வேப்பிலையுடன் கலந்து காய வைத்து தூளாக்கி, கருப்பை தொடர்பான பிரச்சனைகள் குணமாகவும் பெண் மலட்டுத் தன்மையை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் வீட்டு விலக்கு நாட்களில் கொடுக்கிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக நமது மருத்துவ முறைகளில் கீழா நெல்லி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் சமீப காலமாக பல வெளி நாடுகளில் கீழா நெல்லி மஞ்சள் காமாலைக்கான (ஹெப்படைடிஸ்) மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் கீழா நெல்லியிலிருந்து தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றன‌.

 

மேலா நெல்லி

மேலா நெல்லி சிறு செடி வகையைச் சார்ந்தது. மேலா நெல்லியில், இலைக் காம்பில் மலர்களும், காய்களும் மேற்புறமாக அடுக்கப்பட்டிருக்கும். மேலாநெல்லி மருத்துவத்தில் பயன்படுகிறது. தலைவலி, நீரேற்றம், தலைக் குத்தல் போன்றவற்றையும் குணமாக்கும். மலச்சிக்கலைப் போக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாக மேலாநெல்லி முழுச் செடியை ஒரு கைப்பிடி அளவு நசுக்கி 2 டம்ளர் நீரில் இட்டு, ஒரு டம்ளராக காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் 3 நாட்கள் இவ்வாறு செய்து வரவேண்டும்.