குங்கிலியக்கலய நாயனார் சாய்ந்திருந்த சிவலிங்கத் திருமேனியை தன்னுடைய அன்பு என்னும் பாசக்கயிற்றால் நேராக்கிய வேதியர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர்.
சிவனிடம் இவர் கொண்டிருந்த மாறாத பேரன்பினை அறிந்து கொள்ள இவருடைய வரலாற்றைத் தொடர்ந்து படியுங்கள்.
குங்கிலியக்கலய நாயனார் சோழ நாட்டில் அமைந்திருந்த திருக்கடவூர் என்னும் ஊரில் பிறந்தார். திருக்கடவூர் இன்றைக்கு திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது. இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
திருக்கடவூரில்தான் சிவபெருமான் தன்னுடைய பக்தனான மார்க்கண்டேயன் என்னும் சிறுவனைக் காக்க எமதர்மனை காலால் உதைத்து காலசம்கார மூர்த்தியாக வெளிப்பட்டார்.
திருக்கடவூரில் அருளும் அபிராமி அன்னை தன்னுடைய பக்தரான அபிராமிப் பட்டரைக் காப்பதற்காக அமாவாசை அன்று முழுநிலவைத் தோன்றச் செய்தார். அபிராமிப்பட்டர் இங்கு அருள்புரியும் அபிராமி அம்மைப் போற்றி புகழ்மிக்க அபிராமி அந்தாதியைப் பாடியுள்ளார்.
பெருமைமிக்க திருகடவூரில் தோன்றி வசித்து வந்த குங்கிலியக்கலய நாயனாரின் இயற்பெயர் கலயனார் என்பதாகும்.
இவர் திருக்கடவூரில் அருள்புரியும் அமிர்தக்கடேஸ்வரரின் மேல் பேரன்பு கொண்டு ,தினமும் குங்கிலியத்தால் தூபம் காட்டி வழிபாடு நடத்தி வருவதைத் தொண்டாகச் செய்து வந்தார். ஆதலால் இவரை எல்லோரும் குங்கிலியக் கலயனார் என்று அழைத்தனர்.
குங்கிலியம் என்பது சாம்பிராணியைப் போன்றே தணலில் இடப்படும் வாசனைப் பொருள். தணலில் குங்கிலியம் இடப்படும் போது அது நறுமணப் புகையை வெளியேற்றும்.
சிவபெருமான் குங்கிலியக்கலய நாயனாரை சோதிக்க எண்ணினார். ஆதலால் கலயனாரின் செல்வ வளம் குறையத் தொடங்கியது. கலயனார் தன்னுடைய உடைமைகளான நிலங்கள், கால்நடைகள், வீடு முதலியவற்றை விற்றார். எனினும் கலயனார் இறைவனை வழிபடும் குங்கிலிய தூப வழிபாட்டு முறையை மட்டும் நிறுத்தவில்லை.
காலப்போக்கில் அவருடைய செல்வவளம் முழுவதும் கரைந்தது. அவருடைய குழந்தைகள், மனைவியும் உண்ண ஆகாரமின்றி பட்டினி கிடந்தனர்.
குழந்தைகளின் நிலைமைக் கண்டு மனம் நொந்த மனைவியார், தன்னுடைய பொன்னாலான திருமாங்கல்யத்தை கணவரிடம் தந்தார். திருமாங்கல்யத்தை விற்று நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கி வருமாறு கூறினார்.
கலயனாரும் திருமாங்கல்யத்தைப் பெற்றுக் கொண்டு வீதியில் செல்கையில் ‘இன்றைய தூப வழிபாட்டிற்கு குங்கிலியம் இல்லையே என்ன செய்வது?’ என்று யோசித்துக் கொண்டே சென்றார்.
அப்போது வணிகன் ஒருவன் பொதிமூட்டை ஒன்றுடன் வந்தான். அவன் அருகே சென்ற கலயனார் பொதிமூட்டையில் என்ன பொருள் உள்ளது என்று விசாரித்தார். அது குங்கிலியப்பொதி என்று வணிகன் கூறியதும் பேரானந்தம் கொண்டார்.
பொன்னை கையில் கொடுத்து குங்கிலியத்தையும் அனுப்பி வைத்த இறைவனின் கருணையை எண்ணிப் பேரானந்தம் கொண்டார் கலயனார்.
அவர் பசியோடிருக்கும் குழந்தைகள், மனைவியையும் மறந்தார். மனைவி எதற்காக தன்னுடைய திருமாங்கல்யத்தைத் தந்து அனுப்பினார் என்பதையும் மறந்து, வணிகனிடம் பொன்னைப் பெற்றுக் கொண்டு குங்கிலியத்தை கொடுக்க வேண்டினார். வணிகனும் பொன்னைப் பெற்றுக் கொண்டு குங்கிலியத்தைக் கொடுத்தான்.
நேரே அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சேமிப்பறையில் குங்கிலியத்தைப் பத்திரப்படுத்தினார். கோவிலிலேயே தங்கிவிட்டார்.
கலயனாரின் மனைவி மற்றும் குழந்தைகள் அவரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். இரவுதான் வந்தது. கலயனார் இல்லம் திரும்பவில்லை. பசி மயக்கத்தால் குழந்தைகளும், மனைவியும் உறங்கினர்.
அப்போது இறைவனுடைய அருளால் அவ்வீட்டில் உணவுப்பொருட்களும், செல்வங்களும் குவிந்தன. இதனை கலயனாருடைய மனைவியின் கனவில் இறைவனார் தெரிவித்தார். கலயனாரின் மனைவி எழுந்ததும் இறைவனுடைய கருணையை எண்ணி வியந்தார்.
அதிகாலையில் உணவு தயாரிக்கும் பணியைத் தொடங்கினார். கலயனாரின் கனவில் தோன்றிய இறைவனார் ‘நீ உன் இல்லம் சென்று அறுசுவை உணவை உண்’ என்று கட்டளையிட்டார்.
இறைவனின் கட்டளையை ஏற்று கலயனார் தன் இல்லம் சென்றார். அங்கியிருந்த செல்வ வளங்கள் அனைத்தும் இறையருளால் கிடைத்தது என்பதை மனைவி மூலம் அறிந்ததும் பெரும் மகிழ்ச்சி கொண்டார்.
அதன்பின் கலயனாரும், மனைவியாரும் சிவனடியார்களுக்கு திருவமுது அளிக்கும் திருதொண்டையும், குங்கிலிய தூபத் திருத்தொண்டையும் தொடர்ந்து செய்து வந்தனர்.
பல வருடங்கள் கழித்து திருப்பனந்தாள் என்னும் திருக்கோயிலில் சிவலிங்கத் திருமேனி சாய்ந்திருந்தது. அதற்கு காரணம் தாடகை என்னும் சிவபக்தை. தாடகை தினமும் திருப்பனந்தாள் சிவபெருமானுக்கு மாலை அணிவித்து வழிபட்டு வந்தாள்.
ஒருநாள் தாடகை பெருமானுக்கு மாலை அணிவிக்கச் செல்கையில் அவளுடைய ஆடை சற்று தளர்ந்தது. அதனால் அவள் ஆடையை முழங்கைகளில் தாங்கியவாறு மாலை அணிவிக்க முயன்றாள்.
இறைவனார் தாடகையின் துயர் நீக்கி மாலையை வாங்கும் பொருட்டு தன்னுடைய திருமேனியைச் சாய்ந்தார். தாடகை எளிதாக மாலையை இறைவனுக்கு அணிவித்து வழிபட்டுச் சென்றாள்.
அன்றிலிருந்து இறைவனாரின் திருமேனி சாய்ந்திருந்தது. அப்போதைய சோழ மன்னன் திருப்பனந்தாள் கோவிலுக்கு திருப்பணிகள் செய்தான். சாய்ந்திருந்த லிங்கத் திருமேனியைக் கண்டதும் மன்னனுக்கு கவலை உண்டானது.
எப்படியாவது லிங்கத் திருமேனியை நேராகிவிட வேண்டும் என்று எண்ணினான். ஆதலால் இறைவனாரின் திருமேனியில் கயிற்றினைக் கட்டி யானையைக் கொண்டு இழுக்கச் செய்தான்.
சாய்ந்திருந்த லிங்கம் நேராகவில்லை. மாறாக யானை மயக்கமுற்று கீழே விழந்த து . லிங்கத் திருமேனியை நேராக்கும் மன்னனின் முயற்சி வீணானது. நடந்தவைகளைக் கேள்வியுற்ற குங்கிலியக்கலய நாயனார் திருப்பனந்தாள் சென்றார்.
குங்கிலியத் தூப வழிபாடு நடத்தினார். ஐந்தெழுத்தை உச்சரித்தபடி லிங்கத் திருமேனியில் பூமாலைச் சாற்றி மாலையின் முடிவில் கயிற்றினைக் கட்டி கயிற்றின் மறுமுனையை தன்னுடைய கழுத்தில் மாட்டிக் கொண்டு இழுத்தார்.
கலயனார் கட்டி இழுத்த அன்பு என்னும் பாசக்கயிற்றால் இறைவனார் மகிழ்ந்து தன்னுடைய திருமேனியை நேராக்கிக் கொண்டார். நடந்தவைகளைக் கண்டு கொண்டிருந்த சோழ மன்னன் ஆச்சர்யத்தில் கலயனாரை போற்றி வணங்கினான்.
திருமாலும், நான்முகனும் காண இயலாத இறைவனாரின் திருவடியை அடியார்களே காண இயலும் என்பதை நிரூபித்து விட்டீர்கள் என்று புகழ்ந்து கலயனாருக்கு நிறையப் பரிசளித்தான்.
அப்பரிசுகளைக் கொண்டு குங்கிலியக்கலய நாயனார் குங்கிலிய தூப வழிபாட்டையும், அடியார்களுக்கு திருவமுது செய்விக்கும் பணியையும் தொடர்ந்தார்.
ஒருசமயம் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருகடவூர் வந்திருந்தனர். ஆப்போது குங்கிலியக்கலய நாயனார் அவ்வடியார்களுக்கு திருவமுது செய்வித்து மகிழ்ந்தார்.
இவ்வாறு இறைவனாருக்கும், அவர்தம் அடியவர்களுக்கும் திருத்தொண்டுகள் பல புரிந்து குங்குலியக்கலய நாயனார் இறுதியில் சிவனடியை அடைந்து பெறும் பேறு பெற்றார்.
குங்குலியக்கலய நாயனார் குருபூஜை ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
சிவனுக்கும் அவர்தம் அடியவர்களுக்கும் தொண்டுகள் பல புரிந்த குங்கிலியக்கலய நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் என்று போற்றுகிறார்.
Super