குடிக்கும் மாணவர்கள்

குடிக்கும் மாணவர்கள்

படிக்கும் மாணவர்கள் இருக்க வேண்டிய வகுப்பறையில் குடிக்கும் மாணவர்கள் இருக்கின்றார்கள் என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம்.

கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல பள்ளி மாணவர்களும் குடிக்கின்றார்கள்; குடித்து விட்டு வகுப்புகளுக்கு வருகின்றார்கள் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

கட்டுப்பாடும் கல்வியும் ஒன்றாகப் பயணிக்க வேண்டுமென்ற கருத்து உடைந்து கொண்டிருக்கின்றது.

 

அவனுக்கு ஏற்படும் தீமைகள்

மக்களில் பெரும்பாலோர் குடிக்கும்போது மாணவர்கள் குடிப்பதில் என்ன தவறு? மாணவர்கள் குடித்தால் என்ன ஆகும்?

மாணவப் பருவத்திலேயே குடிக்க ஆரம்பிப்பவர்கள், மலரும் முன்பே கருகும் மொட்டுக்களாக மாறிவிட‌ நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

பள்ளிப் பருவத்தில் மாணவர்களின் உடல் முழு வளர்ச்சி பெற்றிருக்காது. அப்போது மது அருந்துவது உடல் நலனுக்குத் தீங்காகும்.

குடிப்பதில் உள்ள முக்கியமான விசயம் குடியை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றோமா என்பது.

நாம் விரும்பும்போது குடிக்கின்றோமா அல்லது மது நம்மை எப்போதும் கடையை நோக்கி இழுக்கின்றதா என்பது முக்கியம்.

நாம் விரும்பும்போது குடித்தால் குடி நமக்கு அடிமை.

தினமும் குடி நம்மை ஈர்த்தால் நாம் குடிக்கு அடிமை.

சிறு வயதில் நாம் குடிக்க‌ ஆரம்பித்தால் விரைவில் நாம் குடிக்கு அடிமையாகிவிட வாய்ப்பு உள்ளது. அப்படி ஆனால் குடி குடியைக் கெடுத்துவிடும்.

குடிக்கும் மாணவன் படிப்பில் ஆர்வம் இழந்து விடுவான். அவன் கல்லூரிப் படிப்பைத் தவற விடலாம். அவன் கல்லூரிக்குச் சென்றாலும் பாதியிலேயே வெளியேறலாம்.

நல்ல வேலைக்குச் சென்று நம் குடும்பத்திற்கு உதவுவான் என்ற பெற்றோர் கனவுகள் எல்லாம் நொறுங்கிவிடும்.

கொண்டாட்டம் என்று அறிமுகமாகும் குடி பெருந்துயரமாக‌ முடியும் என்று அவன் அனுபவப்பட்டு உணர்ந்து கொள்வான்.

 

சமூகத்திற்கு ஏற்படும் தீமைகள்

ஒரு குடிகார மாணவன் மற்ற மாணவர்களையும் குடிக்கு அறிமுகப்படுத்தலாம். ஒரு வகுப்பையே அல்லது ஒரு பள்ளியையே அவன் சீரழிக்கலாம்.

சில நாட்களுக்கு முன்பு ஆசிரிய‌ நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். “இப்போதெல்லாம் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளில் ஆசிரியைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே பெரும்பாடாக இருக்கின்றது” என்று அவர் சொன்னார்.

மாணவர்கள் மீது கட்டுப்பாடு கூடாது என்று ஒருபுறம் சமூகம் நெருக்குதல் கொடுக்கின்றது. மறுபுறம் மாணவர்களின் போக்கிரித்தனம் எல்லை மீறிக் கொண்டிருக்கின்றது.

என்னதான் வகுப்புகளில் ஒழுக்கம் பற்றி சொல்லிக் கொடுத்தாலும் சமூகம் அதற்கு எதிராகவே சொல்லிக் கொடுக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் ஆசிரியராக இருப்பது சவாலான விசயம் என்றே தோன்றுகின்றது.

பாதுகாப்பு பற்றி ஆசிரியர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டால் பாடத்தின் நிலைமை என்ன ஆகும். இதனால் குடிக்காத மாணவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள்.

குடிக்கும் மாணவர்கள் எளிதில் சாதி வெறியர்களாகவும் மாறி விடுகின்றார்கள். அவர்கள் எளிதில் சமூக விரோதிகளின் கைகளில் சிக்கி விடுகின்றார்கள்.

ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப் படுகிறது. குடிக்கும் மாணவனின் நாடு நாளை என்ன ஆகும்?

 

எப்படித் தடுப்பது?

முதலில் செயல்பட வேண்டியது பெற்றோர்.

தமக்குக் குடிப்பழக்கம் இருந்தாலும் தம் குழந்தைகள் அதற்கு அறிமுகமாகக் கூடாது என்ற விழிப்புணர்வு பெற்றோருக்கு வர வேண்டும்.

பிள்ளைகள் முன்பு குடிக்கக் கூடாது. அவர்களை மது வாங்கிவரச் சொல்லக் கூடாது.

தன் மகனுடைய பழக்க வழக்கங்களைக் கண்காணிக்க வேண்டும். தவறாகத் தெரிந்தால் கண்டிக்க வேண்டும்.

பள்ளியில் ஆசிரியர் தன் மகனைக் கண்டிப்பது அவனுடைய நல்லதுக்குத்தான் என்று உணர வேண்டும்.

 

இரண்டாவதாகச் செயல்பட வேண்டியது ஆசிரியர்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும். மதிப்பெண்களை விட ஒழுக்கம் முக்கியம் என உணர்ந்து செயல்பட வேண்டும்.

மாணவர்களை சாரணப் பணி, இலக்கிய மன்றம், நூலகப் படிப்பு என்று ஏதாவது ஒரு நல்ல வேலையில் மனதைத் திருப்பச் செய்ய வேண்டும்.

 

மூன்றாவதாகச் செயல்பட வேண்டியவர்கள் மதுக்கடை ஊழியர்கள். தயவுசெய்து மாணவர்களை வாடிக்கையாளர்களாகப் பார்க்காதீர்கள்.
சிறுவர்கள் மது வாங்க வந்தால் கொடுக்காதீர்கள்.அது உங்களுக்குப் பல தலைமுறை புண்ணியம் கொடுக்கும்.

 

நான்காவதாகச் செயல்பட வேண்டியது குடிகாரர்கள். குடிக்கும் ஒவ்வொருவரும், “நான் புதிதாகக் குடிக்கும் ஒருவரோடு சேர்ந்து குடிக்க மாட்டேன்” என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் சிறுவர்களுக்கு மதுவின் அறிமுகம் கிடைப்பது குறையும்.

 

ஐந்தாவதாகச் செயல்பட வேண்டியது அரசு. முடிந்தால் பள்ளிகளுக்கு அருகே இருக்கும் மதுக்கடைகளை அகற்றினால் நல்லது.

குடிக்க ஆரம்பித்த மாணவர்களை மீண்டும் படிக்கும் மாணவர்களாக மாற்றினால் வீட்டுக்கு, நாட்டுக்கு நல்லது.

– வ.முனீஸ்வரன்

 

 

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.