குடிப்பழக்கம்

அந்த காலத்தில் வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆண்டார்கள். அப்பொழுது அவர்களுடைய கலாச்சாரத்தின்படி மது அருந்தினார்கள்.

அவர்களுடைய நாடு குளிர் பிரதேசமாக இருந்ததால் குளிரில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, உடலை சற்று வெப்பப்படுத்தி வைத்துக் கொள்வதற்காக மதுவை ஒருமருந்தாக அருந்தினார்கள்.

இவ்வாறு கொஞ்சம் மது அருந்துவது உடல் நலத்திற்கு சிறந்ததாக அமைந்தது அந்த வெளிநாட்டு வாழ் வெள்ளைக்காரர்களுக்கு.

ஆனால் நம் நாட்டு மக்கள் அந்த மதுவை மருந்தாக அருந்தாமல் விருந்தாக அருந்துகின்றனர். தற்போது அன்றாட வாழ்க்கையில் தினமும் மது அருந்தாத மனிதன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடிப்பதற்கு எத்தனையோ வகையான சாராயங்கள் இருந்தாலும் ‘கள்’ என்பது அந்த காலத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டு விற்பனை செய்யாமல் இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நமது நாட்டில் நிறைய மதுபானக்கடைகள் இருப்பதால் பாமர மக்கள் அந்த மதுவை வாங்கிக் குடிக்கிறார்கள்.

“இன்பத்திற்காக குடிப்பவர் பலபேர்! ஆனால் துன்பத்திற்காக குடிப்பவர் சிலபேர்!”

ஏனென்றால் அவர்கள் செய்யக்கூடிய அந்த வேலைக்கு உடம்பு வலி அதிகமாக இருக்கும் என்பதால் மதுவை குடித்தால் அந்த வலி அவர்களுக்கு தெரியாமல் இருக்கும் என்று நினைத்து தினமும் குடித்து விட்டு வீட்டுக்குச் செல்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

இப்படி இந்த மதுவை குடிக்கும் ஆண்கள் பலவிதமான தவறான செயலில் ஈடுபட்டு தங்களின் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.

இன்று இந்த கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த பாதிப்பேர் கூலி தொழிலாளி என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

மதுபான கடைகளில் மது வாங்கி அருந்துவதற்கு போதிய பணம் இல்லாதால் குறைந்த விலைக்கு கிடைக்கிறதே! என்று அதனை வாங்கி குடித்துவிட்டு இப்படி மாண்டு மடிந்து விட்டார்கள்.

அவர்களின் குடும்பத்தார்கள் செய்வதறியாது நிற்கதியற்று நின்று கொண்டிருக்கிறார்கள். கள்ளச்சாராயத்தை குடித்தவர்களின் குடும்பங்கள் அவர்களின் நினைவுகளில் என்றுமே கண்ணீரோடு தான் இருக்கும்.

இலங்கையில் பனைமரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய கள் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

பனை மரம் ஏறும் கூலித் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பனை மரமும் பாதுகாக்கப்படுகிறது; பனைமரத்தை நம்பி வாழக்கூடிய கூலி தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆனால் நமது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இவ்வாறு செய்யவில்லை என்பது வேதனையை அளிக்கிறது.

எந்த ஒரு பழக்கமும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம்! அதிகமாக இருந்தால் இறைவனடி சேரலாம்!

ஆகையால் மது குடிப்பதை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம். ஒரு நல்ல மனிதனாய் இந்த உலகை விட்டு வீழ்வோம்!

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி:  9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com