குடும்பம் ஒரு கதம்பம் – கதை

“பிள்ளை இல்லாதவன் வீட்டில் கிழவன் துள்ளி குதித்து ஆட்டம் போட்டானாம் அப்படி இருக்கு உங்களுடைய கூத்து”

“ஏன் நான் என்ன செஞ்சுப்புட்டேன் இப்போ? எப்பவும் போல தான் இருக்கேன். வழக்கத்துக்கு மீறி கொஞ்சம் அதிக சந்தோஷமா இருக்கேன்.”

“..ம் …ம் …ம் .அது உங்கள பார்த்தாலே தெரியுது. கொஞ்சம் இல்ல ரொம்ப…”

“மல்லிகா இப்ப என்ன உனக்கு? நம்மளுக்கு என்ன புள்ள இல்லையா? குட்டி இல்லையா? நம்ப வாழ்க்கையில அந்த ஆண்டவன் எதுக்குமே குறை வைக்கல. நாம வாழற வாழ்க்கையை வாழும்போதே சந்தோசமா வாழ்ந்து புடனும்”

“நாம இவ்வளவு நாளும் சந்தோசமா தானே வாழ்ந்துட்டு இருக்கோம்”

“அதெல்லாம் ஒன்னும் இல்லடி நான் என்ன சொல்ல வரேன்னா”

“அதெல்லாம் நீங்க ஒன்னும் சொல்ல வேணாம். பழசையே நினைச்சுட்டு இருந்தா மனசுல குழப்பம் தான் மிஞ்சும்”

“சரி சரி வா … இப்படி காலாற பீச் பக்கம் போயிட்டு வருவோம். உன்கிட்ட ஒரு செய்தி சொல்லணும்.”

ராமனும் மல்லிகாவும் வீட்டை பூட்டி கொண்டு கிளம்பினர். அப்போது ‘டக் டக் டக்… டக் டக்… டக் ..டக்…’ என்றபடி வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது.

அதிலிருந்து ஒரு பெண் அழுது கொண்டு பெட்டியுடன் இறங்கினாள்.

“என்னங்க …அ..அது நம்ப மாலதி மாதிரி இருக்குது.”

“மங்கலம்… அது மாலதி மாதிரி இல்ல மாலதியே தான்.”

மாலதி அருகில் வந்தாள்.

“ஏம்மா என்ன ஆச்சு? ஏன் இப்படி வர? உன் புருஷன் கூட வரலையா? ஆமா புள்ளைங்கள எங்கே?”

“.ம் …அம்மா…நான் என்னத்த சொல்ல … உன் மருமகனோட தங்கச்சிக்கி … அதான் என்னோட நாத்தனாருக்கு… வளைகாப்பு வைக்கணுமா… பிரசவம் பார்க்கணுமா…

என்கிட்ட சல்லிக்கசு கூட இல்ல … உங்க அப்பாவுக்கு தான் பென்ஷன் பணம் வந்திருக்கு இல்ல … கேட்டு வாங்கிட்டு வா. இல்லன்னா கொஞ்சம் கடனவாச்சும் வாங்கிட்டு வான்னு சொல்லி அனுப்பி வச்சாருமா. …

நான் சொல்லிப்புட்டேன் ‘எங்க அப்பாவுக்கு பென்ஷன் பணம் வந்திருக்கிறது அவங்க கடைசி காலத்துல கஷ்டப்படாம வாழ்றதுக்குன்னு.

அதுக்கு அவரு ‘நான் உன்கிட்ட சும்மா கேட்கல … ஆபீஸ்ல லோன் கேட்டு இருக்கேன். கையில கிடைச்சதும் கொடுத்துறேன்னு சொன்னாரு.”

“சரி சரி உள்ள வாடி, வெளியில் நின்று ஒப்பாரி வைக்காத” என்றபடி கதவைத் திறந்தாள் மல்லிகா.

ராமன் டிவியை ஆன் செய்து சோபாவில் உட்கார்ந்தார்.

மாலதியும் மல்லிகாவும் அடுக்களைக்குள் புகுந்தனர்.

சற்று நேரத்தில் டீயுடன் வெளிப்பட்டு ராமன் முன் அமர்ந்தனர்.

மல்லிகா ராமனின் கண்களை ஏறிட்டாள்.

ராமன் மாலதியை பார்த்து “நீ என்னம்மா சொன்ன? அவரு தங்கச்சியா. அவரு எப்போ இந்த வீட்டுக்கு மருமகனா வந்தாரோ அப்பவே அவர நான் மகனா தான் பார்க்கிறேன்.

அவருக்கு தங்கச்சின்னா அது எனக்கும் மகள் இல்லையா! இதற்கு ஏன் இவ்வளவு தயக்கம்?

நீ முதல்ல அவருக்கு போன் செஞ்சு தேதி குறிக்க சொல்லு. எங்க வச்சுக்கலாம்? எப்படி வச்சுக்கலாம்? என்று பேச சொல்லு. அப்புறம் எங்கம்மா உன் குழந்தைங்க வரலையா?” என்று கேட்டார்.

“இல்லப்பா அவங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போய் இருக்காங்க.” என்றாள் மாலதி.

“அப்போ நீ உன் கணவர் கிட்டயும் சொல்லாம வந்துட்டே அப்படித்தானே?”

“இல்லப்பா நான் அவர்கிட்ட போன்ல சொல்லிட்டேன். அவரு குழந்தைகளை பாத்துக்குவாரு.”

“அதெல்லாம் சரிபட்டு வராது. குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்ததும் அம்மாவ காணாம தவிச்சு போயிடும். ஆயிரம் பேர் பார்த்தாலும் குழந்தைகளை தாய் கவனிப்பது போல வருமா?

நீ இனிமேலாவது தனியா ஊருக்கு வர்றத விட்டுடு. காலம் கெட்டு கிடக்கு. வீட்டுக்கு வந்தாலும் புருஷன் குழந்தை குடும்பத்தோடு தான் வரணும். தெரியுதா?”

“சரிங்கப்பா” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள் மாலதி.

ராமன் வாடகை டாக்ஸிக்கு போன் செய்து வரவைத்து மாலதியை அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

ராமனும் மல்லிகாவும் சிறிது நேரம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

“ஆமாங்க நாம பீச்சுக்கு கிளம்பறதுக்கு முன்னாடி உன்னிடம் ஒரு செய்தி பேசணும்னு சொன்னீங்களே என்னங்க அது?” என்று பேச்சை ஆரம்பித்தாள் மங்கலம்.

“அது ஒன்னும் இல்ல. நான் எனக்கு வந்த பென்ஷன் பணத்துல என்னென்னமோ திட்டம் போட்டு வைத்திருந்தேன். உன்னைய காசி ராமேஸ்வரம் கூட்டிட்டு போகணும்னு ஆசைப்பட்டேன்.”

“அதனால் என்னங்க! நீங்க என்னைய காசி ராமேஸ்வரம் கூட்டிட்டு போறதவிட மாலதிகிட்ட சொன்னீங்க பாத்தீங்களா ‘அதுகளும் என் பிள்ளைகள் தான். நான் வளைகாப்பு நடத்தி வைக்கிறேன்னு’ அதுவே எனக்கு போதுங்க. காசி ராமேஸ்வரம் போன புண்ணியம் எனக்கு கிடைத்துவிடும்” என்று சொல்லி நீர்த்ததும்பும் கண்களுடன் தன் கணவர் ராமனைப் பார்த்தாள் மல்லிகா.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.