நெருப்பை அள்ளிக் கொட்டினாற் போல் வெய்யில் தகித்துக் கொண்டிருக்கிறது.
வெயிலின் தாக்கத்தைப் பொருட்படுத்தாமல் கால் வயிற்றுக் கஞ்சிக்காக உழைக்கும் வர்க்கங்களைத் தவிர வேறு எவரும் அதிகமாக சாலையில் நடமாடியதாகத் தெரியவில்லை.
குளிர்பானக் கடைகளை ஒட்டுமொத்தமாக மக்கள் அனைவரும் குத்தகைக்கு எடுத்திருந்தனர். ‘குளிரக் குளிர ஒரு மழை பெய்யதா?’ என்கிற ஏக்கம் பெருமூச்சு வடிவில் ஒவ்வொருவரிடமும் காணப்பட்டது.
‘வெயில் காலங்களில் மழைக்காக ஏங்குவதும், மழைகாலங்களில் வெயிலுக்காக ஏங்குவதும் சகஜமாகிவிட்ட வாழ்க்கையில் மனிதன் நினைப்பது போல் எல்லாம் நடந்துவிடுமா என்ன? இயற்கையின் நியதி நம் இஷ்டத்திற்கு மாறிவிடுமா?’ பிரபாகர் இப்படித்தான் நினைத்துக் கொண்டான்.
படிக்கும் காலத்தில் ‘இப்படித்தான் வரவேண்டும்’ என எண்ணற்ற கனவுகளில் மூழ்கினாலும் பிற்காலத்தில் வேறுவிதமாக ஆகிவிடுகிறோம்.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் அநேகமாக இப்படித்தான் ஆகிவிடுகிறது. விரும்புகிறபடி எல்லாம் நடப்பதற்கு எவ்வளவு பிரம்மப் பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருக்கிறது?
இப்படியெல்லாம் பிரபாகர் நினைப்பதற்குக் காரணம் உண்டு. நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் அவனுக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை பத்து பதினைந்து வரன்கள் பார்த்தாயிற்று. எதுவும் அவ்வளவு திருப்திகரமாகப் படவில்லை பிரபாகரனுக்கு.
அவனைப் பொறுத்தமட்டில் ரதியை எதிர்பார்க்கவில்லை. காசு, பணம், நகை என்றெல்லாம்கூட எதிர்பார்க்கவில்லை. ஜாதி, மதம், இனம் போன்றவைகளைக் கூட உதறித் தள்ள தயாராயிருந்தான்.
இருப்பினும் அவனுடைய துரதிருஷ்டம், வருகிற வரன்கள் எல்லாம் தட்டிக் கொண்டே போகிறது. எதையுமே எதிர்பார்க்காமல் இருந்தாலும் அவனையறியாமல் உள்ளம் ஒரு தேடுதலில் ஈடுபட்டிருப்பதை உணர முடிந்தது.
தீவிர சிந்தனையோடு அலுவலகம் வந்து சேர்ந்தான் பிரபாகரன். இருக்கையில் அமர்ந்ததும் அவனது செக்சனிலேயே பணிபுரியும் உஷா பைல் ஒன்றை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி வந்தாள்.
ஒருவார காலம் விடுப்பில் இருந்தவள் இன்றுதான் வந்திருக்கிறாள். அவள் கையில் அழகான ஒருகுடை இருக்கவே,
“வெளியே எங்கேயாவது போறீயா உஷா?” எனக் கேட்டான் பிரபாகர்.
“இல்லை பிரபாகர், ரொம்ப நாளாய் கேட்டுக்கிட்டிருந்தீங்களேன்னு இந்தக் குடையை உங்களுக்காக வாங்கி வந்திருக்கிறேன்” என்றாள்.
உஷா கேரளா செல்லும்போதெல்லாம் அங்கிருந்து நல்ல குடை ஒன்றை வாங்கி வரும்படிக் கேட்டிருக்கிறான். இப்போது ஞாபகமாக வாங்கி வந்திருக்கிறாள்.
“என்ன விலை உஷா?”
“விலையைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை? பணம் எல்லாம் வேண்டாம்” என்று கூறி குடையை அவனிடம் கொடுத்துவிட்டு தன் இருக்கைக்கு திரும்பினாள்.
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரபாகரன்.
உஷா, அமைதியானவள்; அடக்கமுடையவள்; வேலையில் திறமைசாலி; அலுவலகத்தில் அனைவரது பாராட்டுதல்களுக்கும் பாத்திரமானவள்; தாய், தந்தை இல்லை; சித்தப்பா குடும்பத்தினருடன் வசித்து வருபவள்; குணத்தில் பத்தரை மாற்றுத் தங்கம்; திருமண வயதில் இருப்பவள்.
மதிய உணவு இடைவேளையின் போது உஷாவும், பிரபாகரும் கேன்டீன் நோக்கிச் சென்றனர். உஷா தனது குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.
அப்பொழுதுதான் பிரபகாருக்கு அவள் வாங்கி வந்திருந்த குடையின் ஞாபகம் வந்தது.
“ஒருநிமிஷம் உஷா! நீ வாங்கி வந்த குடையை எடுத்துக்கிட்டு வர்றேன்” என்றவள் இருக்கைக்குச் சென்று அந்த புத்தம்புது அழகான குடையை எடுத்து வந்தான்; பிரித்தான்; உச்சி வெய்யிலுக்கு குடை நிழல் இதமாக இருந்தது.
கேன்டீனில் சாப்பிட்டு முடித்து மீண்டும் அலுவலகம் திரும்பும்முன் இயற்கை தன்னை மாற்றிக் கொண்டிருந்தது. வானத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. ‘ப்ளிச்’ என ஓர் மின்னல்; இடி முழக்கம்.
கண் மூடி கண் திறப்பதற்குள் பலத்த மழை.
கோடை மழை! சாலை முழுக்க வெள்ளம், குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. கேன்டீனை விட்டு வெளியே வந்தனர்.
குடையைப் பிரித்தான் பிரபாகர்.
தகித்துக் கொண்டிருந்த வெய்யிலுக்கு நிழல் தந்த அந்தக் குடை இப்போது மழை நீர் தலையில் விழாமல் அவனைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது.
உடலும் உள்ளமும் குளிர்ந்தது.
“உஷா!”
இதமாக அழைத்தான் பிரபாகர்.
“வெயிலுக்கு மழைக்கு எனக்குப் பாதுகாப்பாக இருக்க இக்குடையைத் தந்த நீ, வாழ்க்கையிலும் ஏன் பாதுகாப்பாக வரக் கூடாது?”
பிரபாகர் கேள்விக்கு உஷா பதிலேதும் கூறவில்லை. மாறாக முன்னால் நடந்து சென்றவள் தலை குனிந்தபடி அவன் அருகில் வந்து அவனோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.
பிரபாகரின் இடது கரத்தில் அவள் தந்த குடை இருக்க, அவனது வலது கரமோ உஷாவின் கரத்தைப் பிடித்தது. அவளும் எவ்வித மறுப்புமின்றி அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.
பிரபாகர் உள்ளம் தனது தேடுதல் வேட்டையை நிறுத்தியிருந்தது.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998