குடைமிளகாய்

குடைமிளகாய் சமையலில் அலங்காரத்திற்காகவும், ருசிக்காகவும் சேர்க்கப்படும் முக்கியமான காயாகும். இக்காயானது பெயரில் மிளகாயைக் கொண்டிருந்தாலும் காரமாக இருப்பதில்லை.

குடைமிளகாய் பச்சை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, கருநீலம் நிறங்களில் காணப்படுகிறது. தோற்றத்தாலும், வண்ணத்தாலும் இக்காய் பார்ப்பவர் கண்ணைக் கவர்ந்திழுக்கும்.

இக்காயினை உண்ணும்போதும் முறுமுறுப்பாக இருப்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன்னுடைய ரசிகர்களாக இக்காய் கொண்டுள்ளது.

குடைமிளகாயின் தாயகம் மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க பகுதிகளாகும். குடைமிளகாயானது 9000 ஆண்டுகளுக்கு முன்பே பயிர் செய்யப்பட்ட பெருமையினை உடையது.

அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய இடங்களில் தற்போது பணப்பயிராக குடைமிளகாய் பயிர் செய்யப்படுகிறது. சீனா உலகில் அதிகளவு குடைமிளகாயினை உற்பத்தி செய்கிறது.

குடைமிளகாயின் அறிவியல் பெயர் காப்சிகம் ஆன்னம் என்பதாகும். இது சோலானேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும்.

குடைமிளகாய் உலகில் பெரும்பாலான இடங்களில் பயிர் செய்யப்படுகிறது. இது பொதுவாக எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வளரும் இயல்பினை உடையது.

இக்காய் சதைப்பற்று மிகுந்தும் உள்ளே லேசான சதையுடன் விதைகளையும் கொண்டுள்ளது.

 

குடைமிளகாய் பூ
குடைமிளகாய் பூ

 

உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு பார்த்தால் இக்காய் மணி வடிவில் காணப்படுகிறது. எனவே இது பெல் பெப்பர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

குடைமிளகாய் காய வைத்து பொடியாக்கி பயன்படுத்தப்படுவதும் உண்டு. இப்பொடி பாப்ரிகா என்றழைக்கப்படுகிறது.

 

குடைமிளகாயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

குடைமிளகாயில் விட்டமின் ஏ, சி, இ, பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுக்கள் ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன.

விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்) ஆகியவையும் உள்ளன.

தாதுஉப்புக்களான கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.

மேலும் இதில் குறைந்த அளவு எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதம், அதிக அளவு நார்சத்து ஆகியவையும் காணப்படுகின்றன.

இக்காயில் பைட்டோநியூட்ரியன்களான பீட்டா கரோடீன்கள், ஆல்பா கரோடீன்கள், பீட்டா கிரிப்டோசாக்தின், லுடீன் ஸீக்ஸாக்தைன் போன்றவை உள்ளன.

 

குடைமிளகாயின் மருத்துவப் பண்புகள்

கண்கள் பாதுகாப்பிற்கு

குடைமிளகாயில் காணப்படும் லுடீன் ஸீக்ஸாக்தைன், பீட்டா கரோடீன்கள் மற்றும் ஆல்பா கரோடீன்கள் கண்களின் ரெடீனாவை பாதுகாத்து கண் நலனைப் பேணுகின்றன.

வயதோதிகத்தினால் ஏற்படும் கண்தசை அழற்சி நோய் மற்றும் கண்புரை நோய் ஆகியவை பார்வைத்திறனைக் குறைக்க வல்லவை.

எனவே குடைமிளகாயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண்களைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம்.

 

புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு பெற

குடைமிளகாயில் அதிக அளவு விட்டமின் சி, கரோடீனாய்டுகள் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்டுகள் அதிகளவு காணப்படுகின்றன.

உடலின் வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடே உடலில் புற்றுநோயைத் தோற்றுவிக்கின்றன.

ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடுகின்றன. மேலும் குடைமிளகாயில் காணப்படும் சல்பர் புற்றுநோய் ஏற்படுவதை தடைசெய்கிறது.

 

இதய நலத்திற்கு

சிவப்பு குடைமிளகாயில் காணப்படும் லைகோபீன்கள் இதய நலத்தை சிறந்த முறையில் பாதுகாக்கிறது.

பச்சை குடைமிளகாயில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் நார்சத்து காணப்படுகிறது.

குடைமிளகாயில் காணப்படும் விட்டமின் பி6 (பைரிடாக்ஸின்) மற்றும் ஃபோலேட்டுகள் இதய நோய்க்கு காரணமான ஹோமோசைஸ்டீன் அளவினைக் குறைக்கிறது.

மேலும் குடைமிளகாயில் காணப்படும் பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டம் நடைபெறக் காரணமாகிறது.

எனவே குடைமிளகாயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு இதய நலத்தைப் பேணலாம்.

 

வலுவான எலும்பினைப் பெற

குடைமிளகாயில் அதிகளவு காணப்படும் விட்டமின் சி-யானது மூட்டுகள் மற்றும் சரும இணைப்பிற்குத் தேவையான கொலாஜன்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது.

மேலும் இந்த கொலாஜன்கள் வாதம் மற்றும் வீக்கம் ஏற்படுவதையும் தடைசெய்கிறது.

மேலும் குடைமிளகாயில் காணப்படும் விட்டமின் கே-வானது எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துவதோடு சேதம் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

எனவே இக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து வலுவான எலும்பினைப் பெறலாம்.

 

உடல் எடை குறைப்பிற்கு

குடைமிளகாயில் கேப்சாய்சின் குறைந்த அளவில் காணப்படுகிறது. இதனால் இதய துடிப்பு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யாமல் உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.

இதனால் எரிசக்தி அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இக்காய் அதிகளவு நார்சத்தினைப் பெற்றுள்ளதால் இதனை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு உட்கொள்ளும் உணவின் அளவினைக் குறைக்கிறது.

மேலும் இக்காய் குறைந்த எரிசக்தியையும், அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளதால் இக்காயினை உண்டு ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்பினையை பெறலாம்.

 

சருமம் மற்றும் கேச பராமரிப்பிற்கு

குடைமிளகாயில் விட்டமின் இ அதிகளவு காணப்படுகிறது. விட்டமின் இ-யானது சருமத்தை புதிதாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

விட்டமின் இ வலுவான பளபளப்பான கேசத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

நிம்மதியான உறக்கத்திற்கு

குடைமிளகாயில் காணப்படும் விட்டமின் பி6(பைரிடாக்ஸின்) தூக்கத்திற்கு காரணமான மெலாட்டானின் உற்பத்தியினை ஊக்குவிக்கிறது.

இதனால் குடைமிளகாயினை உண்ணும்போது நாம் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தினைப் பெறலாம்.

 

குடைமிளகாயினை வாங்கும் முறை

குடைமிளகாய் ஆண்டு முழுவதும் கடைகளில் கிடைக்கும். கடையில் வாங்கும்போது புதிதாகவும், பளபளப்பான தோற்றத்துடன் விறைப்பாக கனமானதாக உள்ளவற்றை வாங்க வேண்டும்.

மேல் தோல் மெதுவாக காயங்களுடன் காய்ந்த தண்டினை கொண்டுள்ளவற்றை வாங்கக் கூடாது.

குளிர்பதனப் பெட்டியில் டப்பாவில் 3-4 நாட்கள் பாதுகாப்பாக வைத்து பயன்படுத்தலாம்.

குடைமிளகாயானது அப்படியேவோ சமைத்தோ பயன்படுத்தப்படுகிறது.

குடைமிளகாய் சாலட்டுகள், ஊறுகாய்கள், புலாவ், பாஸ்தா, பீட்ஸா, நூடுல்ஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

குடைமிளகாயினை சமைக்கும்போது அதிகநேரம் சமைக்கக் கூடாது. அதிக நேரம் சமைக்கும் குடைமிளகாயில் உள்ள சத்துக்கள் வீணாகிவிடும்.

மற்ற பொருட்கள்களுடன் குடைமிளகாயினை சமைக்கும்போது கடைசியில் சேர்த்தே சமைக்க வேண்டும்.

சத்துக்கள் நிறைந்த குடைமிளகாயினை அடிக்கடி உணவில் சேர்த்து உடல் நலம் பேணுவோம்.

-வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.