குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன்?

குதிரைக்கு கடிவாளம் போட்டு அதனை சவாரிக்குப் பயன்படுத்துகிறோம். அவ்வாறு குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன் தெரியுமா?

தெரிந்து கொள்ள இந்தப் பழங்கால சீனக்கதையைத் தொடர்ந்து படியுங்கள்.

சுதந்திரமான‌ குதிரை

பழங்காலத்தில் குதிரைகள் எல்லாம் மிகவும் சுதந்திரமாக திரிந்தன. அவற்றை மனிதர்கள் யாரும் தங்களுடைய பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதில்லை.

குதிரைகளுக்கு கடிவாளம் ஏதும் போடப்படவில்லை. அவைகள் நினைத்தவுடன் நினைத்த இடத்திற்கு செல்லும் சுதந்திரத்தைக் கொண்டிருந்தன.

அவ்வாறு சுதந்திரமாக இருந்த குதிரையில் ஒன்று ஒரு புல்வெளியில் வசித்து வந்தது. அக்குதிரை புல்வெளியை தனக்குச் சொந்தமாகக் கருதியது.

அப்புல்வெளியில் சுதந்திரமாக நினைத்த நேரத்தில் புற்களைத் தின்று துள்ளி விளையாடி மகிழ்ச்சியாக இருந்தது. வேறு எந்த ஒருவிலங்கும் புல்வெளியை நெருங்காதவாறு பார்த்துக் கொண்டது.

ஒருநாள் குதிரை புற்களை வயிறு நிறைய உண்டு விட்டு புல்வெளியில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது புள்ளிமான் ஒன்று புல்வெளிக்கு வழி தவறி வந்தது.

பரந்து விரிந்த புல்வெளியைக் கண்டதும் புள்ளிமானுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. புல்வெளியில் புற்களை வயிறுமுட்ட உண்டது. வயிறு நிறைந்ததும் புல்வெளியில் இங்கும் அங்கும் ஓடியது.

புள்ளிமான் ஓடியதால் உண்டான சத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த குதிரை கண் விழித்தது.

புள்ளிமானிடம் “நீ யார்? இப்புல்வெளிக்கு ஏன் வந்தாய்? இந்த இடம் எனக்கு சொந்தமானது. என்னுடைய அனுமதி இல்லாமல் நீ எப்படி இப்புல்வெளிக்குள் நுழையலாம்?” என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தது.

அதற்கு புள்ளிமான் மிகவும் சாதாரணமாக “நான் காட்டுப் பாதையில் தவறி இவ்விடத்திற்கு வந்து விட்டேன். இங்குள்ள புற்கள் என்னை உண்ணத் தூண்டின.

உண்ட மகிழ்ச்சியில் சிறிது விளையாடினேன். அவ்வளவுதான். இனி உன்னுடன் இணைந்து இப்புல்வெளியில் நானும் வசிக்கப் போகிறேன்.” என்றது.

புள்ளிமான் கூறியதைக் கேட்டதும் குதிரைக்கு கோபம் தாங்கவில்லை. எப்படியாவது புள்ளிமானை புல்வெளியில் இருந்து விரட்ட எண்ணியது. ஒருசில நாட்கள் சென்றன. குதிரையுடன் சேர்ந்து புள்ளிமானும் புல்வெளியிலேயே இருந்தது.

அடிமையான‌ குதிரை

ஒருநாள் மனிதன் ஒருவன் அப்புல்வெளிக்கு வந்தான். மனிதனைக் கண்டதும் எப்படியாவது மனிதனின் உதவியுடன் புள்ளிமானை விரட்ட குதிரை எண்ணியது.

குதிரை மனிதனிடம் “ஐயா, அதே புல்மேய்ந்து கொண்டிருக்கும் புள்ளிமான் கொழு கொழுவென வளர்ந்து உள்ளது. அதனைக் கொன்று உங்களுடைய பசியினைப் போக்கிக் கொள்ளுங்கள்.” என்றது.

மனிதன் “புள்ளிமான் வேகமாகத் துள்ளி ஓடும். ஆதலால் நீ எனக்கு உதவவேண்டும். முதலில் இந்த கடிவாளத்தை உன் வாயில் மாட்டிக் கொள். உன் முதுகில் அமர்ந்து மானை நெருங்கி அதன்மீது அம்பைச் செலுத்தி அதனை வீழ்த்தி உணவாக்குகிறேன்.” என்றான்.

“சரி” என்று குதிரையும் ஒப்புக்கொண்டது. குதிரையின் வாயில் மனிதன் கடிவாளத்தைப் பூட்டினான்.

அதுநாள்வரை கடிவாளம் என்றால் என்ன என்றே தெரியாது, சுதந்திரமாக வலம்வந்த குதிரையை மனிதன் தன்வசப்படுத்தி அதன்மீது ஏறி மானை வீழ்த்தினான்.

பின்னர் குதிரையை தன்னுடைய தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அடிமையாக்கிக் கொண்டான்.

அன்று முதல் மனிதன் கடிவாளத்தின் உதவியுடன் குதிரையைத் தன் போக்குவரத்து வசதிக்குப் பயன்படுத்திக் கொண்டான்.

குதிரையின் பழிவாங்கும் எண்ணம் அதனுடைய அழிவிற்கு வழிகோலியது என்பதை, குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன்? ஏன் என்ற கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

One Reply to “குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன்?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.