குதிரைவாலி அரிசி புலாவ் செய்வது எப்படி?

சுவையான குதிரைவாலி அரிசி புலாவ்

குதிரைவாலி அரிசி புலாவ் என்பது கலவை சாத வகைகளுள் ஒன்று. இதனுடைய சுவையும், மணமும் அலாதி. குதிரைவாலி அரிசி சிறுதானிய வகைகளுள் ஒன்று.

சத்துக்கள் நிறைந்த சிறுதானியத்தை இன்றைக்கு அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.

வாருங்கள் எளிமையான சுவையான குதிரைவாலி அரிசி புலாவ் செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

குதிரைவாலி அரிசி – 400 கிராம் (1 பங்கு)

முருங்கை பீன்ஸ் – 100 கிராம்

காரட் – 100 கிராம்

பச்சை பட்டாணி – 50 கிராம்

பட்டர் பீன்ஸ் – 50 கிராம்

பெரிய வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 3 எண்ணம்

தண்ணீர் – 800 மில்லி லிட்டர் (2 பங்கு)

உப்பு – தேவையான அளவு

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 3 இதழ்கள் (பெரியது)

மல்லி இலை – 5 கொத்து

தாளிக்க

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

பட்டை – சுண்டு விரல் அளவு

கிராம்பு – 3 எண்ணம்

ஏலக்காய் – 3 எண்ணம்

கறிவேப்பிலை – 2 கீற்று

நெய் – தேவையான அளவு

 

குதிரைவாலி அரிசி புலாவ் செய்முறை

முதலில் குதிரைவாலி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் தண்ணீரை வடித்து தனியே குதிரைவாலி அரிசியை எடுத்து வைக்கவும்.

 

ஊற வைத்த குதிரைவாலி அரிசி
ஊற வைத்த குதிரைவாலி அரிசி

 

முருங்கை பீன்ஸ், காரட், பெரிய வெங்காயம் ஆகியவற்றை சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக வெட்டவும்.

பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை தோலுரித்துக் கொள்ளவும்.

 

தேவையான காய்கறிகள்
தேவையான காய்கறிகள்

 

இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.

இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை மையாக அரைத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி கீறிக் கொள்ளவும்.

 

குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 

பெரிய வெங்காயம் சேர்த்ததும்
பெரிய வெங்காயம் சேர்த்ததும்

 

வெங்காயம் கால் பாகம் வதங்கியதும் அதனுடன் நறுக்கிய முருங்கை பீன்ஸ், காரட், பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ், கீறிய பச்சை மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

 

காய்கறிகளைச் சேர்த்து வதக்கும்போது
காய்கறிகளைச் சேர்த்து வதக்கும்போது

 

காய்கறிகள் வதங்கியதும் அதனுடன் அரைத்த இஞ்சி, வெள்ளைப் பூண்டு கலவையை சேர்த்து இரு நிமிடங்கள் வதக்கவும்.

 

இஞ்சி, பூண்டுக் கலவையைச் சேர்த்ததும்
இஞ்சி, பூண்டுக் கலவையைச் சேர்த்ததும்

 

பின் அதனுடன் இரண்டு பங்கு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

ஊற வைத்து வடித்த குதிரைவாலி அரிசி, தேவையான உப்பு, நறுக்கிய கொத்த மல்லி இலை ஆகியவற்றை கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.

 

தேவையான தண்ணீர், குதிரைவாலி அரிசியைச் சேர்த்ததும்
தேவையான தண்ணீர், குதிரைவாலி அரிசியைச் சேர்த்ததும்

 

பின்னர் கலவையை ஒரு சேரக் கிளறி குக்கரை மூடி விசில் போடவும்.

அடுப்பினை சிம்மில் வைக்கவும்.

ஐந்து நிமிடங்களில் அடுப்பினை அணைத்து விடவும். விசில் வரத் தேவையில்லை.

 

குக்கரைத் திறந்ததும்
குக்கரைத் திறந்ததும்

 

குக்கரின் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து புலாவை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான நெய் சேர்த்து ஒரு சேர கிளறவும்.

 

நெய் சேர்த்து கிளறும் போது
நெய் சேர்த்து கிளறும் போது

 

சுவையான குதிரைவாலி அரிசி புலாவ் தயார்.

 

சுவையான குதிரைவாலி அரிசி புலாவ்
சுவையான குதிரைவாலி அரிசி புலாவ்

 

இதனுடன் பொரித்த அப்பளம், தயிர் வெங்காயப் பச்சடி சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

சிறுதானியங்களை சமைக்கும் போது விரைவில் அடிப்பிடித்து விடும். அதனால் சரியான அளவு தண்ணீர் மற்றும் சரியான தீயின் அளவு ஆகியவை மிகவும் அவசியம்.

எனவேதான் குக்கரை மூடி அடுப்பினை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்களில் அடுப்பினை அணைத்து விடவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.