குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் என்ற பாசுரம் பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியான ஆண்டாள் அருளிய கொஞ்சும் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் பத்தொன்பதாவது பாசுரம் ஆகும்.
திருப்பாவை பாடல் 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனை ஏலும் பிரிவாற்றல் இல்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
விளக்கம்
பள்ளியறையில் குத்துவிளக்குகள் எரிகின்றன.
அங்கே யானைத் தந்தத்தால் ஆன கால்களை உடைய கட்டிலில் மென்மையான பஞ்சு, பட்டு, கம்பளி, மலர், தளிர் ஆகிய ஐவகைப் பொருட்களால் ஆகிய மென்மையான படுக்கை உள்ளது.
அப்படுக்கையில் மணம் வீசும் மலர்களை கொத்தாக அணிந்துள்ள திருமகளின் மார்பின் மீது சாய்ந்து படுத்து உறங்குகின்ற அகன்ற மார்பினை உடையவனே!
நீ வாய் திறந்து ஒரு சொல் சொல்ல வேண்டும்.
அழகான நீண்ட கண்களில் மைத்தீட்டிய நப்பினையாகிய திருமகளே, உன்னுடைய கணவனான கண்ணனை, நீ தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை; ஏன்?
ஒரு நொடிப் பொழுதும் கூட அவனை நீ பிரிந்திருக்க விரும்பவில்லையோ?
இவ்வாறு செய்வது உன் தகுதிக்கு அழகா?
மறுமொழி இடவும்