குப்பை நாற்றம் – அறிவியல் குறுங்கதை

அன்றோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. எனவே, ஆசிரியர்கள் நிதானமாக அவர்களுக்குள் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.

இன்னும் இரண்டு வாரகாலம் விடுமுறை இருந்ததால், அந்நாட்களது அலுவல்கள் குறித்தான கலந்துரையாடலாகவே அது அமைந்திருந்தது.

சிலர், உறவினர்கள் வீட்டுக்குச் செல்வது குறித்தும், சிலர் சுற்றுலாத் தளங்களுக்கு செல்வது குறித்ததுமான பேச்சுக்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

சில நண்பர்கள் அன்று இரவே தங்களது சொந்த ஊருக்கு பயணப்பட வேண்டியிருந்ததால், அவர்கள் விரைவாக அங்கிருந்து விடைபெற்றனர்.

மகிழ்ந்துரையாடல் தொடர்ந்த நிலையில், மணியோ 6.30-யை நெருங்கிக் கொண்டிருந்தது. எனவே பெரும்பாலானோர் அங்கிருந்த புறப்பட்டனர்.

அந்நிலையில், ஆசிரியர் வேதிவாசனும், கணிதநேசனும் அங்கிருந்து ஒன்றாகப் புறப்பட்டு வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தார்கள்.

வாகனத்திற்கு அருகில் சென்றவுடன், அதிலிருந்த இரண்டு தலைக்கவசத்தை எடுத்து ஒன்றை வேதிவாசனுக்குக் கொடுத்தார். அவர் வாங்கி அதை அணிந்திட, மற்றொன்றை கணிதநேசன் அணிந்து கொண்டார்.

இதற்குள் அமரும் இருக்கையை இரண்டு தட்டு தட்டிவிட்டு, அதில் இருவரும் அமர்ந்தனர். வாகனத்தை இயக்கினார் கணிதநேசன்.

சிறிது நேரத்தில்,”வேதி, இப்போ ரெஸ்டாரண்டுக்கு போயிட்டு, வீட்டுக்கு போகலாமா?”என கணிதநேசன் கேட்டார். “எதுக்கு?” என வேதிவாசன் கேட்க, “சாப்பிடத்தான்” என விரைந்து பதிலளித்தார் கணிதநேசன்.

“ஏன், வீட்ல சமைச்சிருப்பாங்கள?”என வேதி கேட்க, “வீட்ல யாரும் இல்ல, இன்னிக்கு காலைதான் ஊருக்கு புறப்பட்டு போனாங்க, இரண்டு நாளைக்கு முன்னமே சொன்னேனே” என்றார் கணி.

“ஆமாம், மறந்துட்டேன் கணி, மன்னிச்சுக்கோ” என்றார் வேதிவாசன். “அட பரவாயில்ல, சொல்லுங்க எங்க சாப்பிட போகலாம்” எனக் கேட்டார் கணிதநேசன்.

“அதெல்லாம் எங்கேயும் போக வேண்டாம், நேரா நம்ம வீட்டுக்கு போவோம். இன்னிக்கு இரவு நம்ம வீட்டுலதான் சாப்பிடுறீங்க” என்றார் வேதி.

“வேண்டாம் வேதி, அம்மாவுக்கு எதுக்கு தொந்தரவு” என கணி சொல்ல, “இதில் என்ன தொந்தரவு?” வண்டிய கொஞ்சம் ஓரங்கட்டுங்க, அம்மாவுக்கு தகவல் சொல்லிடுறேன்” என பணித்தார் வேதிவாசன்.

வேறுவழியின்றி அவரது வீட்டில் இரவு உணவு உண்பதற்கு இசைந்தார் கணிதநேசன். அதன் வெளிப்பாடாய், வேகத்தைக் குறைத்து சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தினார்.

அலைபேசியின் வழியாக அம்மாவிடம், “வீட்டுக்கு கணியும் வராப்பல, சாப்பாடு செஞ்சிடுங்கம்மா” என வேதிவாசன் கூற, “சரிடா, எங்க இருக்கீங்க?”என அம்மா கேட்க, “வந்துட்டு இருக்கோம், இன்னும் ஒருமணி நேரத்துல வீட்டுல இருப்போம்” என்றார் வேதி.

“சரிப்பா, பத்திரமா வாங்க” என்றார் அம்மா. சரியென்று அலைபேசியை அணைத்து விட்டு, “கிளம்புலாம்பா” என்றார் வேதிவாசன்.

குப்பை நாற்றம்

அங்கே குப்பை நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. துர்நாற்றத்தால் சற்று அவதியுற்றார் கணிதநேசன். “என்ன பயங்கர நாத்தமா இருக்கே!” என கைகுட்டையால் தனது மூக்கை மூடியவாறே கணிதநேசன் சொல்ல, வேதிவாசனும் துர்நாற்றத்தை உணர்ந்தார்.

“ஆமாம்” என்றபடி சுற்றும் முற்றும் பார்க்க, சற்று தொலைவில், ஒருகுப்பை தொட்டி இருந்தது. அதிலிருந்த குப்பையை வண்டியில் ஏற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தனர் துப்புரவாளர்கள்.

அவர்களைக் கண்டதும், “கொஞ்ச நேரங்கூட நம்மால இந்த நாத்தத்த சகிக்க முடியல, பாவம், இவங்க இதோடையே வேலை செய்யுறாங்க, எவ்வளவு கஷ்டம்?” என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார் கணிதநேசன்.

“ஆமாம் கணி”, என்று வேதிவாசனும் சொல்ல,  பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

சிறிது நேரத்தில் வேதிவாசனின் வீட்டை அடைந்தனர். வாகனச் சத்தத்தை உணர்ந்த அம்மா, வெளியே வந்து வாயிற்கதவை திறக்க, வேதியும், கணியும் உள்ளே நுழைந்தனர்.

“வாப்பா எப்படி இருக்க, வீட்டுல எல்லா சவுக்கியமா?” என அம்மா கணியை விசாரிக்க, “எல்லாம் நலம்மா, நீங்க எப்படி இருக்கீங்க?” என பதில் நலம் விசாரித்தார். நலம் என்றவாறே அவர்களை வரவேற்றார் அம்மா.

அப்பொழுது, அங்கு மூலையில் வைக்கப்பட்டிருந்த குப்பை மூட்டைகளை (சிறுபைகளில் அடைத்துக் கட்டப்பட்டிருந்த) பார்த்தவுடன் “இதெல்லாம் குப்பத்தொட்டியில போடறதுக்கா?” என வேதிவாசன் கேட்டார்.

“காலையில பார்த்துக்கலாம், வாங்க” என கூறிவிட்டு அடுப்பங்கரைக்கு அவசரமாக சென்றார் அம்மா.

கணிதநேசனோ, “நாம இந்த குப்பையை தொட்டியில போட்டுட்டு வரலாமே, எங்கிருக்கு தொட்டி?” என கேட்டார். “அடுத்த தெருமுனையிலதான் தொட்டி இருக்கு, சரிபோவாம்” என சொன்னார் வேதி.

இருவரும் குப்பைபைகளை எடுத்துக் கொண்டு நடந்து சென்றனர். ஒரு பெரிய குப்பை தொட்டி தெருவின் முனையில் வைக்கப்பட்டிருந்தது.

தொட்டி என்னவோ முழுமையும் நிரம்பவில்லைதான். எனினும், குப்பைகள் கீழேச் சிதறிக் கிடந்தன. யாரேனும், தொட்டியில் வீசாமல் கீழேயே குப்பைகளை வீசியிருக்கலாம்.

அருகில் சென்றவுடனே குப்பை நாற்றம் வீசியது; துர்நாற்றத்தின் வலிமையை இருவரும் உணர்ந்தனர். எப்படியோ கீழே சிதறிக் கிடந்த குப்பைகளைத் தாண்டி குப்பைத் தொட்டிக்குள் குப்பை பைகளை வீசிவிட்டு வீடு திரும்பினர்.

குப்பை நாற்றத்திற்கு காரணம் என்ன?

வரும்பொழுது, கணிதநேசனுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. அது என்னவெனில், குப்பையிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்திற்கு காரணம் என்ன? என்பதுவே.

இந்த கேள்வியை உடனே வேதிவாசனிடம் கேட்டார். அதற்குப் பதிலாக, “குப்பையின் நாற்றம் ஏற்பட‌ காரணம் கரிம வாயுக்கள்தான், குறிப்பா கந்தக மற்றும் நைட்ரஜன் கரிமச் சேர்ம வாயுக்கள்தான் முக்கிய காரணம்” என்றார் வேதிவாசன்.

“அப்படியா?, அதென்ன வாயுக்கள்?² என மேலும் கணிதநேசன் கேட்டார். அதற்கு, “ஹைட்ரஜன் சல்ஃபைடு, டை-மெத்தில்-சல்ஃபைடு, மீத்தேன் தையால் போன்ற கந்தக கரிமச் சேர்ம வாயுக்கள்” என்று பதிலுரைத்தார் வேதி.

மேலும் “ஹைட்ரஜன் சல்ஃபைடு அழுகிய முட்டையின் நாற்றத்தைக் கொண்டது எனவும், டை-மெத்தில் சல்ஃபைடு மற்றும் மீத்தேன் தையால் ஆகியன அழுகிய முட்டைக்கோஸ் நாற்றம் உடையது” என்றும் வேதிவாசன் பதிலளித்தார்.

மேலும், மீனின் மணமுடைய ட்ரை மெத்தில் அமீன் மற்றும் அம்மோனியா (கனிமச் சேர்மம்), புட்ரிசீன் (Putrescine), கதவரீன் (Cadaverine) போன்ற நைட்ரஜன் சேர்மங்களும் குப்பையின் துர்நாற்றத்திற்கு காரணமாக இருப்பதாகச் சொன்னார்.

அத்தோடு பியூட்டானிக் அமிலம் (butanoicacid), புரொப்பியோனிக் அமிலம் (propanoic acid) மற்றும் அசிட்டால்டிஹைடு (acetaldehyde) போன்ற சேர்மங்களும் துர்நாற்றத்திற்குக் காரணம் என்பதை விளக்கினார். இவற்றின் செறிவு அங்கிருக்கும் குப்பையின் தரத்தைப் பொறுத்தது என்பதையும் விளக்கினார்.

கூர்மையாக இவற்றை கேட்டுக் கொண்ட கணிதநேசன், “இந்த சேர்மங்கள் எப்படி உருவாகிறது?” என மேலும் தனது ஐயத்தை எழுப்பினார்.

“இதற்கு முக்கிய காரணம், நுண்ணியிரிகள்தான். ஆமாம், அவைதான் மட்கும் கழிவுகளை சிதைத்து துர்நாற்றமுடைய‌ சேர்மங்களா மாத்துது. அவை வாயு நிலையில் இருப்பதால எளிதா காற்றில் பரவுது” என்பதை சொன்னார் வேதிவாசன்.

“ஓ…ஓ..” என்றபடி கேட்டுக் கொண்டே வந்தார் கணிதநேசன். இதற்கிடையில் அவர்கள் இருவரும் வீட்டை அடைந்தனர்.

அம்மாவோ, “எங்கப்பா போனீங்க?” என கேட்க, “குப்பையை தொட்டியில் போட போயிருந்தோம்மா” என்றார் வேதி. “சரி, சாப்பாடு தயார், சீக்கிரம் வாங்க” என்று அழைத்தார் அம்மா.

இருவரும், கால் கைகளை சுத்தம் செய்து கொண்டு உண்பதற்காக தரையில் அமர்ந்தனர். சாப்பாடு எல்லாம் தயாராக இருந்தது. இருவருக்கும் உணவு பரிமாறினார் அம்மா.

பருப்பு சாம்பார், கறி, முட்டை வறுவல், என இலை முழுவதும் உணவு வகைகளால் நிரப்பினார். எதையோ எடுப்பதற்காக மீண்டும் சமையல் அறைக்கு சென்றார்.

கமகமக்கும் உணவின் நறுமணம் அந்த அறையில் முழுவதும் பரவியதோடு, வீட்டிற்கு வெளியேயும் சென்று கொண்டிருந்தது. கணி மற்றும் வேதி ஆகியோரின் மூக்கையும் நறுமணம் ஆட்கொண்டது.

“ஆஹா….என்ன அருமையான மணம்!, அம்மாவின் கைபக்குவமே தனிதான்” என்றார் கணிதநேசன். அதனை ஆமோதித்தார் வேதிவாசன்.

உடனே, “இந்த நறுமணத்திற்கும் வேதிச்சேர்மங்கள்தான் காரணமா? அப்படின்னா என்ன சேர்மங்கள் காரணமா இருக்குதுன்னு?” கேள்விகளை அடுக்கினார் கணிதநேசன்.

“பல சேர்மங்கள் காரணமா இருக்குது” என தொடங்கினார் வேதிவாசன். அதற்குள், அம்மா சமையல் அறையிலிருந்து தட்டில் மாம்பழ துண்டுகளுடன் அங்கே வந்தார்.

இருவருக்கும் மாம்பழங்களை வைத்துவிட்டு “இன்னும் சாப்பிடத் தொடங்கலயா? முதல்ல சாப்பிடுங்க” என சொன்னார் அம்மா. உடனே, அவர்கள் பேச்சை நிறுத்தி உணவை உண்ணத் தொடங்கினார்கள்.

முனைவர்.ஆர்.சுரேஷ்
சென்னை.
அலைபேசி: 9941091461

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.