குமரனின் ஆசையும் விளைவும் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

“குமரன் குமரன் எழுந்திருப்பா. இன்னிக்கி உன்னோட விடுதலை நாள். வா! உன்னைய ஜெயிலரையா கூப்பிடுறாரு” என்று ஒரு காவலாளி சொல்லி விட்டுப் போக, பரட்டை தலையும் முகத்தில் காடு போல் மண்டி இருந்த தாடியும் மீசையும் அவன் அழகை மறைத்திருந்தது.

36 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி கருத்த தேகத்துடன் காவலாளியை பின் தொடர்ந்தான். காலடி சத்தம் கேட்டதும் தன் இருக்கையில் அமர்ந்திருந்த ஜெயிலர் தலையை நிமிர்த்தினார்.

“வாப்பா குமரா! இன்னையோட உன்னோட தண்டனை காலம் முடிஞ்சிடுச்சு. உன்னுடைய உடமைகள் எல்லாம் சரியா இருக்குதான்னு பார்த்து எடுத்து வச்சுக்க. அப்புறம் இந்த பணத்தையும் வச்சுக்கோ. என்ன பாக்குற? இது உன்னுடைய பணம்தான். நீ உள்ள வர்றப்ப உன்னட்ட இருந்தது. காலப்போக்குல பணப்புழக்கம் மாறினதால உன் பணத்தை புதுசா மாத்தி கொடுத்து இருக்கேன்” என்றார்.

பணத்தை கையில் வாங்கிய குமரன் சூட்கேஸை திறந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு நன்றி சொல்லி வெளியே வந்தான்.

எல்லாம் புதிதாக மாறி இருந்தது. ‘எங்கு செல்வது?’ என்று தெரியவில்லை. சிறுகுடல் பெருங்குடல் ஏற, பசி வயிற்றைக் கிள்ளியது. உடல் பலகீனத்தால் தட்டு தடுமாறி நடக்க, எதிரே ஒரு ஹோட்டல் கண்ணில் பட்டது. உள்ளே சென்று கை கழுவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.

“என்ன சார் வேணும்? என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்டுக் கொண்டே டேபிளில் இலையை வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை மேலே வைத்தார் சர்வர்.

“நான்கு இட்லியும் ஒரு மெதுவடையும்”

சர்வர் இட்லி, வடை, சட்னி, சாம்பார் கொண்டு வந்து வைத்து சென்றார்.

குமரனும் அதை ஆர்வத்துடன் சாப்பிட்டு முடித்தான்.

சர்வர் பில்லைக் கொண்டு வந்து டேபிளின் மீது வைக்க, அதை எடுத்துப் பார்த்த குமரனுக்கு ‘பகீர்’ என்றது.

ஒரு இட்லி 15 ரூபாய் வீதம் நான்கு இட்லிக்கு 60 ரூபாயும், ஒரு மெதுவடை 20 ரூபாயும் என்று மொத்தம் 80 ரூபாய் என்று பில்லில் இருந்தது. அவன் சாப்பிட்ட இட்லிகள் எல்லாம் எங்கோ கரைந்தோடி விட்டிருந்தன.

‘என்ன அன்று நான் ஒரு ரூபாய்க்கு சாப்பிட்ட இட்லி இன்று 15 ரூபாயா! இரண்டு ரூபாய்க்கு சாப்பிட்ட வடை 20 ரூபாயா? காலம் எவ்வளவு வேகமாக மாறிவிட்டிருக்கு!’

விழிகளை விரித்தபடி அந்த பில்லையே பார்த்துக் கொண்டிருந்தவன், சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி எதுவும் சொல்லாமல் பில்லுக்கு பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தான். சாலையில் இறங்கி நடந்தான்.

சிறிது தூரம் நடந்ததும் அவனுக்கு களைப்பாக இருந்தது. ‘உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு’ என்பது போல அவனுக்கு களைப்பு ஏற்பட அப்படியே ஒரு மரத்தின் நிழலில் உட்கார்ந்தான்.

‘சிலுசிலு’வென்று காற்று வீசியது.

மரத்தின் அடியில் தன் சூட்கேஸை வைத்து அதன் மேல் சாய்ந்து கொண்டான். அவனுக்கு எதுவும் புரியவில்லை? ‘எங்கே செல்வது, இனி என்ன செய்வது?’ என்று கண்களை மூடினான்.

அவன் வாழ்க்கையில் சிதறிய சிந்தனை சிதறல்கள் ஒன்று கூடின.

மளிகைக்கடை வாசலில் ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவன் பார்ப்பதற்கு மேல் சட்டை இல்லாமல் ட்ராயரை எழுத்து இடுப்பில் கட்டியிருந்த கயிற்றியில் சொருகி கொண்டு ஒட்டிய வயிறு, இளைத்த உடம்பு, ஒழுகிய மூக்குமாக கடையில் இருந்த வறுக்கி டின்னையே வெறித்துப் பார்த்தபடி நின்று இருந்தான்.

மளிகை கடை கல்லாவில் உட்கார்ந்து இருந்த மஸ்தான்பாய், அவனை கவனித்துக் கொண்டிருந்தார்.

அவன் கவனம் எல்லாம் அந்த வறுக்கி டின்னில் இருந்ததே, தவிர வேறு எதையும் கவனிக்கவில்லை.

மஸ்தான்பாய் கையை அசைத்து அவணை உள்ளே அழைத்தார். அவன் உள்ளே வந்தான்.

“என்ன வேண்டும்?” என்று மஸ்தான்பாய் கேட்டார்.

அவன் வயிற்றைக் காட்டி “பசிக்குதுங்க” என்றான். அவனையும் அறியாமல் அவன் கண்கள் கலங்கின.

பாய் அவனை தன்னருகே உட்கார வைத்துவிட்டு கடை ஊழியரை அழைத்து
அவனுக்கும் சேர்த்து டீ வாங்கி வர சொன்னார்.

டீ வந்ததும் பெரிய டம்ளர் ஒன்றில் டீயை ஊற்றி கொடுத்துவிட்டு இரண்டு வறுக்கியை எடுத்து கையில் கொடுத்தார்.

“ஜோஹரான், ஜோஹரான்” என்று மனைவியை அழைத்தார் மஸ்தான்பாய்.

தொழுது கொண்டிருந்த மஸ்தான்பாயின் மனைவி தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே வந்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார் தன் கணவனைப் பார்த்து.

“அலைக்கும் சலாம்” என்றார் மஸ்தான்பாய்.

“தொழுதுட்டு இருந்தேன் அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. யாருங்க இந்த பையன்?”

“நம்ப உதவியை நாடி அல்லா அனுப்பி வச்சிருக்கான்”

“சரி வாங்க” என்று ஜோஹரான் கூறியதும் மூவரும் உள்ளே சென்றனர்.

தன் மனைவியிடம் நடந்தவைகளைக் கூறினார்.

பின்னர் “ஜோஹரான் முதல்ல இவனுக்கு இவங்க அண்ணன்களோட டிரஸ குமரனுக்கு கொடு. போய் குளிச்சிட்டு வரட்டும்.” என்றார்.

“என்ன குமரனா?” என்றார் ஜோஹரான் ஆச்சரியத்துடன்.

“ஆமாம் அவன் குமரனாகவே இருக்கட்டும். குமரா போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுப்பா” என்றபடி அங்கிருந்து நகர்ந்தார். குமரன் சாப்பிட்டதும் இருவரும் திரும்பவும் கடைக்கு சென்றனர்.

நாட்கள் நகர்ந்தன.

குமரன் கடை வேலைகளை வெகு சீக்கிரத்திலேயே கற்றுக் கொண்டான். பாய் குமரனையும் தன் பிள்ளைகளோடு பிள்ளையாகவே வளர்த்து வந்தார்.

இருந்தாலும் குமரனின் உழைப்பிற்கு தகுந்தவாறு மாதமாதம் ஒரு தொகையை அவன் பெயரில் வங்கி கணக்கில் செலுத்தி வந்தார்.

காலங்கள் உருண்டோடின.

மஸ்தான் பாயின் மகன்கள் வெளிநாட்டில் சொந்த தொழில் தொடங்கியிருந்தனர். குமரனும் வாலிபனாகி கட்டிளங்காளையாக வலம் வந்து கொண்டு இருந்தான் .

ஒரு நாள் குமரனுக்கு வினோத ஆசை ஏற்பட்டது. தானும் ஒருநாள் அண்ணன்கள் இருக்கும் வெளிநாட்டிற்கு சென்று சுற்றிப் பார்த்து வரவேண்டும் என்று.

மஸ்தான் பாயிடம் அவன் ஆசையை சொல்ல, பாயும் அவன் ஆசையை நிறைவேற்றி வைக்க எண்ணி ஏற்பாடு செய்து மகன்கள் இருக்கும் இடத்திற்கு குமரனை அனுப்பி வைத்தார்.

ஒரு வாரம் கழித்து மஸ்தான் பாய் கடையில் உட்கார்ந்து இருக்கையில், எதிரே உள்ள கடையிலிருந்து ஒருவர் பாயை பார்க்க வந்தார்.

மஸ்தான் பாயிடம் அவர் தன்னுடைய கடையை காலி செய்து விட்டு வெளியூர் செல்வதாகக் கூறினார்.

அப்போது மஸ்தான் பாய்க்கு ஒரு யோசனை தோன்றியது.

குமரனின் சம்பளம் என்று சிறுசிறு தொகையாக சேமித்து வைத்த பணம் இன்று ஒரு பெரிய தொகையாக இருந்தது. அதைக் கொண்டு கால்மிதி, பாய், தலையணை, பீரோ என்று பல பொருட்களை வாங்கி வைத்து ‘குமரன்’ என்ற பெயரில் அந்த கடையையும் சேர்த்து நடத்த ஆரம்பித்தார்.

கடை நன்றாக வளரத் தொடங்கியது.

குமரன் சுற்றுலா சென்று இருபது நாட்கள் ஆயின. தன் மகன்களிடம் தொடர்பு கொண்டு குமரன் பற்றி விசாரித்தார்.

அவர்கள் குமரன் சுற்றுலா முடித்துக் கொண்டு இரண்டு நாளைக்கு முன்னரே புறப்பட்டு விட்டான் என்று சொன்னார்கள்.

ஆனால் குமரன் வீடு வந்து சேரவில் லை. மஸ்தான் பாய் ஆட்களை அனுப்பி தன்னால் இயன்றவரை குமரனைத் தேடி அலைந்து ஓய்ந்து போனார்.

வருடங்கள் உருண்டன.

குமரனைப் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. இதற்கிடையில் குமரனின் கடையில் வியாபாரம் பல மடங்காக பெருகியது.

மரத்தடியில் படுத்திருந்த குமரன் கண் விழித்தான்.

‘செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து விட்டோம். இப்போது எங்கே செல்வது? யார் கண்ணிலும் படாமல் எங்கேயாவது சென்று செத்து விடுவோம்’ என்று எண்ணி நடக்கலானான்.

சிறிது தூரம் சென்றதும் அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ‘என்னை வளர்த்து ஆளாக்கிய மஸ்தான் பாயை எட்டி இருந்து ஒருமுறை பார்த்து விட்டு, அப்படியே எங்கேயாவது யாருக்கும் தெரியாமல் போய் செத்து விடுவோம்’ என்று எண்ணி ஊருக்கு கிளம்பினான்.

காலையில் பஸ்சை விட்டு இறங்கினான். 20 வருடங்களில் ஊரே தலைகீழாக மாறி இருந்தது. மஸ்தான் பாய் மளிகை கடை இருந்த இடத்தில் ‘மஸ்தான் பாய் சூப்பர் மார்க்கெட்’ இருந்தது.

அப்போது வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் வந்து கடையை திறந்தார். குமரன் உற்று பார்த்தான். வயது முதிர்ந்து போய் மஸ்தான் பாய் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருந்தார்.

மஸ்தான் பாய் ‘பக்கத்துக் கடை வாசலில் உட்கார்ந்து இருப்பது யார்? என்று நிமிர்ந்து பார்க்க, அவருக்கு பழகிய முகம் போல் இருந்தது.

‘யார் இவர்? எங்கோ பார்த்திருக்கோமே’ என்று குமரனின் அருகில் செல்ல, குமரன் கண்களில் நீர் சுரக்க உட்கார்ந்து இருந்தான்.

ஒருநொடியில் பாய்க்கு புரிந்து போயிற்று. மஸ்தான் பாய் குமரனை கட்டி தழுவி உள்ளே அழைத்து சென்றார்.

“என்ன காரியம் பண்ணிட்ட? எங்கப்பா போன இத்தனை நாள் உன்னை எங்கெல்லாம் தேடி அலைந்தேன் தெரியுமா? வெளிநாட்டில் இருந்து வந்தவன் நேர இங்கே வர வேண்டியதுதானே.

நீ ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியானது வரை பதிவாகி இருக்கிறது. அதன் பிறகு எங்கே போன? என்ன ஆனங்கிறது தெரியாம நான் ரொம்பவே கலங்கி போயிட்டேன்பா. உன்னிடம் நான் கடன் பட்டுட்டு என் ‘ஹச்’ கடமையைகூட நிறைவேற்ற முடியாமல் தவிச்சுக்கிட்டு இருக்கேன். வயசான காலத்துல என்ன இப்படி அல்லாட வச்சிட்டியே இது உனக்கே நாயமா?” எண்று கேட்டார் மஸ்தான்பாய்.

குமரனுக்கு கண்ணீரைத் தவிர வார்த்தைகள் எழவில்லை. கையெடுத்து கும்பிட்டான்.

“என்னைய மன்னிச்சிடுங்க. உங்களை என் தந்தையாக தான் நினைத்திருந்தேன். உங்களை வஞ்சிக்க வேண்டும் என்றோ பழிவாங்க வேண்டும் என்றோ ஒருநாளும் நான் நினைத்ததில்லை” என்று அழுதான்.

“அதெல்லாம் சரி குமரா! உன்னைய பத்தி எனக்கு தெரியாதா? ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியே வந்த நீ இத்தனை நாளா எங்க போன? என்ன ஆச்சு? முதல்ல நீ அதை சொல்லு”

“நீங்க என் மேல வச்ச நம்பிக்கைக்கு நான் அருகதையற்றவன். என்னைய விட்டுடுங்க எதுவும் கேட்காதீங்க. நான் உங்களுக்கு கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்துட்டேன்.”

“என்னப்பா சொல்ற? நான் வளர்த்த வளர்ப்பு ஒரு போதும் தப்பா போவாது. நீ உண்மைய சொல்லு”

குமரன் சொல்ல ஆரம்பித்தான்.

“நான் சுற்றிப் பார்த்துவிட்டு ஊருக்கு புறப்பட்டதும் அண்ணன் என்னைய பத்திரமா ஏர்ப்போர்ட்டில் கொண்டு வந்து அனுப்பி வச்சிட்டு போனாங்க. அப்போ ஒரு இடத்தில் நாலு பேர் தமிழ்ல பேசிகிட்டு இருந்தாங்க.

நான் அவர்களிடம் பேச்சு கொடுத்தேன். அவர்களும் ‘நம்ம ஊருக்கு பக்கத்துல உள்ள ஊர் பெயர்களை சொல்லி நாங்க அங்க போறோம். எங்களை அழைக்க கார் வரும். அதுல உன்னையும் கொண்டு விட்டுட்டு போறோம்’ என்று சொன்னார்கள்.

நானும் அதை நம்பி அவர்களுடனே வந்தேன். ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவுடன் அவர்கள் சொன்னது போலவே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. எல்லோரும் தங்கள் லக்கேஜை ஏற்றிக் கொண்டார்கள்.

எனக்கும் இடம் இருந்தது. ஏறிக்கொண்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல ஊரு வந்துரும் என்று ஆர்வத்துடன் இருந்தேன். கார் கிளம்பி ஒரு ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்று இருக்கும். பின்னாலேயே போலீஸ் ஜீப் ஒன்று வந்து வழி மறைத்து நின்றது.

என்னுடன் காரில் இருந்தவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு திசையாக ஓடி மறைந்து விட்டனர். எனக்கு என்ன செய்வது? என்ன நடக்கிறது? என்று எதுவும் புரியவில்லை. நான் மட்டும் அவர்களிடம் மாட்டிக் கொண்டேன்.

சிறிது நேரம் கழித்துத்தான் தெரிந்தது அவர்கள் கடத்தல்காரர்கள் என்று. என்னை கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தினார்கள். என்னை விசாரித்தார்கள். உங்களைப் பற்றி எதையும் சொல்லி உங்கள் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த என் மனம் விரும்பவில்லை. அதனால் மௌனம் சாதித்தேன்.

செய்யாத குற்றத்திற்கு எனக்கு தண்டனை கிடைத்தது. அனுபவித்தேன் இன்று வாலிபத்தை தொலைத்து விட்டேன். நான் மட்டும் அன்று பேச்சுக் கொடுக்கவில்லை என்றால் இந்த நிலை எனக்கு ஏற்பட்டிருக்காது.

இப்போது உங்கள் முன் குற்றவாளியாக நிற்கிறேன். அப்படியே எங்கேயாவது போய் செத்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் உங்கள் முகத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.

உங்களை பார்த்து விட்டேன். என்னை விட்டுடுங்க. நான் எங்கேயாவது போய்” என்று கூறிவிட்டு கிளம்பினான்.

அப்போது மஸ்தான்பாயின் குரல் கம்பீரத்துடன் ஒலித்தது.

“டேய் நில்லடா! எங்கேயாவது போறாராமே இவரு. போ உன்னைய வேணாம்னு சொல்லல. நான் பட்ட கடனை அடைச்சுடறேன். அதுக்கப்புறம் நீ எங்கேயாவது
போய்கோ” என்று சொல்லிவிட்டு கேசியர் கவுண்டருக்கு மேலே சுவற்றில் மாட்டி தொங்கிக் கொண்டிருந்த சாவியை கையில் எடுத்து குமரனிடம் கொடுத்தார்.

“இந்தா! என்ன பாக்குற? இத்தனை வருஷமா என்கிட்ட வேலை பார்த்தல. அந்த உன்னோட சம்பளம் தான் இன்னைக்கு உன்னோட சொத்தா உன் பேர்ல எதிர்ல நிக்குது. குளிச்சிட்டு போயி கடையை திறந்து கல்லாவுல உட்காரு” என்றார்.

கையில் சாவியை வாங்கிய குமரன் மஸ்தான்பாயின் காலில் விழுந்தான். மஸ்தான்பாய் குமரனை தூக்கி தன் தோளோடு அணைத்துக் கொண்டார்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.