ஆனந்தூர் என்ற ஊரில் உள்ள பள்ளியில், குமரன் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். குமரன் அவனுடைய வகுப்பில் மிகவும் குறும்புத்தனம் நிறைந்தவன். ஆனால் திறமைசாலி.
அவனுடைய வகுப்பாசிரியர் சண்முகம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், குமரன் துடுக்குத்தனத்தை நிறுத்தவில்லை.
குமரனுடைய பிறந்தநாள் மறுநாள் வரவிருந்தது.
பிறந்த நாளன்று தன்னுடைய வகுப்புத் தோழர்களுக்கு கொடுப்பதற்காக, முப்பந்தைந்து கேராமில்க் சாக்லேட்டுகள் வாங்கினான்.
பத்து சாக்லேட்டுகளின் கவரைப் பிரித்து, சாக்லேட் அளவில் சாக்பீசுகளை உள்ளே வைத்து, சாக்லேட் போல செய்து நல்ல சாக்லேட்டுகளுடன் கலந்து விட்டான்.
மறுநாள் பள்ளிக்குச் சென்ற குமரன், பிறந்தநாள் என்று கூறி வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தான்.
வகுப்பில் இருந்த முப்பந்தைந்து மாணவர்களில் இருபந்தைந்து பேருக்கு சாக்லேட்டும், பத்து பேருக்கு சாக்லேட்டுக்குப் பதில் சாக்லேட் அளவில் சாக்பீசும் இருந்தன.
குமரனின் செயல் பற்றி வகுப்பாசிரியரிடம் மாணவர்கள் புகார் கூறினர்.
குமரனை அழைத்த வகுப்பாசிரியர் சண்முகம் “என்ன குமரா, நீ பிறந்த நாளுக்கு கொடுத்த சாக்லேட்டுகளில் பத்து பேருக்கு சாக்லேட்டுக்குப் பதில் சாக்பீசுகள் இருந்தன என்று கூறுகிறார்களே, உண்மையா?” என்று கேட்டார்.
அதற்கு குமரன் “ஐயா, வேடிக்கைக்காக இவ்வாறு செய்தேன்.” என்றான்.
“நீ எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாயா? உன்னுடைய துடுக்குத்தனத்திற்கு அளவே இல்லையா?” என்று கேட்டார் ஆசிரியர்.
அதற்கு குமரன் “சிறிய தவறு தானே. அதற்கு இப்படி கோபித்துக் கொள்கிறீர்களே.” என்றான்.
அதனைக் கேட்டதும் சண்முகம் குமரனின் துடுக்குத்தனத்துக்கு சரியான பாடம் கற்பிக்க எண்ணினார்.
குமரனுக்கோ ஆசிரியரை மடக்கி விட்டதாக சின்ன சந்தோசம். சண்முகம் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்.
ஒருநாள் சண்முகம் குமரனை தன்னுடைய வீட்டிற்கு விருந்துண்ண அழைத்தார். குமரனும் விருந்துக்குச் சென்றான்.
வாழை இலையில் குமரனுக்கு பிடித்த லட்டு, கேரட் பொரியல், கத்தரிக்காய் -வாழைக்காய் அவியல், உருளைக்கிழங்கு வறுவல், அப்பளம், பாயாசம், ஊறுகாய், சாதம், சாம்பார் என்று விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டிருந்தது. குமரன் உணவு உண்ண அமர்ந்தான்.
அப்போது ஆசிரியர் சிறிதளவு மாட்டு சாணத்தை எடுத்து வந்து வாழை இலையின் ஓரத்தில் வைத்தார்.
இதனைக் கண்டதும் குமரன் முகம் சுளித்தான். “சிறிதளவு தானே; நீ உண்டு முடித்ததும் நான் சாணத்தை அகற்றி விடுகிறேன்.”என்றார்.
ஆசிரியரின் சிறிய தவறு, தனக்குப் பெரிய கஷ்டத்தைக் கொடுப்பதைக் குமரன் உணர்ந்தான். தன்னுடைய குறும்புகளும் இப்படித்தானே பிறருக்குக் கஷ்டத்தைக் கொடுக்கும் என நினைத்தான்.
உடனே குமரன் “ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். சிறிய தவறு தானே என்று எண்ணி, தொடர்ந்து குறும்புத்தனம் செய்து வந்தேன்.
நம்முடைய சிறிய தவறே மற்றவர்களுக்கு பெரிய மனவருத்தத்தைக் கொடுக்கும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இனிமேல் இவ்வாறான தவறுகளைச் செய்ய மாட்டேன்.” என்று கூறினான்.
தன்னுடைய மாணவனின் சொல்லைக் கேட்டதும் ஆசிரியர் மனமகிழ்ச்சி கொண்டு சிறப்பான விருந்து படைத்து குமரனை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
ஆகவே குழந்தைகளே! குறும்புத்தனத்தைக் குறைத்து, பிறரை மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்ச்சியாக வாழுங்கள்!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!