குறைத்து மதிப்பிடாதே என்பது யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை உணர்த்தும் அருமையான சிறுகதை.
பூங்காவனம் என்றொரு காட்டில் நிறைய மரங்கள் செடிகள் இருந்தன. அப்போது மழைகாலம் நிலவியது.
மழைகாலத்தின் இறுதியில் அக்காட்டில் இருந்த ரோஜா செடியில் அழகான சிவப்பு நிற ரோஜா பூத்தது. அந்த ரோஜாவின் அழகானது அங்கிருந்த மரம், செடி, கொடிகளை மிகவும் கவர்ந்தது.
வேங்கை மரம் ரோஜா செடியிடம் “நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உன்னை போன்று அழகான பூக்கள் என்னிடம் இல்லை” என்று ஏக்கத்துடன் கூறியது.
அதற்கு அருகிலிருந்த வேப்பமரம் “கவலைப்படாதே, ரோஜா அழகாக உள்ளது. நீயோ ஓங்கி உயர்ந்து வளர்ந்து உள்ளாய்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெருமை. எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பது இல்லை” என்று கூறியது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் ரோஜா செடியின் அருகில் இருந்த மற்ற செடி கொடிகள் ரோஜா செடியைப் புகழ்ந்ததால் ரோஜா செடிக்கு தற்பெருமை உண்டானது.
“என்னைவிட இந்த உலகில் அழகானவர் யாரும் இல்லை” எனத் தலைக்கனத்துடன் சூரியகாந்தியிடம் கூறியது.
சூரியகாந்தி “ரோஜா, நீ கூறுவது சரியல்ல. இந்த காட்டில் எல்லோருமே அழகுதான். அதில் நீயும் ஒன்று” என்று கூறியது.
உடனே ரோஜாசெடி சுற்றும்முற்றும் பார்த்தது. அப்போது உடல் முழுவதும் முட்களைக் கொண்ட கள்ளிச்செடி அதனுடைய கண்ணில் பட்டது.
“அங்கிருக்கும் கள்ளிச்செடியைப் பார். அது உடல் முழுவதும் முட்களைக் கொண்டு எவ்வளவு அவலட்சணமாக இருக்கிறது. இதையுமா அழகு என்கிறாய்?” என்று சூரியகாந்தியிடம் ரோஜா கேட்டது.
“உன்னிடம் கூடத்தான் முட்கள் இருக்கிறது. ஆதலால் எது அழகு என்பதை யாரும் வரையறுக்க கூறமுடியாது.” என்றது சூரியகாந்தி.
அதற்கு சோஜாச்செடி “உனக்கு என்மேல் பொறாமை. ஆதலால்தான் இப்படிக் கூறுகிறாய்” என்றது. பின்னர் கள்ளிச்செடியை மிகவும் கேவலமாகப் பேசியது.
ஆனால் கள்ளிச்செடி அதைப்பற்றி கவலைப்படாமல் “இறைவன் காரணமின்றி எந்த உயிரையும் படைப்பதில்லை.” என்று கூறியது.
மழைகாலம் முடிந்து கோடைகாலம் வந்தது. வெயில் சுட்டெரித்தது. தண்ணீர் இல்லாததால் எல்லா செடிகளும் வாடின. ரோஜா செடியும் வாடியது.
ஆனால் கள்ளிச்செடி மட்டும் வாடாமல் ‘தளதள’வென இருந்தது. ஒருநாள் அங்கு வந்த குருவிகள் சில கள்ளிச்செடி அருகே சென்று அதனைக் கொத்திக் கொண்டிருந்தன.
அதனைக் கண்ட ரோஜாசெடி சூரியகாந்தியிடம் “கள்ளிச்செடி மட்டும் எவ்வாறு ‘தளதள’வென இந்த வெயிலிலும் இருக்கிறது. மேலும் குருவிகள் ஏன் அதனைக் கொத்துகின்றன?” என்று கேட்டது.
அதற்கு சூரியகாந்தி “கள்ளிச்செடியின் சதைப்பிடிப்பான தண்டில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருப்பதால் அது ‘தளதள’வென அழகாக இருக்கிறது.
அத்தண்ணீர் சத்தினை எடுக்கத்தான் குருவிகள் கொத்துகின்றன. இப்போது இப்பறவைகளுக்கு கள்ளிச்செடி மட்டுமே அழகாகத் தெரியும்” என்றது.
நாம் எப்போதும் யாரையும் அவர்களின் வெளித்தோற்றத்தை வைத்து குறைத்து மதிப்பிடக் கூடாது. இதைத்தான் பெரியவர்கள் யாரையும் குறைத்து மதிப்பிடாதே என்றனர்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!