மதுரை, செல்லூர் திருவாப்பனூர் கோவில்.
சாமி தரிசனம் முடித்து வெளியில் வந்து அமர்ந்தாள் கோமளம். அப்போது கோமளித்தின் முன் அவள் தோழி மீனாட்சி அமர்ந்து இருந்தாள்.
கோமளம் , மீனாட்சி இருவரும் சிறு வயது முதல் தோழிகள். கோமளம் எப்பவுமே மீனாட்சியை நக்கலாக அல்லது மட்டம் தட்டி பேசுவது தான் வழக்கம்.
மீனாட்சி அதனை எப்போதும் பெரிதும் பொருட்படுத்துவது இல்லை. கோமளத்திற்கு அடுத்தவர்களிடம் இருக்கும் குறையை பேசி பேசி ஆனந்தம் அடையும் எண்ணம் உண்டு.
“என்ன மீனாட்சி, என்ன விசேசம் கோவிலுக்கு வந்திருக்க? “ என்று கோமளம் கேட்டாள்.
“இன்னைக்கு வெள்ளிக்கிழமை. அதான் கோவிலுக்கு வந்தேன். என் மகளும் மருமகனும் வரேன்னு சொன்னாங்க. அதான் உட்கார்ந்து இருக்கேன்!“ என்று மீனாட்சி கூறினாள்.
“உன் மக சத்யா வர்றாளா? பரவாயில்லை. நான் வந்தது நல்லதா போச்சு. அவள பார்த்து ரொம்ப நாள் ஆச்சு மீனாட்சி ! அவ என்ன பண்றா ? கல்யாணம் முடிஞ்சு ஏழெட்டு வருஷம் இருக்கும்ல!” என்று விசாரித்தாள் கோமளம்.
அடுத்து கோமளம் என்ன கேட்க போகிறாள் ? என்பது மீனாட்சிக்கு தெரிந்தது. அதனால் சலிப்பாய் பதில் சொன்னாள் மீனாட்சி.
“ஆமா , கல்யாணம் முடிஞ்சு ஏழு வருஷம் ஆச்சு. நல்லா அவ மாமியார் குடும்பதோட சந்தோசமா இருக்கா!“ என்று மீனாட்சி கூறினாள்.
“குழந்தை இருக்கா? குழந்தை பிறக்கல, தட்டி தட்டி போகுதுன்னு கேள்வி பட்டேன். ரொம்ப கவலையா இருந்துச்சு மீனாட்சி! நாம பார்த்து வளர்த்த பிள்ளைகளுக்கு நல்லது நடக்க மாட்டேங்குதுன்னு!” என்று கோமளம் பவ்யமாக கூறினாள்.
“குழந்தை இல்லை. ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு இருக்காங்க. அதான் இப்போ கோவிலுக்கு வர சொன்னேன். நம்ம திருவப்பனுர் சாமிய வேண்டிட்டு போங்கன்னு கூப்பிட்டேன். சக்தி வாய்ந்த சாமி, கேட்டதை தருவார்ல அதான் வர சொன்னேன்!“ என்று மீனாட்சி கூறினாள்.
“ஆமா, மீனாட்சி, நான் கேட்கிறேன்னு தப்பா நெனைக்காத.
மகளுக்கு பிரச்சனையா?
அல்லது மருமகனுக்கு பிரச்சனையா?
இல்ல; எனக்கு தெரிந்த டாக்டர் இருக்காங்க அதான் கேட்கிறேன்!“ என்று புரணி பேசும் விதமாய் விசாரித்தாள் கோமளம்.
“அதான் சொன்னேன்ல, ட்ரீட்மென்ட் பார்த்து கிட்டு இருக்காங்கன்னு , பயப்படும் படி குறை ஒன்னும் இல்லையாம் “ என்று கோவமாய் மீனாட்சி கூறினாள்.
“அதுக்கில்ல மீனாட்சி, இப்போ எல்லாம் மாப்பிள்ளை மேல குறை இருந்தாலும், அத அப்படியே பொண்ணுங்க மேல போட்டு விட்டு போயிருவாங்க. அதான் கேட்டேன். குறை ஒன்னும் இல்லைன்னா அப்புறம் ஏன் இன்னும் குழந்தை பிறக்கல?“ என்று கேள்வி எழுப்பினாள் கோமளம்.
“அது அவங்க பிரச்சன. கொஞ்ச நாள் ஜாலியா சுத்துவோம்னு நெனச்சிருக்கலாம்!“ என்று மீனாட்சி கூறினாள்.
“குழந்தை இல்லன்னா ஊர்ல ஒரு மாதிரி பேசுவாங்கல்ல? அதான் கேட்டேன்!” என்று கோமளம் சமாளித்தாள்.
“பேசுறவங்களுக்கு எல்லாம் பயந்தா, ஒன்னும் செய்யமுடியாது கோமளம். ஊர் வாய் நல்ல இருந்தாலும் பேசும், நல்லா இல்லைனாலும் பேசும். ஊர் வாயை பத்தி நீ பேசுற பாரு! “ நக்கலாக மீனாட்சி பேசினாள்.
உடனே சுதாரித்து கொண்டாள் கோமளம். நக்கலாக பேசும் மீனாட்சியை பேச்சில் அசிங்கப்படுத்த வேண்டும் என்று பேச்சை தொடர்ந்தாள் கோமளம்.
“நான் என்ன சொன்னேன் மீனாட்சி? உன் நல்லதுக்கு தான் கேட்டேன். குறை நம்மை சத்யா மேல இருக்கா? இல்ல உன் மருமகன் மீதா என்று கேட்டது தப்பா? நான் இருக்கிறத தான கேட்டேன். நீ என்னமோ மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுற, மீனாட்சி!“ என்று கோமளம் கூறினாள்.
கோமளம் பேச்சை விட மாட்டாள் என்பது தெரிந்து கொண்ட மீனாட்சி , பேச்சை மாற்றினாள்.
“அத விடு கோமளம், இவங்களுக்கு கல்யாணமாவது ஆய்ருச்சு.
உன் பொண்ணு கயல் என்ன பண்றாள்?
கயலுக்கு மாப்பிள்ளை அமைய மாட்டேங்குதே
நீயும் நாலு வருசமா பார்த்துட்டு இருக்கிற.
கயலுக்கு எதுவும் குறை இருக்கா?“
என்று நறுக்கென்று மீனாட்சி கேட்டதும், கோமளம் முகம் மாறியது.
கோமளம் பதில் பேசவில்லை. மீனாட்சி கேட்ட ‘கயலுக்கு குறை ஏதும் இருக்கா?’ என்ற கேள்வி கோமளத்திற்கு ‘நறுக்’கென்று முள் குத்தியது போல் இருந்தது.
சட்டென்று “சரி மீனாட்சி நான் கெளம்பிறேன்!“ என்று வாங்கி கட்டிகொண்டவளாய் கோமளம் அங்கிருந்து புறப்பட்டாள்.
‘கடவுளே ! நான் பேசுனது தப்பு தான், அவளோட பேச்ச நிப்பாட்ட வேற வழி தெரியல. அவ என்னை அசிங்கப்படுத்தி பேசுறா. அதோட வலி என்னான்னு அவளுக்கு புரிய வைக்க தான், கயலுக்கு ஏதும் குறையா என்று கேட்டேன்’ என்று மீனாட்சி கடவுளிடம் மன்னிப்பு கேட்டாள்.
மகளின் வருகைக்காக காத்திருந்தாள் மீனாட்சி.
குறை ஒன்றும் இல்லை என்ற மன பக்குவத்தில் வாழ கற்று கொள்ள வேண்டும். குறைகளை களைந்து அதனை நிறைகளாக மாற்றி நாமும் மகிழ்வோம், மற்றவர்களையும் மகிழ்விப்போம்.
மற்றவர் குறையில் சுகம் காண்பது மிக பெரிய தவறு. குறைகள் இல்லாத மனிதன் இல்லை. அதனை நிறைகளாக மாற்றி பழகுவோம்.

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!