குற்றாலம்

குற்றாலம் வாங்க

கொட்டும் அருவிச்சத்தம்

கொடைக்கானல் வரை எட்டும்

வட்டப் பாறையில

வானரங்கள் கூத்தாடும்

எட்டியந்த மலையேற

என்னென்னமோ செய்யத்தோனும்

வெட்ட வெளியிலுள்ள

விண்மீனா மாறத்தோனும்

குற்றாலம் வந்து போங்களேன் – விண்ணிலுள்ள

மீனெல்லாம் அள்ளிப் போங்களேன்

 

 

வானுயர மரங்களுண்டு

வண்ண வண்ண பூக்களுண்டு

தேனைப்போல சுவைதரும்

தித்திக்கிற பழங்களுண்டு

மானோட ஓட்டமுண்டு

மயிலோட ஆட்டமுண்டு

கானக்குயில் கூட்டம்

கச்சேரி செய்வதுண்டு

குற்றாலம் வந்து போங்களேன் – வந்து இந்த

குயிற்பாட்டை கேட்டுப் போங்களோன்

 

 

பாலருவி தேனருவி

பாஞ்சு ஓடும் நல்லருவி

ஆலமரத்தோரம்

அழகான புலியருவி

வாலை குமரியாட்டம்

வற்றாத ஐந்தருவி

தோளை தழுவி விழும்

தோதான சிற்றருவி

குற்றாலம் வந்து போங்களேன் – வந்து இந்த

குளிரெல்லாம் வாங்கிப் போங்களேன்

 

தூறலோட ஓடலாங்க

தென்றலோட பேசலாங்க

ஆற அமர இந்த

அழகெல்லாம் பார்க்க வாங்க

ஓரத்துல கோவிலில

ஓவியங்க ரசிக்கலாங்க

வேறென்ன வேணுங்க

வேதனைக நாம் மறக்க

குற்றாலம் வந்து போங்களேன் – வந்து உங்க

தொல்லையெல்லாம் தீர்ந்து போங்களேன்

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.