குலச்சிறை நாயனார் மதுரையில் சைவம் தழைக்க வித்திட்டவர். இவரை சுந்தரரும் ஒட்டக்கூத்தரும் பெருநம்பி என்று குறிப்பிடுகின்றனர்.
குலச்சிறை நாயனார் 63 நாயன்மார்கள் வரிசையில், இருபத்து ஒன்றாவது ஓராவது நாயன்மாராக சுந்தரரால் புகழப்படுகிறார்.
‘பெருநம்பி’ என்ற பட்டம் பாண்டிய மற்றும் சோழ நாடுகளில் சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
ஒட்டக்கூத்தர் தாம் இயற்றிய தக்கயாகப் பரணியில் குலச்சிறையாரை பெருநம்பி என்னும் பட்டம் உடையவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
குலச்சிறை நாயனார் பண்டைய பாண்டிய நாட்டில் மணல்மேல்குடி என்னும் ஊரில் அவதரித்தார். தற்போது மணல்மேல்குடி புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகே அமைந்துள்ளது.
குலச்சிறை நாயனார் சிவனார் மீது பேரன்பு கொண்டிருந்தார். ஆதலால் இயல்பாகவே அவருக்கு சிவனின் அடியார்களிடத்தும் அன்பு பெருகியது.
அவர் சிவனடியார்கள் எக்குலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்நிலையில் இருந்தாலும், அவர்களைக் கண்டதும், தரையில் வீழ்ந்து வணங்கி அன்பு செலுத்துவார்.
அதே போல் சிவனடியார்கள் தனித்து வந்தாலும் கூட்டமாக வந்தாலும், அவர்களுக்கு மனம் கோணாது திருவமுது செய்விப்பதைத் தொண்டாகக் கொண்டிருந்தார்.
பாண்டிய நாட்டின் அமைச்சர்
அவர் வாழ்ந்து வந்த காலத்தில் நின்றசீர் நெடுமாறப் பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்தான். அப்பாண்டிய மன்னன் சமண சமயத்தை தழுவி இருந்தான்.
‘மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே’ என்பதற்கு ஏற்ப, அந்நாட்டு மக்களும் சமண சமயத்தை தழுவி இருந்தார்கள்.
குலச்சிறையாரின் புத்திக் கூர்மை மற்றும் வேற்றுமை பாராது எல்லோரிடமும் அன்பு கொள்ளும் தன்மை ஆகியவை காரணமாக பாண்டிய மன்னன், சைவராகிய குலச்சிறையாரை தன்னுடைய தலைமை அமைச்சராக நியமித்திருந்தான்.
மன்னன் சமண சமயத்தை தழுவி இருந்ததால் சமண குருமார்களின் நிலைமை பாண்டிய நாட்டில் உயர்ந்து இருந்தது. ஆதலால் அந்நாட்டில் சைவ கோவில்களில் வழிபாடு இல்லாது போனதோடு, சைவர்கள் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
சைவ வழிபாட்டிற்கு இடையூறுகள் இருந்த போதும், முதலமைச்சர் குலச்சிறையாரும் பாண்டிமாதேவி மங்கையர்கரசியாரும் சிவவழிபாட்டை தவறாது கடைப்பிடித்து வந்தனர்.
ஆதலால் அவ்விருவரும் மீண்டும் பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தோங்க பேராவல் கொண்டிருந்தனர். அப்போது தேவார மூவருள் ஒருவரான திருஞானசம்பந்தர் திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் தங்கியிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதனை அறிந்ததும், பாண்டிமாதேவி பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க திருஞானசம்பந்தரின் உதவி மிகவும் அவசியம் என்பதை குலச்சிறையாருடன் கலந்தாலோசித்து, அவரை மதுரை அழைத்து வர ஏற்பாடுகள் செய்தார்.
செய்தவர்களையே சாரும்
திருஞானசம்பந்தரும் அவ்விருவரின் வேண்டுகோளை ஏற்று பாண்டிய நாட்டிற்கு புறப்பட்டார். மதுரையின் எல்லையில் ஞானசம்பந்தரை வரவேற்க குலச்சிறையார் சென்றார்.
சைவத்தை தழைக்கச் செய்ய வந்திருக்கும் திருஞானசம்பந்தரின் முத்துச்சிவிகையின் முன்னால் வீழ்ந்து வணங்கினார். திருஞானசம்பந்தரிடம் கொண்டிருந்த பேரன்பு காரணமாக கீழே வீழ்ந்த குலச்சிறையார் எழுந்திருக்கவே இல்லை.
அங்கிருந்தவர்கள் ஞானசம்பந்தரிடம் இதுபற்றி கூற, அவர் முத்துச் சிவிக்கையிலிருந்து கீழே இறங்கி குலச்சிறையாரை எழுப்பி ஆரத் தழுவித் தேற்றினார்.
திருஞான சம்பந்தரையும் அவருடைய அடியவர் கூட்டத்தையும் மதுரையில் பாதுகாப்பான இடத்தில் இருக்கச் செய்து, அவர்களுக்கு திருவமுது படைத்து வழிபட்டார் குலச்சிறையார்.
ஞானசம்பந்தரையும் அவருடைய கூட்டத்தினரையும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்திருந்த போதும், அவர்களுக்கு சமணர்களால் ஏதேனும் ஆபத்து வந்து விட்டுமோ என்ற எண்ணம் குலச்சிறையாரின் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
குலச்சிறையாரின் ஊகம் நடந்தேறியது. மதுரையில் சைவத்தைத் தழைக்கச் செய்ய திருஞானசம்பந்தர் வந்திருக்கிறார் என்பது தெரிந்த உடன் சமணர்கள் அவர் தங்கியிருந்த இடத்திற்கு தீ வைத்தனர்.
இறையருளால் அதிலிருந்து தப்பிய திருஞானசம்பந்தர் ‘இச்செயல் செய்தவர்களையே சாரும்‘ என்று கூறினார்.
மதுரையில் சைவம் தழைத்தது
மக்கள் செய்த பாவம் மன்னனைச் சென்றடையும் என்பதற்கேற்ப, சமணர்கள் வைத்த தீயானது பாண்டியனை வெப்பு நோயாகத் தாக்கியது.
பாண்டியனின் வெப்பு நோயைப் போக்க சமணர்கள் தீவிரமாக முயற்சி செய்த போதும் அவர்களால் வெப்பு நோயைக் குணமாக்க இயலவில்லை.
அப்போது மங்கையர்கரசியாரும், குலச்சிறையாரும் பாண்டியனின் வெப்பு நோயை போக்க திருஞானசம்பந்தரால் முடியும் என்பதை பாண்டியனுக்கு எடுத்து கூறினார்.
பாண்டியனும் தன்னுடைய வெப்பு நோயைப் போக்குமாறு திருஞானசம்பந்தருக்கு குலச்சிறையாரை அனுப்பி வேண்டுகோள் வைத்தான்.
குலச்சிறையாரும் திருஞானசம்பந்தரை அணுகி பாண்டியனின் வேண்டுகோளை எடுத்துக் கூறி ஞானசம்பந்தரை தக்க மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்து வந்தார்.
திருஞானசம்பந்தரும் மதுரை ஆலவாய் அண்ணலை வேண்டி, பதிகம் பாடி பாண்டியனின் வெப்பு நோயைப் போக்கினார்.
அதனைக் கண்டதும் சமணர்கள் ஞானசம்பந்தரிடம் அனல் வாதம் மற்றும் புனல் வாதத்தில் ஈடுபட்டனர்.
புனல் வாதத்தில் வைகையில் விட்ட ஞானசம்பந்தரின் பதிக்கத் திருஏடு ஆற்றினை எதிர்த்து திருவேடகத்தில் கரை ஏறியது. அவ்வேட்டை குலச்சிறை நாயனாரே எடுத்து வந்து மன்னனிடம் கொடுத்தார்.
சுரவாதம், அனல்வாதம், புனல்வாதம் ஆகியவற்றில் திருஞானசம்பந்தரிம் இறையருளால் சமணர்கள் தோல்வி அடைந்தனர். அதன்பின் நின்றசீர் நெடுமாறப் பாண்டியன் சைவ மதத்தைத் தழுவினான்.
தோல்வியுற்ற சமணர்களை மன்னின் ஆணைப்படி குலச்சிறையார் கழுமரத்தில் ஏற்றினார்.
சிறிது காலம் பாண்டிய நாட்டில் தங்கியிருந்த திருஞான சம்பந்தரை பாண்டிய நாட்டு சிவதலங்களுக்கு குலச்சிறை நாயனார் அழைத்துச் சென்று வழிபாடு நடத்தினார்.
திருஞானசம்பந்தர் சோழ நாட்டுக்கு திரும்பும் சமயத்தில் அவருடன் செல்ல குலச்சிறையார் விருப்பம் கொண்டார். ஆனால் திருஞானசம்பந்தர் அவரை பாண்டிய நாட்டில் தங்கி சைவத்தை மேலும் வளர்க்க கேட்டுக் கொண்டார்.
அதற்கு இணங்க பாண்டிய நாட்டில் தங்கிய குலச்சிறை நாயனார் சிவனடியார்கள் வழிபாட்டையும், சிவவழிபாட்டையும் மேற்கொண்டு இறுதியில் வீடுபேற்றினை அடைந்தார்.
குலச்சிறை நாயனார் குருபூஜை ஆவணி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
எவ்வித வேறுபாடும் பார்க்கமால் சிவனடியார்களைப் போற்றி வணங்கிய குலச்சிறை நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்’ என்று போற்றுகிறார்.
Comments
“குலச்சிறை நாயனார் – மதுரையில் சைவம் தழைக்க வித்திட்டவர்” மீது ஒரு மறுமொழி
[…] மங்கையர்கரசியாரும் அமைச்சரான குலச்சிறை நாயனாரும் 63 நாயன்மார்களில் […]