குலதெய்வம் போதும் எங்களுக்கு – நீ
கூப்பாடு போடாமல் தள்ளி நில்லு
விலையேதும் கிடையாது கோயிலுக்கு – கேட்ட
வரம் தர தடையேதும் கிடையாது (குலதெய்வம்)
வெட்ட வெளி பொட்டலே குடியிருப்பு – சாமிக்கு
வீச்சருவாளே துணையிருப்பு
கிட்ட வந்து நான் தொட்டாலும் – சாமி
தப்புனு சொன்னது கிடையாது (குலதெய்வம்)
எங்கூட வாழவும் தயங்காது – சாமி
வருவதும் போவதும் தெரியாது
தங்கிட கூரையும் கேட்காது – கோட்டை
சுவருக்குள் அடங்காது (குலதெய்வம்)
சிங்கம் போல சாமி சீறி வரும் – சோற்று
படையலில் மயங்கி விடும்
பொங்கல் வச்சு கொண்டாட – ஊரை
பொதுவாக வந்து நிற்க செய்யும் (குலதெய்வம்)
சடங்கு சம்பிரதாயம் தேவையில்லை – சாமிக்கு
ஏழை பணக்கார பேதமில்லை
இடம் பொருள் நேரம் சாமிக்கில்லை – நாங்க
எப்போதும் தேடிட ஓடிவரும் (குலதெய்வம்)
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942